கொழும்பு அணிக்காக 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரபாத்

National Super League Four Day Tournament 2022

125

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் கடைசி இரண்டு லீக் போட்டிகளும் இன்று (17) ஆரம்பமாகியது.

இதில் யாழ்ப்பாணம் அணிக்கெதிரான போட்டியில் தம்புள்ளை வீரர்களான மினோத் பானுக, லசித் அபேரட்னவும், கொழும்பு அணிக்கெதிரான போட்டியில் காலி அணியின் சங்கீத் குரேவும் அரைச்சதம் அடித்து பிரகாசித்திருந்தனர்.

அதேபோல, காலி அணிக்கெதிரான போட்டியில் கொழும்பு அணியின் சுழல்பந்து வீச்சாளரான பிரபாத் ஜயசூரிய 86 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளைக் வீழ்த்தி அசத்தியிருந்தார்.

கொழும்பு எதிர் காலி

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 267 ஓட்டங்களை எடுத்தது.

காலி அணியின் துடுப்பாட்டத்தில் சங்கீத் குரே மற்றும் பிரயமால் பெரேரா ஆகிய இருவரும் தலா 51 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள, கொழும்பு அணியின் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட பிரபாத் ஜயசூரிய 111 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும், அஷேன் பண்டார 4 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

இதி;ல் பிரபாத் ஜயசூரிய தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கிரிக்கெட் தொடரில் தனது 2ஆவது 5 விக்கெட் குவியைலைப் பெற்றுக்கொண்டு, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் மாலிந்த புஷ்பகுமாரவை பின்தள்ளி 21 விக்கெட்டுகளை எடுத்து முதலிடத்திற்கு முன்னேறினார்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 110 ஓட்டங்களை எடுத்தது.

காலி அணியின் பந்துவீச்சில் அகில தனன்ஞய 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சானக ருவன்சிறி 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

காலி அணி – 267/10 (61.3) – சங்கீத் குரே 51, பிரியமால் பெரேரா 51, பபசர வதுகே 42, கவிஷ்க அஞ்சுல 33, பிரபாத் ஜயசூரிய 6/111, அஷேன் பண்டார 2/4

கொழும்பு அணி – 110/6 (25.2) – அஷேன் பண்டார 35*, நிபுன் தனன்ஞய 25, அகில தனன்ஞய 3/28, சானக ருவன்சிறி 2/40

 யாழ்ப்பாணம் எதிர் தம்புள்ளை

லசித் அபேரட்ன (60), மினோத் பானுக (52) ஆகியோரது அரைச்சதங்களின் உதவியுடன் யாழ்ப்பாணம் அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் தம்புள்ளை அணி வலுவான நிலையில் உள்ளது.

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி, போதிய வெளிச்சமிண்மை காரணமாக இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவுக்கு வரும் போது 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

தம்புள்ளை அணியின் துடுப்பாட்டத்தில் லசித் அபேரட்ன 60 ஓட்டங்களையும், அணித் தலைவர் மினோத் பானுக 52 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று வலுச்சேர்த்தனர்.

இதனிடையே, யாழ்ப்பாணம் அணியின் பந்துவீச்சில் நுவன் பிரதீப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

யாழ்ப்பாணம் அணி 159/2 (50) – லசித் அபேரட்ன 60*, மினோத் பானுக 52*, நுவன் பிரதீப் 2/38

இந்த இரண்டு போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<