DSI சுபர் ஸ்போர்ட்ஸ் பாடசாலைகள் கரப்பந்து தொடர் அடுத்த மாதம் ஆரம்பம்

137

இலங்கையின் முன்னணி காலணி உற்பத்தியாளர்களான DSI நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெறும் 18ஆவது ”DSI சுபர் ஸ்போர்ட்ஸ் பாடசாலைகள் கரப்பந்து போட்டித் தொடர்” எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ளது.  

நகர மற்றும் கிராமிய பகுதிகளில் உள்ள கரப்பந்தாட்ட வீர வீராங்கனைகளுக்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பிரகாசிப்பதற்கான களத்தை அமைத்துக்கொடுக்கும் நோக்குடனேயே இந்தத் தொடர் நடத்தப்படுகின்றது. இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனமும் கல்வி அமைச்சும் இணைந்து DSI நிறுவனத்தின் அனுசரணையில் நடாத்தும் இத்தொடர் முதல் முறையாக கடந்த 1999ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

3 வருடங்களுக்குப் பிறகு தர்ஜினி சிவலிங்கத்துக்கு தேசிய அணியில் வாய்ப்பு

இலங்கை தேசிய வலைப்பந்து அணிக்கான தேர்வு இந்த வாரம் இறுதியாக 2014 ஆம் …

அதன் தொடராக 18ஆவது முறையாக இவ்வருடமும் இடம்பெறவுள்ள DSI சுபர் ஸ்போர்ட்ஸ் பாடசாலைகள் கரப்பந்து போட்டித் தொடரின் அறிமுக நிகழ்வு நேற்று (13) கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்றது.

இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும், மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சருமான கௌரவ ரஞ்சித் சியம்பலாபிடிய தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கரப்பந்து சம்மேளனத்தின் முக்கிய அதிகாரிகள், DSI நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.  

இம்முறை தொடரில் 11, 13, 15, 17 மற்றும் 19 வயதுப் பிரிவுகளின் கீழ் ஆண்/பெண் என இரு பாலாருக்கும் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 11 வயதின் கீழ் பிரிவு இம்முறை முதல் முறையாக உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

போட்டிகள் அனைத்தும் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் இடம்பெறவுள்ளன. மாவட்ட மட்டப் போட்டிகள் ஏப்ரல் 27ஆம் திகதி முதல் மே முதலாம் திகதி வரை இடம்பெறும். அதில் அனைத்துப் பிரிவுகளிலும் இருந்து ஆண்/பெண் இரு தரப்பிலும் முதல் இரண்டு இடங்களையும் பெறும் அணிகள் தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகும்.

பின்னர், தேசிய மட்டப் போட்டிகள் மே மாதம் 31ஆம் திகதியில் இருந்து ஜூலை மாதம் 2ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. அவற்றின் நிறைவில், தேசிய மட்ட இறுதிப் போட்டிகளை ஆகஸ்ட் மாதம் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்ட மற்றும் தேசிய மட்டப் போட்டிகளின் வெற்றியாளர்கள் மற்றும் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் அணிகளுக்கும் பணப்பரிசில்களை வழங்குவதற்கு போட்டி ஏற்பாட்டுக் குழுவினரால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

இம்முறை போட்டிகளில் 4,000 இற்கும் அதிகமான அணிகள் பங்கெடுக்கும் எனத் தெரிவித்துள்ள போட்டி ஏற்பாட்டாளர்கள், குறித்த அனைத்து போட்டிகளையும் உரிய நேரத்தில், சிறந்த முறையில் நடாத்தி முடிப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.  

இத்தொடரில் பங்குகொள்ள வேண்டிய அணிகள், தமக்கான விண்ணப்ப படிவங்களை குறித்த பாடசாலை அல்லது நாடு பூராகவும் உள்ள DSI காட்சியறைகளில் பெற்றுக்கொள்ளலாம். பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை மேற்குறிப்பிடப்பட்ட இடங்களில் சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதியாக 2018 ஏப்ரல் 6ஆம் திகதி உள்ளமை குறிப்பிடத்தக்கது.