மழை காரணமாக வெற்றி வாய்ப்பை இழந்த தோமியர் கல்லூரி

244
138th-Battle-of-the-Blues-final-day

புனித தோமியர் கல்லூரி ஆதிக்கம் செலுத்திய 138ஆவது நீல பெரும் சமரான ரோயல் மற்றும் தோமியர் கல்லூரிகளுக்கிடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டியானது மழை காரணமாக வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

4 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களை பெற்ற நிலையில் 3ஆவது நாள் ஆட்டத்தை ஆரம்பித்த புனித தோமியர் கல்லூரியானது அதிரடியாக ஆடியது. எனினும் அரை சதம் பெற்று காணப்பட்ட  சிதார ஹபுஹின்ன, ரோயல் கல்லூரி தலைவர் ஹெலித விதானகேவின் பந்துவீச்சில் இன்றைய நாளின் 2ஆம் ஓவரில் ஆட்டம் இழந்தார்.

புனித தோமியர் கல்லூரியின் தலைவரான ரொமேஷ் நல்லபெரும தமது பின் வரிசை வீரர்களுடன் இணைந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடி 130 பந்துகளில் 92 ஓட்டங்களை பெற்றார். தோமியர் கல்லூரியின் இஷேலா பெரேரா மற்றும் மந்தில விஜேரத்னவை ஹிமேஷ் ரத்நாயக்க LBW  மூலமாக ஆட்டமிழக்க செய்தார். நல்லபெருமவும் விதானகேயின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, தமது இன்னிங்ஸை 357 ஓட்டங்களை பெற்று இருந்த நிலையில்  தோமியர் கல்லூரி நிறுத்திக்கொண்டது.

மதிய போசணை இடைவேளைக்கு முன்னதாக இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாட களமிறங்கிய ரோயல் கல்லூரியானது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரோனுக ஜயவர்தன, தெவின் எரியாகமவின் பந்து வீச்சில் போல்ட் செய்யப்பட்டார்.  மேலும் சென்ற வருடத்தின் ஆட்ட நாயகனான பசிந்து சூரியபண்டாரவும் களன பெரேராவின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, மதிய உணவு இடைவேளையின் போது ரோயல் கல்லூரியானது 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து  காணப்பட்டது.

[rev_slider dfcc728]
.

மதிய உணவு இடைவேளையின் பின்னர் தோமியர் கல்லூரியானது போட்டியில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. தோமியர் கல்லூரியின் ஏரியாகம, ரோயல் கல்லூரியின் யுவின் ஹேரத் மற்றும் ஹெலித விதானகவை ஆட்டமிழக்க செய்தார். மேலும் இடது கை சுழற்பந்துவீச்சாளரான பவித் ரத்நாயக்க, கவிந்து மதுரங்கவை ஆட்டமிழக்க செய்ய, 61 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் ரோயல் கல்லூரி காணப்பட்டது.

15 வயதுடைய ரோயல் கல்லூரியின் தெவிந்து சேனாரத்ன மற்றும் ஆகான் விக்ரமசிங்க 6ஆவது விக்கெட்டுக்காக 68 ஓட்டங்களை இணைப்பாக பெற்று, ரோயல் கல்லூரியின் ஓட்ட எண்ணிக்கையை சற்று உயர்த்தினர். விக்ரமசிங்க சிறப்பாக துடுப்பெடுத்தாடி 31 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ரவிந்து கொடிதுவக்குவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

சேனாரத்ன அதிரடியாக துடுப்பெடுத்தாடி 2 சிக்ஸர்கள்  மற்றும் 6 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 50 ஓட்டங்களை பெற்றார். எனினும் அடுத்த பந்திலேயே களன பெரேராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நல்லபெரும லெக் ஸ்லிப் நிலையிலிருந்து அற்புதமான பிடியை எடுத்தார்.

தொடர்ந்து கனித் சந்தீபவும் ரத்நாயக்காவின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க ரோயல் கல்லூரி 8ஆவது விக்கெட்டை இழந்தது. எனினும் துரதிஷ்டம் தோமியர் அணியின் பக்கம் வீசியது. மழை காரணமாக பி.ப 3.35 மணிக்கு போட்டி இடைநிறுத்தப்பட்டது. மேலும் பி.ப 4.50 மணிக்கு போட்டி முடிவுற்றதாக நடுவார்களால் அறிவிக்கப்பட்டது. எனவே மீண்டும் ஒரு முறை டி.எஸ். சேனாநாயக்க கிண்ணமானது ரோயல் கல்லூரியிடமே கையளிக்கப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

ரோயல் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்): 255 (71.3) – கனித் சந்தீப 42, ஹிமேஷ் ராமநாயக்க 41, கவிந்து மதரசிங்க 38, பசிந்து சூரியபண்டார 35, ரோனுக்க ஜயவர்தன 32, கழன பெரேரா 5/47, பவித் ரத்னாயக்க 2/69

புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை (முதல் இன்னிங்ஸ்): 357/9 (93.1) – ரவிந்து கொடிதுவக்கு 98 , ரொமேஷ் நல்லப்பெரும 92 , ஹிமேஷ் ராமநாயக்க 4/103, மனுல பெரேரா 2/56

ரோயல் கல்லூரி, கொழும்பு (இரண்டாம் இன்னிங்ஸ்):154/8 (41.1) – ஆஹான் விக்ரமசிங்க 31, தெவிந்து சேனாரத்ன 50, தெவின் ஏரியாகம 3/46, பவித் ரத்நாயக்க 2/11, களன பெரேரா 2/60

  • போட்டியின் ஆட்டநாயகன் – ரொமேஷ் நல்லபெரும (புனித தோமியர் கல்லூரி)
  • சிறந்த பந்துவீச்சாளர் – களன பெரேரா (புனித தோமியர் கல்லூரி)
  • சிறந்த துடுப்பாட்ட வீரர் – ரவிந்து கொடிதுவக்கு (புனித தோமியர் கல்லூரி)
  • சிறந்த களத்தடுப்பாளர் – மந்தில விஜேரத்ன (புனித தோமியர் கல்லூரி)