ஜப்பானுக்கு அதிர்ச்சி கொடுத்து ஆசிய சம்பியனானது கட்டார்

257
Image Courtesy - Reuters

ஆசிய கிண்ண கால்பந்து தொடரில் நான்கு முறை சம்பியனான ஜப்பானை 3-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி அடுத்த உலகக் கிண்ணத்தை நடத்தவுள்ள கட்டார் அணி முதல் முறை சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றிக்கொண்டது.

இதன்போது கட்டார் முன்கள வீரர் அல்மொயிஸ் அலி தலைக்கு மேலால் உதைத்து (Bicycle kick) பெற்ற கோல் மூலம் ஆசிய கிண்ணத் தொடர் ஒன்றில் அதிக கோல்கள் பெற்ற 22 ஆண்டு சாதனையை முறியடித்தார்.

ஆசிய கிண்ண கால்பந்திலும் ரசிகர்களின் மனதை வென்ற நாடோடி அலிரேசா

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த ஜனவரி 5 ஆம் திகதி 24 அணிகளுடன் ஆரம்பமான 17 ஆவது ஆசிய கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி அபுதாபியில் வெள்ளிக்கிழமை (01) நடைபெற்றது.

எனினும் அரையிறுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை கட்டார் அணி 4-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியதை அடுத்து ஐக்கிய அரபு இராச்சிய ரசிகர்கள் கட்டார் அணி மீது போத்தல்கள் கொண்டு வீசி எறிந்த கசப்பான பின்னணியுடனேயே கட்டார் இறுதிப் போட்டியில் களமிறங்கியது.    

கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையில் நிலவும் அரசியல் பதற்றத்திற்கு மத்தியில் கட்டார் அணியின் முன்னணி வீரர்களான சூடானில் பிறந்த அலி மற்றும் ஈராக்கைச் சேர்ந்த மத்திய கள வீரர் பஸ்ஸாம் அல் ரவி இருவரும் விளையாடுவது குறித்து ஐக்கிய அரபு இராச்சியம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த இருவரும் விளையாடுவது கடைசி நேரத்திலேயே உறுதியானது.

இந்நிலையில் போட்டி ஆரம்பித்து 12 ஆவது நிமிடத்திலேயே அலி எதிரணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பைசிகல் கிக் ஒன்றை உதைத்து கோல் பெற்றார்.

இதன் மூலம் அவர் இம்முறை ஆசிய கிண்ண தொடரில் மொத்தம் 9 கோல்களை பெற்று ஒற்றை தொடரில் அதிக கோல் பெற்றவராக புதிய சாதனை படைத்தார். இதற்கு முன்னர் ஈரானின் அலி தாயிஸ் 1996 ஆம் ஆண்டு தொடரில் எட்டு கோல்களை பெற்றதே சாதனையாக இருந்தது.

இந்நிலையில் கட்டார் அணியின் அப்துல் அஸிஸ் ஹாதிம் 20 யார் தூரத்தில் இருந்து அபார கோல் ஒன்றை பெற்று அந்த அணியை வலுவான முன்னிலை பெறச் செய்தார்.

முதல் பாதி: கட்டார் 2 – 0 ஜப்பான்

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இதுவரை தோல்வியுறாத அணியாக இருக்கும் ஜப்பான் அதிக நேரம் பந்தை தன்வசம் வைத்திருந்ததோடு, அதிக கோணர் கிக்குகளையும் பெற்றது. எனினும் அந்த அணி இலக்கை நோக்கி உதைப்பதில் பின்னடைவை சந்தித்தது.

இதனால் இரண்டாவது பாதியிலும் ஜப்பான் சற்று தடுமாற்றம் கண்டது. எனினும் 69 ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லைக்குள் இருந்து பந்தை பெற்ற டகுமி மினமினோ வேகமாக உதைத்து கோல் ஒன்றை பெற்றார்.

இந்நிலையில் பெனால்டி பெட்டிக்குள் மாயா யொஷிடாவின் கைகளில் பந்து பட்டது கெமரா மூலம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து கட்டார் அணிக்கு கிடைத்த பெனால்டியை அக்ரம் அபீப் கோலாக மாற்றினார்.

நாட்டுக்காக விளையாடாத வீரர்களை அணியிலிருந்து நீக்குவேன் – அர்ஜுன

இதன் மூலம் இதற்கு முன்னர் ஆசிய கிண்ணத்தில் காலிறுதிக்கு அப்பால் முன்னேறாத கட்டார் முதல் முறை ஆசிய கிண்ணத்தை முத்தமிட்டது. இதற்கு முன்னர் கடைசியாக கட்டார் அணியிடம் ஜப்பான் தோல்வியை சந்தித்து 31 ஆண்டுகள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்து போட்டியை கட்டாரே நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: கட்டார் 3 – 1 ஜப்பான்  

கோல் பெற்றவர்கள்

கட்டார் – அல்மொயிஸ் அலி 12’, அப்துல் அஸிஸ் ஹாதிம் 27’, அக்ரம் அபீப் 83′ (பெனால்டி)

ஜப்பான் – டகுமி மினமினோ 69′

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<