ஆசிய விளையாட்டு விழா; முதல் முறை களமிறங்கும் இந்திய கிரிக்கெட் அணி

Asian Games 2023

306

சீனாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்க BCCI ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, இம்முறை ஆசிய விளையாட்டு விழா கிரிக்கெட்டில் ஆடவர் பிரிவில் இந்தியா A அணியும், மகளிர் பிரிவில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டு விழா சீனாவின் ஹாங்ஸூ நகரில் எதிர்வரும் செப்டம்பர் 23ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

ஏற்கனவே 2010 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாக்களில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணியை BCCI அனுப்பாமல் இருந்தது. இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே முன்கூட்டியே போட்டி அட்டவணைகள் தயாரிக்கப்பட்டிருந்ததால் ஆசிய விளையாட்டு விழா கிரிக்கெட்டை BCCI தொடர்ந்து தவிர்த்திருந்தது.

இதனிடையே, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் கிரிக்கெட்டும் ஒரு முக்கிய விளையாட்டாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், இதில் பங்கேற்க இந்திய அனுப்புவதற்கு BCCI முதலில் மறுப்பு தெரிவித்து இருந்தது.

எவ்வாறாயினும், மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற அபெக்ஸ் கவுன்சில் கூட்டத்தில், இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகளை பங்கேற்கச் செய்ய BCCI ஒப்புதல் அளித்துள்ளது.

இதனிடையே, ICC ஒருநாள் உலக்க கிண்ணத் தொடர் இந்தியாவில் ஒக்டேபார் மாதம் 5ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இதனால் ஆசிய விளையாட்டு விழாவிற்கு இரண்டாம் தர இந்திய அணியை அனுப்புவதற்கு BCCI தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான திட்டத்தில் இந்திய அணியின் அனுபவ வீரர் ஷிகர் தவான் இல்லாததால், அவர் தலைமையில் IPL மற்றும் அயர்லாந்துடனான தொடரில் ஆடுகின்ற வீரர்களைக் கொண்டு ஆசிய விளையாட்டு விழாவிற்கு வலுவான அணியொன்றை அனுப்ப BCCI முடிவு செய்துள்ளது.

அதேநேரத்தில், மகளிர் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான முழு வலிமை கொண்ட இந்திய அணி இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் முதல் தடவையாக பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<