ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராகுல் டிராவிட் விலகல்

Indian Premier League

22

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக நேற்று (31) அறிவித்தது. 2026 ஐபிஎல் தொடருக்கு முன்பாக, டிராவிட் தனது பதவிக் காலத்தை முடித்துக் கொள்வார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் ஒரு விரிவான பொறுப்பை ஏற்கும்படி டிராவிட்டிடம் நிர்வாகம் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அவர் அதை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ராகுல் டிராவிட் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு வழங்கிய பங்களிப்பு அளப்பரியது. வீரராக, தலைவராக, பயிற்சியாளராக அவர் எங்களது அணியின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார். 2026 ஐபிஎல் தொடருடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது. ராகுல் பல ஆண்டுகளாக ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பயணத்தில் முக்கியப் பங்காற்றியவர். அவரது தலைமைத்துவம், ஒரு தலைமுறை வீரர்களை உருவாக்கி, அணியில் தனக்கு என ஒரு முத்திரையைப் பதித்துள்ளது. ராகுலுக்கு அணியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. ராஜஸ்தான் றோயல்ஸ், அதன் வீரர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள், ராகுலின் அற்புதமான சேவைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றனர்,’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்களில் ஒருவரான ராகுல் டிராவிட், ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு ஒரு வீரராக, தலைவராக, ஆலோசகராக மற்றும் பயிற்சியாளராக என பல்வேறு வடிவங்களில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்தவராக வலம் வருகின்றார். 2011ஆம் ஆண்டு வீரராக இந்த அணியில் இணைந்த அவர், 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் அணியின் தலைவராகப் பொறுப்பேற்று வழிநடத்தினார். அவரது தலைமையில், இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டு, திறமைகள் கண்டறியப்பட்டன. 

2014ஆம் ஆண்டுக்குப் பிறகு, வீரராக ஓய்வு பெற்ற அவர், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் ஆலோசகராகவும், பின்னர் தலைமைப் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், 2024 T20 உலகக் கிண்ணம் முடிவடைந்த பிறகு இந்திய ஆடவர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மீண்டும் அந்த அணிக்கு தலைமைப் பயிற்சியாளராகத் திரும்பினார். 

ஆனால் 2025 சீசன் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு மிகப் பெரிய பின்னடைவைக் கொடுத்திருந்தது. 14 போட்டிகளில் நான்கு வெற்றிகளை மாத்திரம் பெற்று, புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது 

இதனிடையே, இந்த ஆண்டு ஐபிஎல் நிறைவடைந்த சில தினங்களிலேயே ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைவரான சஞ்சு சாம்சன் அந்த அணியிலிருந்து விலக முடிவெடுத்ததாக கூறப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளை காயம் காரணமாக சஞ்சு சாம்சன் தவறவிட்டார். சாம்சன் இல்லாத சமயத்தில் ரியான் பராக் அணியை வழிநடத்தினார். 

முன்னதாக ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. அத்துடன், தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்சஞ்சு சாம்சன் இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பு தன்னை இன்னொரு அணிக்கு மாற்றவோ அல்லது அணியில் இருந்து விடுவிக்கவோ வேண்டும் என ராஜஸ்தான் றோயல்ஸ் அணி நிர்வாகத்திடம் சஞ்சு சாம்சன் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்பட்டது. 

இந்த சூழலில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் அந்தப் பதவியில் இருந்து திடீரென விலகியுள்ளார். இது பலரது மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   

இருப்பினும், ராகுல் டிராவிட் ஏன் பதவி விலகுகிறார் என்பது குறித்து ராஜஸ்தான் றோயல்ஸ் அணி நிர்வாகம் தெளிவான காரணங்களை வெளியிடவில்லை. இருப்பினும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் உள்ள அவரது நீண்டகால உறவு மற்றும் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை அவர் ஏற்கக்கூடும் என்ற ஊகங்கள் உலவி வருகின்றன. அதேபோல, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. 

மறுபுறத்தில் ராகுல் டிராவிட் பதவி விலகிய பிறகு, ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை யார் ஏற்பார்கள் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியில் அணி நிர்வாகம் விரைவில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே ராஜஸ்தான் அணியின் ஆலோசகராக மற்றும் பயிற்சியாளராக குமார் சங்கக்கார சிறப்பாக செயல்பட்ட போதும், அவர் ஓரங்கட்டப்பட்டு ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பதவிக்கு கொண்டு வரப்பட்டார். இதனால் சங்கக்கார மீண்டும் அந்தப் பொறுப்புக்கு கொண்டு வரப்படுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

இதனிடையே, குமார் சங்கக்காரவுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளார். இதனால் ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அஸ்வின் நியமனம் செய்யப்பட உள்ளாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏற்கனவே ராஜஸ்தான் அணிக்காக 3 ஆண்டுகள் அஸ்வின் விளையாடி உள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் திண்டுக்கல் அணியின் பயிற்சியாளர் மற்றும் தலைவராக அஸ்வின் செயல்பட்டு வருகிறார். இதனால் அடுத்ததாக ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக களமிறங்க வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<