நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரொஸ் டெய்லர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவை திரும்பப் பெற்றதுடன், பசிபிக் பெருங்கடல் தீவு நாடான சமோவா கிரிக்கெட் அணிக்காக விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரொஸ் டெய்லர் கடந்த 2022 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். நியூசிலாந்து அணிக்காக அவர் 112 டெஸ்ட், 236 ஒருநாள் மற்றும் 102 T20I போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் டெஸ்டில் 19 சதங்கள், 35 அரைச் சதங்களுடன் 7,683 ஓட்டங்களைக் குவித்துள்ள அவர், ஒருநாள் கிரிக்கெட்டில் 21 சதங்கள், 51 அரைச் சதங்களுடன் 8,607 ஓட்டங்களை எடுத்துள்ளார். இது தவிர, T20I கிரிக்கெட்டில் 7 அரைச் சதங்களுடன் 1,909 ஓட்டங்களையும் அவர் அடித்துள்ளார்.
அது மாத்திரமின்றி, நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 7683 ஓட்டங்களுடன் கேன் வில்லியம்சனுக்கு அடுத்தபடியாக ரொஸ் டெய்லர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பிக் பாஷ் லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராகப் பணியாற்றிய ரொஸ் டெய்லர், லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரிலும் விளையாடினார். மேலும் எம்.எல்.சி. தொடரில் சியாட்டில் ஆர்காஸ் அணியின் வர்த்தகநாம தூதுவராகவும் அவர் பங்கு வகித்து வருகிறார்.
இது இவ்வாறிருக்க, சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்றுள்ள ராஸ் டெய்லர், பசிபிக் பெருங்கடல் தீவு நாடான சமோவா கிரிக்கெட் அணிக்காக விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எனது ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறேன். மேலும், சமோவா அணிக்காக எனது கிரிக்கெட் பயணத்தை தொடரவுள்ளேன் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன். எனது பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் கிராமத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்கு ஒரு மகத்தான மரியாதை. கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்பவும், களத்தில் எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் நான் காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
- நியூசி. அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகும் கேரி ஸ்டெட்
- கமிந்துவின் அதிரடியில் இலங்கை அணிக்கு முதல் T20 போட்டியில் வெற்றி
- ஆகாஸின் சுழலின் உதவியுடன் இலங்கை இளையோர் அணிக்கு வெற்றி
ரொஸ் டெய்லர் சமோவா கிரிக்கெட் அணிக்காக விளையாட சர்வதேச கிரிக்கெட் பேரவையும் அனுமதி வழங்கியுள்ளது. கிரிக்கெட் விதிமுறைகளின் படி பொதுவாக எந்தவொரு நாட்டைச் சேர்ந்த வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தான் வேறு நாட்டிற்காக விளையாட அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி, ரொஸ் டெய்லர் கடந்த 2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து 3 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் அவருக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரொஸ் டெய்லரின் தாயார் சமோவாவைச் சேர்ந்தவர் என்பதாலும், அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, நியூசிலாந்து கிரிக்கெட்டில் இருந்தபோது தனது சமோவா பாரம்பரியத்தின் காரணமாக இனவெறி ரீதியான சில கருத்துக்களை எதிர்கொண்டதாக தனது சுயசரிதையில் டெய்லர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், அவர் தனது தாய்வழி நாட்டிற்காக விளையாட எடுத்திருக்கும் இந்த முடிவு, வெறும் கிரிக்கெட் சார்ந்த முடிவு என்பதைத் தாண்டி, தனது பாரம்பரியத்தின் மீதான பெருமையையும், அன்பையும் வெளிப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. டெய்லரின் இந்த புதிய அத்தியாயம், சமோவா கிரிக்கெட்டிற்கு ஒரு புதிய விடியலை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக் கிண்ண தகுதிச் சுற்றில் (ஆசியா–கிழக்கு ஆசியா பசுபிக்) சமோவா அணிக்காக ரொஸ் டெய்லர் விளையாடவுள்ளார். அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 8 ஆம் திகதி ஓமானுக்கு எதிரான போட்டி மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பிக்கவுள்ளார்.
இந்தத் தொடரில் வெற்றி பெறும் முதல் மூன்று அணிகள், 2026 இல் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறும். டெய்லரின் அனுபவமும், திறமையும் சமோவா போன்ற ஒரு வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அந்த அணியின் உலகக் கிண்ண கனவிற்கு வலு சேர்க்கும் ஒரு முக்கிய படியாக கருதப்படுகிறது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<