ஜடேஜாவுக்கு அதி உயர் ஒப்பந்தம்; பாண்டியாவும் அதிரடி முன்னேற்றம்

161
Ravindra Jadeja promoted

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது (BCCI) இந்த ஆண்டுகக்கான (2022-2023) தமது வீரர்களின் புதிய ஒப்பந்தப் பட்டியலை ஞாயிற்றுக்கிழமை (26) வெளியிட்டுள்ளது.

வீரர்களின் திறமைக்கேற்ப A+, A, B, C என நான்கு பிரிவுகளில் வீரர்களை தரம் பிரித்து அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் A+ பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு 7 கோடி ரூபாவும், A பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு 5 கோடி ரூபாவும், B பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு 3 கோடி ரூபாவும், C பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாவும் சம்பளமாக வழங்கப்படுகிறது.

அதன்படி A+ பிரிவில் இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, காயத்தால் அவதிப்பட்டு கடந்த பல போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடாத வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, சகலதுறை வீரர் ரவிந்திர ஜடேஜா ஆகிய 4 பேரும் இடம் பிடித்துள்ளனர். இதில் ஏ பிரிவில் இருந்த ஜடேஜா முதல் தடவையாக A+ பிரிவிற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே.எல் ராகுலின் சம்பளம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. A பிரிவில் 5 கோடி ரூபா வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவருடைய சம்பளம் 3 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அக்சர் படேல்லின் சம்பளமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. B பிரிவில் இருந்த அவர் தற்போது A பிரிவிற்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

அத்துடன், சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியாவின் சம்பளமும் ஒரு கோடி ரூபாவிலிருந்து 5 கோடி ரூபாவாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அண்மைக்காலமாக பிரகாசித்து வருகின்ற இளம் வீரர் சுப்மன் கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் சம்பளம் ஒரு கோடி ரூபாவிலிருந்து 3 கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கார் விபத்தில் சிக்கி சுமார் 3 மாதங்களாக கிரிக்கெட்டிலிருந்து வெளியேறிய விக்கெட் காப்பாளர் ரிஷப் பாண்ட் மற்றும் உபாதை காரணமாக தற்காலிகமாக இந்திய அணியில் இருந்து வெளியேறிய ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஒப்பந்தங்களில் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, இடதுகை வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மற்றும் விக்கெட் காப்பாளர் கே.எஸ் பரத்துக்கு முதல் முறையாக ஒப்பந்தம் வழங்கப்பட்டு C பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

இதனிடையே, சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கு C பிரிவில் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன், மயாங் அகர்வால், விரித்திமான் சாஹா, ஹனுமா விஹாரி, அஜிங்கியே ரஹானே, இசாந்த் சர்மா ஆகியோர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. அதேபோல, வேகப் பந்துவீச்சாளர்களான தீபக் சாஹர் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் ஒப்பந்தப் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வீரர்களுக்கான ஒப்பந்தப் பட்டியல் விபரம்

பிரிவு A+ – ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி, ஜஸ்பிரிட் பும்ரா, ரவீந்திர ஜடேஜா

பிரிவு A – ஹர்த்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், மொஹமட் ஷமி, ரிஷப் பாண்ட், அக்சர் படேல்

பிரிவு B – செத்தேஷ்வர் புஜாரா, கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மொஹமட் சிராஜ், சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில்

பிரிவு C – உமேஷ் யாதவ், ஷிகர் தவான், ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வொஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பரத்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<