முதல் பாதி அசத்தலில் இலகு வெற்றியை ருசித்த நியு ஸ்டார்

286
Puttalam League Draguns cup

புத்தளம் கால்பந்து லீக் ஏற்பாடு செய்து நடாத்தும் ட்ரகன்ஸ் லீக் -2017′ போட்டிகளின் 32ஆவது லீக் ஆட்டத்தில் முதல் பாதியில் நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் காட்டிய அசத்தலான ஆட்டத்தினால் நியு ப்ரண்ஸ் கழகத்தினை 4 : 0 என்ற கோல்கள் அடிப்படையில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தினைப் பிடித்துக்கொண்டது.

புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் புத்தளத்தின் முன்னணிக் கழகமாக வளர்ந்து வரும் நியு ஸ்டார் மற்றும் நியு ப்ரண்ஸ் கழகங்களுக்குமிடையில் முழுமையாக 80 நிமிடங்களைக் கொண்ட போட்டியாக இந்த ஆட்டம் இடம்பெற்றது.

த்ரீ ஸ்டாரை வீழ்த்தி மீண்டும் ஒரு வெற்றியைப் பதிவு செய்த லிவர்பூல் கழகம்

புத்தளம் கால்பந்தாட்ட லீக் பெருமையோடு ஏற்பாடு செய்து..

ஆட்டத்தின் 3ஆவது நிமிடத்தில் இம்தியால் வழங்கிய பந்தை பர்மான் பெற்று கம்பம் திருப்ப, பந்து கம்பத்தின் அருகால் வெளியேறியது. இதனால் நியு ப்ரண்ஸின் முதல் முயற்சி தோற்றுப் போனது.

மேலும் 7 நிமிடங்கள் கடந்த நிலையில் நியு ஸ்டார் கழகத்திற்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்க அதை சர்பான் வலக்காலால் உயர்த்தி அடிக்க பந்து எந்தத் தடையுமின்றி உள்நுழைந்தமையினால் முதல் கோலை பதிவு செய்தது நியு ஸ்டார்.

தொடர்ந்து 19ஆவது நிமிடத்தில் நியு ப்ரண்ஸ் வீரர் ரமவுஸ் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை பர்மான் வந்த வேகத்தில் உயர்த்தி அடிக்க பந்து மைதானத்தை விட்டு வெளியேறியது.

மேலும் 5 நிமிடங்களில் நியு ஸ்டார் கழகத்திற்கு கோர்ணர் உதை கிடைக்க அதை இர்பான் உயர்த்தி கம்பம் நோக்கி அடித்தார். இதன்போது உயரே எழுந்த ஹக்கீம் உள்ளே வந்த பந்தை கம்பத்திற்குள் ஹெடர் செய்ய பந்து ஹிஜாஸின் கைகளில் படாமலே கோலுக்குள் செல்ல, நியு ஸ்டாரின் கோல் கணக்கு இரட்டிப்பாகியது.

கோல் அதிர்ச்சியிலிருந்து நியு ப்ரண்ஸ் மீள்வதற்குள் 29ஆவது நிமிடத்தில் முஸ்பிக் கொடுத்த பந்தினை பெற்ற அமித் நியு ப்ரண்ஸின் தடுப்பு வீரர்களை கடந்து கம்பம் நோக்கி அடித்தார். பந்து கம்பத்தின் வலப்பக்கத்தில் பட்டு வர, அதை சர்பி தலையால் முட்டி உள்ளனுப்பி அணியை 3 கோல்களினால் முன்னிலையடையச் செய்தார்.

நியு ப்ரண்ஸின் முயற்சிகள் நியு ஸ்டார் தடுப்பு வீரர்களால் தொடர்ந்தும் முறியடிக்கப்பட, அவர்கள் கோல் எண்ணிக்கையை ஆரம்பக்க முடியாமல் இருந்தனர்.

முதல் பாதியின் இறுதி முயற்சியாக பர்மானுக்குக் கிடைத்த பந்தினை கம்பத்திற்கு சற்று தொலைவிலிருந்து உயர்த்தி அடிக்க, பந்து கம்பத்திற்கு மேலால் சென்றது. இதனால் முதல் பாதியில் நியு ப்ரண்ஸால் எந்தவொரு கோலையும் போட முடியாமல் போனது.

முதல் பாதி: நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம்  3  :  0  நியு ப்ரண்ஸ் விளையாட்டுக் கழகம்

முதல் பாதியின் முன்னிலையால் ஆட்டத்தை தன் பக்கம் முழுமையாக ஈர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு களம் கண்டது நியு ஸ்டார் கழகம்.

இளையோர் உலகக் கிண்ணம் இங்கிலாந்து வசம்

இந்தியாவில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்ட FIFA உலகக்…

இரண்டாம் பாதி ஆரம்பித்த 5ஆவது நிமிடத்தில் ஹக்கீம் கொடுத்த  நேர்த்தியான பந்தினை சர்பி பெற்று கம்பத்திற்கு நேராக அடிக்க அதை ஹிஜாஸ் இலகுவாகப் பற்றிக்கொண்டார்.

தொடராக 54ஆவது மற்றும் 56ஆவது நிமிடங்களில் அமித்தும் சர்பியும் கோல் அடித்த போதிலும், அவை இரண்டுமே ஓப்சைட் என நடுவர் அறிவிக்க வீணாகிப் போனது நியு ஸ்டாரின் கோல்களும் முயற்சிகளும்.

மீண்டும் 59ஆவது நிமிடத்தில் நியு ப்ரண்ஸ் கழகத்திற்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை பர்மான் உயர்தி கம்பம் செலுத்த அதை வசீம் கையால் தட்டி விட சிறந்த உதை முறியடிக்கப்பட்டது.

தொடர்ந்து 65ஆவது நிமிடத்தில் அமித் பந்தை உருட்டி அடிக்க அதை பெற்ற ஸாஜித் கம்பத்திற்குள் வேகமாக அடித்தார். எனினும் நடுவர் மீண்டும் ஓப் சைட் என அறிவிக்க நியு ஸ்டார் கழகத்தினர் ஏமாற்றமடைந்தனர்.

மேலும் 10 நிமிடங்கள் கடக்க மைதானத்தின் அரைப் பகுதியிலிருந்து பாஹீம் பந்தை அடிக்க அதை அம்ஜத் பெற்று வசீம் மாத்திரம் தனித்திருக்க பந்தை கம்பத்திற்கு வெளியே அடித்து நியு ப்ரண்ஸ் கழகத்தின் இலகு கோல் வாய்பை வீணடித்தார்.

போட்டியின் இறுதி நிமிடத்தில் ரிப்கான் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை ஸாஜித் பெற்று மூன்று தடுப்பு வீரர்களையும் நிலைகுழைய வைத்து கம்பத்திற்குள் வேகமாக பந்தை அடிக்க, பந்து எந்த வித தடையுமின்றி உள்நுழைந்தது.

போட்டி நிறைவு பெற்றதாய் நடுவர் அறிவிக்க பலமிக்க நியு ஸ்டார் கழகம் முதல் பாதியின் அதிரடியான கோல்களின் உதவியுடன் 4 : 0 என நியு ப்ரண்ஸ் கழகத்தை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதல் நிலை பெற்றது.

முழு நேரம்: நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் 4  :  0  நியு ப்ரண்ஸ் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்:

நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் – சர்பான் 10’, ஹக்கீம் 24’, சர்பி 29’ ஸாஜித் 79’

மஞ்சள் அட்டை

நியு ப்ரண்ஸ் விளையாட்டுக் கழகம் – சதீஸ்கான் கனி 35’, அர்ஹம் 46’