இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்பும் ரிஷப் பாண்ட்

Bangladesh tour of India 2024

40
Rishabh Pant

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட T20i தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது செப்டம்பர் 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, இம்மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம். சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில் விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சர்ப்ராஸ் கான், சுப்மன் கில் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். அதேபோல, சுழல்பந்து வீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். 

இது தவிர, அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் வேகப்பந்து வீச்சைப் பலப்படுத்த மொஹமட் சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோருடன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணிக்காக விளையாடிய இடதுகை வேகப் பந்துவீச்சாளர் யாஸ் தயாள் முதல் முறையாக இந்திய அணிக்காக பெயரிடப்பட்டுள்ளார். மேலும், இத்தொடரில் ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா இப்போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார் 

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்கி திறமைகளை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு மீண்டும் திரும்பிய ரிஷப் பாண்ட் மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகின்ற துலீப் கிண்ண தொடரில் விக்கெட் காப்பு மற்றும் துடுப்பாட்டத்தால் பிரகாசித்த ரிஷப் பாண்ட்டிற்கு முதல் டெஸ்ட் போட்டிக்கான ;ந்திய அணியில் வாய்ப்பு வழங்க அந்நாட்டு தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் ரிஷப் பாண்ட் தனது கடைசி டெஸ்டையும் 2022இல் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடியிருந்தார். எனவே 21 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் அவர் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது 

அதேசமயம், இந்திய அணியின் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் உள்ளூர் தொடர்களில் விளையாடி வரும் பட்சத்திலும் அவர்களுக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவிற்கும் இப்போட்டியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விபரம்: ரோஹித் சர்மா (தலைவர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ப்ராஸ் கான், ரிஷப் பாண்ட், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், மொஹமட் சிராஜ், ஆகாஷ் தீப் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<