எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்க இருக்கும் டயலொக் ரக்பி லீக் போட்டிகளில் சிறப்பான விளையாட்டை வெளிக்காட்டி, தமது அணி தொடர்பில் எழுந்துள்ள அனைத்து கேள்விகளுக்கும் தமது வெற்றியின்மூலம் பதில் வழங்குவதற்கு பொலிஸ் ரக்பி அணி காத்திருக்கின்றது.

Visit the Police SC Rugby Hub

பொலிஸ் அணியின் முன்னைய ஆண்டுகள்

கடந்த வருடம் நடைப்பெற்ற லீக் போட்டிகள் ஆரம்பிக்கும் முன்னர், பொலிஸ் அணி கிண்ணத்தை சுவீகரிக்க கூடிய அணியாக அனைவராலும் கருதப்பட்டது. எனினும், பல வீரர்களின் காயம் காரணமாக தர வரிசையில் 5ஆவது இடத்தையே அவ்வணி பெற்றுக்கொண்டது.

தேசிய ரக்பி அணியில் இடப்பெற்ற ரீசா முபாரக், அச்சல பெரேரா,  டெர்ரன்ஸ் ஹென்றி, ஷரோ பெர்னாண்டோ, சாமர தாபரே மற்றும் பிலால் ஹசன் ஆகியோர் சென்ற வருடம் விளையாடிய பொழுதும் பொலிஸ் அணியால் சிறப்பாக பிரகாசிக்க முடியாமல் போனது.

சென்ற வருட போட்டிகளில் பொலிஸ் அணி சார்பாக விளையாடிய சிறந்த வீரரும், அணியின் பின் வரிசை வீரருமாக முஷின் பலீல் இருந்தார். அவர் தனி ஆளாக தமது அணியின் பின் வரிசை மற்றும் சில சமயங்களில் முன் வரிசையிலும் ஆதிக்கம் செலுத்தி, பொலிஸ் அணிக்கு பலமாக அமைந்தார்.

கடந்த வருடத்தில் ஏற்பட்ட பின்னடைவின் காரணமாக, அணியின் முக்கிய சில வீரர்கள் இவ்வருட லீக் போட்டிகளில் வேறு அணிகளுக்கு சென்று விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் அணி வீரர்கள்

அனுபவம் வாய்ந்த வீரர்கள்

அனுபவம் வாய்ந்த முன் வரிசை வீரரான அச்சல பெரேரா ஹுகர் நிலையில் விளையாடுகிறார். 5 அடி 6 அங்குல உயரமும், 106 கிலோ எடையும் கொண்ட பலமிக்க பெரேரா பொலிஸ் அணியின் முன் வரிசைக்கு மிகப் பெரிய பலமாக இருப்பார்.

82 கிலோ எடை, 5 அடி 5 அங்குல உயரம் கொண்ட வீரர் ரதீஷ செனவிரத்ன, அணியின் மற்றுமொரு முக்கிய வீரராக உள்ளார். முன் வரிசையில் துடிப்பாக செயற்படக் கூடிய வீரரான இவர், எந்த நிலையிலும் விளையாடக்கூடியவர் என்பதால் இவரது பங்கு அணிக்கு மிகவும் முக்கியமானதாய் அமையும்.

பொலிஸ் அணியின் பின் வரிசை பற்றி விபரிக்கும் பொழுது மனதிற்கு வருபவர் அப்சல் மொகமட். பிரதான நிலையாக ஸ்கரம் ஹாபில் விளையாடும் இவர், ஸ்க்ரம் ஹாப் நிலையிலிருந்து பின் வரிசை வரையில் அனைத்து நிலையிலும் விளையாடுவார். சென்ற வருடத்தை விட இவ்வருடம் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்த காத்திருக்கும் இவர் பொலிஸ் அணியின் முக்கிய வீரராவார்.

இறுதியாக, சென்ற வருடத்தில் பொலிஸ் அணியின் தூணாக திகழ்ந்த முஷீன் பலீல், சென்ற வருட திறமையை இவ்வருடமும் அவ்வாறே வெளிப்படுத்த காத்திருக்கும் ஒருவர். இவர் நடு வரிசையிலும் விளையாடும் திறமை மிக்க வீரராவார். தனது பலத்தை பிரயோகித்து சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தும் இவர் பொலிஸ் அணி நம்பியுள்ள மற்றொரு முக்கிய வீரராவார்.

இளம் வீரர்கள்

தேசிய அணியில் இடம்பெற்று பல போட்டிகளில் பங்குகொண்டாலும், 20 வயதை மட்டுமே கொண்ட ரீசா ரபாய்தீன் பொலிஸ் அணியின் முக்கிய இளம் வீரராகத் திகழ்கின்றார். முதன் முதலில் கழக மட்ட போட்டிகளில் கலந்து கொள்ளும் இவர் பொலிஸ் அணியின் விங் நிலையில் விளையாடுவார். பாடசாலை வாழ்க்கையை முடித்த உடனேயே கழக மட்ட போட்டிகளில் விளையாடும் ரீசா, எவ்வித காயங்கள் மற்றும் குறைகளும் இன்றி இவ்வருடத்தில் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வந்த ஒருவர். 

கடந்த வருட பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகளில் விளையாடிய சந்தேஷ் ஜெயவிக்ரம, முக்கிய நிலையான ப்லை ஹாப் நிலையில் விளையாடும் முக்கிய வீரராக உள்ளார். சந்தேஷ் தனது கழக மட்ட போட்டிகளை சிறப்பாக ஆரம்பிக்க காத்திருக்கின்றமை முக்கிய விடயமாகும்.

தமது அணியை பாடசாலை மட்ட பிரிவு 1 போட்டிகளுக்கு அழைத்து சென்ற, கொழும்பு ஸாஹிரா கல்லூரி மாணவன் வஜீத் பவ்மி முதன் முதலாக கழக மட்ட போட்டிகளில் விளையாடவிருக்கிறார். பிளேன்கர் நிலையில் விளையாடும் இவர், பாடசாலை மட்ட போட்டிகளில் வெளிக்காட்டிய தனது திறமையை அவ்வாறே இப்போட்டிகளிலும் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Dialog Rugby League Hub

அணியின் பயிற்சியாளர்கள்

சென்ற வருடம் ஏற்பட்ட பின்னடைவை மாற்றியமைத்து, சிறந்த வெற்றிகளை பெற தமது அணியை செம்மை செய்கிறார் பொலிஸ் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் சுதத் சம்பத். லீக் மற்றும் நோக் அவுட் ஆகிய இரண்டு தொடர்களிலும் 8 வெற்றிகளை மட்டுமே பெற்ற பொலிஸ் அணி, இவரின் வழி நடத்தலின் கீழ் பல மாற்றங்களை செய்து கிண்ணத்தை சுவீகரிக்க எதிர்பார்த்துள்ளது.

புனித பேதுரு கல்லூரியின் முன்னாள் பயிற்சிவிப்பாளரான ரஜீவ் பெரேரா, இம்முறை பொலிஸ் அணிக்கு துணை பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுகிறார். பிரதான பயிற்றுவிப்பாளர் சுதத்துடன் சேர்ந்து பணியாற்றும் இவர் பொலிஸ் அணியின் மற்றுமொரு பலமாகும்.

சமிக்க ரணசிங்க அணியின் முகாமையாளராகவும், மனுக குணரத்ன வைத்திய உதவியாளராகவும் கடமையாற்றுகின்றனர்.

பொலிஸ் அணி கடற்படை அணியுடன் தனது முதல் போட்டியில் மோதவுள்ளது. இம்முறை தமது அணியிலிருந்து பல முக்கிய அனுபவமிக்க வீரர்களை இழந்தமையால் தர வரிசையில் முதல் 4 இடங்களுக்குள் இடம் பிடிப்பது பொலிஸ் அணிக்கு சவாலான விடயமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

2016/17 ஆம் ஆண்டுக்கான பொலிஸ் அணி 
[a-team-showcase-vc ats_team_id=”2135124″]