றினோன் தலைவர் கிண்ணம் ஸாஹிரா கல்லூரி வசம்

Schools Football

453

கொழும்பு ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரியை 6-0 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வீழ்த்திய கொழும்பு ஸாஹிரா கல்லூரி 18 வயதின்கீழ் பிரிவு 1 பாடசாலை அணிகளுக்கு இடையிலான றினோன் தலைவர் சம்பியன்ஷிப் தொடரில் சம்பியன்களாக முடிசூடிக்கொண்டது.

ஏற்கனவே கடந்த சனிக்கிழமை (6) கொழும்பு சுகததாச அரங்கில் இடம்பெற்ற தொடரின் முதல் அரையிறுதியில் ஸாஹிரா கல்லூரி வீரர்கள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை 8-2 என்ற கோல்கள் கணக்கிலும், ஹமீட் அல் ஹுஸைனி வீரர்கள் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

>> றினோன் தலைவர் கிண்ண இறுதிப் போட்டியில் ஸாஹிரா – ஹமீட் அல் ஹுஸைனி

Photos – Zahira College v Hameed Al Husseinie College | Final | Renown President’s Cup U18 Division I Championship 2022

இந்நிலையில், அரையிறுதி இடம்பெற்ற தினத்திற்கு அடுத்த தினமான ஞாயிற்றுக்கிழமை (7) சுகததாச அரங்கில் மிகப் பெரிய ரசிகர் கூட்டத்திற்கு முன்னிலையில் இடம்பெற்ற இந்த இறுதிப் போட்டியின் ஆரம்ப நிமிடம் முதல் கொழும்பு ஸாஹிரா வீரர்கள் போட்டியில் ஆதிக்கம் செலுத்தினர்.

ஆட்டத்தின் 7ஆவது நிமிடத்தில் எதிரணியின் மத்திய களத்தில் ஸாஹிரா அணிக்கு பிரீ கிக் வாய்ப்பொன்று கிடைத்தது. அதன்போது உள்ளனுப்பப்பட்ட பந்தை, கோல் எல்லையில் இருந்த ஆகில் இலகுவாக ஹெடர் செய்து இடது பக்க கம்பத்திற்கு அருகாமையினால் கோலுக்குள் செலுத்தி ஆட்டத்தின் முதல் கோலைப் பதிவு செய்தார்.

தொடர்ந்து ஹமீட் அல் ஹுஸைனி அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அவ்வணியின் தலைவர் ஹாதிப் பெற்றார். வலது பக்கத்தினால் கம்பங்களுக்குள் செலுத்த முயற்சித்த பந்தை ஸாஹிரா கோல் காப்பாளர் முஸ்தாக் பாய்ந்து தடுத்தார்.

மீண்டும் அடுத்த நிமிடத்தில் ஸாஹிரா கல்லூரிக்கு கிடைத்த பெனால்டியை அவ்வணியின் ஷாஹில் கோலாக்கினார்.

தொடர்ந்து 40 நிமிடங்கள் கடந்த நிலையில் ஷாஹில் தனது இரண்டாவது கோலையும், முதல் பாதி ஆட்டம் முடிவடையும் தருவாயில் ஆகில் தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்ய, முதல் பாதியில் ஸாஹிரா கல்லூரி 4-0 என்று முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் இரண்டாம் பாதி ஆரம்பிக்கும்போது ஹமீட் அல் ஹுஸைனி அணி மூன்று மாற்றங்களை மேற்கொண்டது. எனினும், குறித்த பாதி ஆரம்பித்து 5 நிமிடங்களுக்குள் ஷாஹில் தனது அடுத்த கோலுடன் ஹட்ரிக் கோலைப் பதிவு செய்தார்.

தொடர்ந்து 67ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோல் எல்லையில் வைத்து மேற்கொள்ளப்பட்ட பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் இலங்கை 17 வயதின்கீழ் தேசிய அணி வீரர் பரீக் அஹமட் ஸாஹிரா அணிக்கான அடுத்த கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

மறுமுனையில் ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி வீரர்கள் மேற்கொண்ட கோலுக்கான முயற்சிகள் பலவற்றை கோல்காப்பாளர் முஸ்தாக் சிறந்த முறையில் தடுக்க, அவ்வணியினரால் ஆட்டத்தின் இறுதிவரை கோல் எதனையும் பெற முடியாமல் போனது.

எனவே, 6-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்ற ஸாஹிரா கல்லூரி அணி 18 வயதின்கீழ் பிரிவு 1 பாடசாலை அணிகளுக்கு இடையிலான றினோன் தலைவர் சம்பியன்ஷிப் தொடரின் சம்பியன் கிண்ணத்தை தம்வசப்படுத்தியது.

முழு நேரம்: ஸாஹிரா கல்லூரி 6 – 0 ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி

கோல் பெற்றவர்கள்

ஸாஹிரா கல்லூரி – A. ஆகில் 7’ & 45+1’, M. ஷாஹில் 23’(P), 41’ & 49’, பரீக் அஹமட் 67’

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<