பயிற்றுவிப்பாளர் ரூமியின் அதிரடி முடிவு

531

கொழும்பு ஸாஹிரா கல்லூரி கால்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் மொஹமட் ரூமி, றோயல் கல்லூரி கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்க நெருங்கி இருப்பதாக ThePapare.comக்கு நம்பகமான வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.  

ஸாஹிரா கல்லூரி அண்மைக் காலங்களில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் கிண்ணங்களை வென்று ‘கால்பந்தின் மன்னர்கள்’ என்று பட்டம் சூட்டப்பட்டபோதும் அந்த கல்லூரியின் பழைய மாணவரான ரூமிக்கு அதற்கான பாராட்டுகள் அல்லது முக்கியத்துவம் வழங்காதது குறித்து அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

10 வீரர்களுடன் ஹமீத் அல் ஹுசைனியை வீழ்த்தியது ஸாஹிரா கல்லூரி

ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய கொழும்பு …….

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஷோக ரவீந்திரவின் பயிற்சியின் கீழ் செயற்படும் றோயல் கல்லூரி 2015இல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலைகள் கால்பந்து தொடரின் பிரிவு இரண்டில் வெற்றிபெற்று முதலாம் பிரிவுக்கு முன்னேற்றம் கண்டது.

எனினும் நொக் அவுட் போட்டிகளுக்கு முன்னேறாமல் இரு பருவங்களில் சாதாரண திறமையை வெளிப்படத்திய றோயல் கல்லூரி முதல் நிலை பிரிவில் நீடித்து வருகிறது.

தற்பொழுது நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான பிரிவு ஒன்றுக்கான தொடரில் குழு நிலையில் 2 ஆவது இடத்தை பிடித்த ஸாஹிரா கல்லூரி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. எனினும் அந்த அணி பயிற்சியாளர் ஒருவர் இன்றியே அடுத்த சுற்றான காலிறுதிச் சுற்றில் விடப்பட்டுள்ளது.

திட்டங்களை வகுப்பதில் கைதேர்ந்த பயிற்சியாளராக கருதப்படும் ரூமி, டயலொக் சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை கொழும்பு கால்பந்து கழகம் அடுத்தடுத்து இரண்டு தடவைகள் வெல்ல (மூன்றாவது கிண்ணத்தை வெல்ல அந்த அணி போராடுகிறது) அந்த அணியை வழிநடாத்தி சிறந்த பயிற்சியாளராக பெயர் பெற்றவராவார். அவர் தேசிய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளவர் என கருதப்படுகின்ற ஒருவரும்கூட.

மொஹமட் ரூமி 2010 ஜனவரி மாதம் ஸாஹிரா கல்லூரியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார். அது தொடக்கம் 2014, 2016 இல் ”கொத்மலே சொக்ஸ்” 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலைகள் கால்பந்து சம்பியன்ஷிப், 2011, 2012, 2014 மற்றும் 2015இல் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளின் 19 வயதுக்கு உட்பட்ட கால்பந்து தொடரில் சம்பியன்ஷிப் மற்றும் 2011, 2015 மற்றும் 2014 இல் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவு ஒன்று பாடசாலை சம்பியன்ஷிப் உட்பட பல சம்பியன் பட்டங்களை அக்கல்லூரி அணி வென்றுள்ளது.

தற்போதைய இலங்கை அணி மற்றும் கழக மட்டத்தில் பிரகாசிக்கின்ற பல வீரர்களும் அவரின் வழிகாட்டலில் சோபித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.