ரியோ ஒலிம்பிக் 2016 – ஆகஸ்ட் 15

234

அரையிறுதியில் பிரேசில், ஜெர்மனி

ரியோ ஒலிம்பிக்கில், ஆண்களுக்கான கால்பந்தில் கால்இறுதி ஆட்டங்கள் நேற்று முன்தினம் நடந்தன. ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் போர்த்துகலையும், நைஜீரியா 2-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கையும், ஹோண்டுராஸ் 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவையும், பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவையும் தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.

பிரேசில் அணியில் நட்சத்திர வீரர் நெய்மார், லுவான் கோல் அடித்தனர். நாளை மறுதினம் நடக்கும் அரை இறுதி ஆட்டங்களில் பிரேசில்ஹோண்டுராஸ், நைஜீரியாஜெர்மனி அணிகள் சந்திக்கின்றன. பெண்கள் கால்பந்தில் நாளை நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் பிரேசில்சுவீடன், கனடாஜெர்மனி அணிகள் மோதுகின்றன.

7ஆவது தங்கத்தை தட்டிச் சென்றார் போல்ட்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் இந்திய நேரப்படி இன்று காலை 6.55 மணிக்கு நடந்தது.

இதில் நடப்பு சாம்பியன் உசேன் போல்ட், யோகன் பிளேக் (ஜமைக்கா), ஜஸ்டின் கேட்லின், புரோ மெல் (அமெரிக்கா) பென் யூசுப்மெட்டி (ஐவேரி கோஸ்ட்), ஆந்த்ரே டி கிராஸ் (கனடா), ஜிம்மி விகாட் (பிரான்ஸ்), அகானி சிபின் (தென் ஆபிரிக்கா ஆகிய 8 பேர் அரை இறுதி மூலம் தகுதி பெற்று இருந்தனர்.

இதில் அனைவரும் எதிர்பார்த்தவாறே உசேன் போல்ட் வெற்றி பெற்றார். அவர் பந்தயத் தூரத்தை 9.81 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே உசேன் போல்ட்டுக்கு கேட்லின் சவால் கொடுத்தார். போல்ட்டை விட அவரே முன்னிலையில் இருந்தார்.

இதனால் கேட்லின் வெற்றி பெற்று விடுவாரோ என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் கடைசி 15 மீட்டரில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் ஓட்டத்தில் அணல் பறந்தது. அவர் மிகவும் வேகமாக ஓடி கேட்லினை ஓரம் கட்டினார்.

அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் 9.89 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கமும், கனடாவை சேர்ந்த ஆந்த்ரே கிராஸ் 9.91 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

ரியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் 100 மீட்டர் ஓட்டத்தில் அசைக்க முடியாத வீரர் என்பதை உசேன் போல்ட் நிரூபித்து உள்ளார். பெய்ஜிங்கில் 2008-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கிலும், லண்டனில் 2012-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கிலும் அவர் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார். தற்போது தொடர்ந்து 3-வது முறையாக ஒலிம்பிக் சாம்பியன் ஆகி இருக்கிறார்.

இதன் மூலம் உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரராக உசேன் போல்ட் நீடிக்கிறார். அவருக்கு நிகரான வீரர் யாரும் இல்லை. கேட்லின், யோகன் பிளேக் ஆகியோர் அவருக்கு ரியோ ஒலிம்பிக்கில் கடும் சவால் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் உசேன் போல்ட் மின்னல் வேக ஓட்டத்துக்கு முன்பு அவர்களால் தாக்குப் பிடிக்க இயலவில்லை. இதில் பிளேக் 4-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

100 மீட்டர் ஓட்டத்தை 9.81 வினாடிகளில் கடந்து உசேன் போல்ட்டுக்கு இந்த சீசனில் சிறந்த நிலையாகும். 2009-ம் ஆண்டு அவர் 9.58 வினாடியில் கடந்ததே உலக சாதனையாக இருக்கிறது. ஒலிம்பிக் சாதனையாளராகவும் உசேன் போல்ட்தான் உள்ளார்.

டெனிசில் மோனிகாவுக்கு தங்கப்பதக்கம்

ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஏஞ்சலிக் கெர்பரும் (ஜெர்மனி)- மோனிகா பிய்க்கும் (பியூர்டோரிகோ) மோதினர். கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்கள் கார்பின் முகுருஜா, கிவிடோவா உள்ளிட்டோருக்குதண்ணிகாட்டிய மோனிகா பிய்க் அவுஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ஏஞ்சலிக் கெர்பருக்கும் அதிர்ச்சி அளித்தார்.

2 மணி 9 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் மோனிகா பிய்க் 6-4, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் 2-ம் நிலை வீராங்கனையான கெர்பரை வீழ்த்தியதோடு தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்து புதிய வரலாறு படைத்தார். 22 வயதான மோனிகா பிய்க் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 4-வது சுற்றைக் கூட தாண்டியது கிடையாது. உலக தரவரிசையில் 34-வது இடம் வகிக்கும் அவர் ஒலிம்பிக் சாம்பியன் ஆகியிருப்பதன் மூலம் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

1948-ம் ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்று வரும் பியூர்டோரிகோ 2 வெள்ளி, 6 வெண்கலம் மட்டுமே வென்றிருந்தது. முதல் தங்கப்பதக்கத்தை வெல்வதற்கு 68 ஆண்டு காலம் தவம் இருந்துள்ளது. அவர்களின் ஏக்கத்தை மோனிகா பிய்க் தணித்துள்ளார்.