லிவர்பூல், செல்சி அணிகளுக்கு தொடர்ந்து ஐந்தாவது வெற்றி

167

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் ஐந்தாவது வாரத்திற்கான போட்டிகள் சனிக்கிழமை (15) நடைபெற்றன. ஒருவார இடைவெளிக்கு பின்னர் ஆரம்பமான பிரீமியர் லீக் போட்டிகளில் லிவர்பூல் மற்றும் செல்சி அணிகள் தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியை பதிவு செய்து கொண்டதோடு, மன்செஸ்டர் யுனைடெட், மன்செஸ்டர் சிட்டி மற்றும் நியூகாஸில் அணிகளும் வெற்றியீட்டிக் கொண்டன.

  • லிவர்பூல் எதிர் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பூர்

போட்டியின் கடைசி நிமிடங்கள் வரை முன்னிலை பெற்று 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் டொட்டன்ஹாம் அணியை வீழ்த்திய லிவர்பூல் அணி இம்முறை பிரீமியர் லீக் போட்டியில் இதுவரை 100 வீத வெற்றியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

லவர்பூல் அணி 1990க்கு பின்னரே முதல் ஐந்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்துகொண்டுள்ளது.

கடந்த பருவத்தில் டொட்டன்ஹாமிடம் 1-4 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த நிலையில் லண்டன், வொம்ப்லே அரங்கில் நடைபெற்ற போட்டியின் ஆரம்பம் முதல் லிவர்பூல் அணி வேகம் காட்ட ஆரம்பித்தது.

போட்டியின் 39ஆவது நிமிடத்தில் ஜியோர்ஜினியோ விஜ்லண்டும் பிரிமீயர் லீக்கில் வெளி மைதானத்தில் தனது முதல் கோலை புகுத்த லிவர்பூல் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாதி ஆரம்பித்த விரைவிலேயே 54 ஆவது நிமிடத்தில் ரொபர்டோ பிர்மிலோ, லிவர்பூலுக்காக 2ஆவது கோலையும் புகுத்தினார்.  

போட்டி முடியும் நேரத்தில் எரிக் லமேலா கீழ் இடது மூலையில் கடினமான இடத்தில் இருந்து தனது இடது காலால் உதைத்து பந்தை வலைக்குள் செலுத்தினார். இதன்மூலம் டொட்டன்ஹாம் கோல் ஒன்றை பெற்றபோதும் லிவர்பூலின் வெற்றியை தவிர்க்க முடியவில்லை.        

இதன்படி தொடர்ச்சியாக இரண்டு தோல்விகளை சந்தித்திருக்கும் டொட்டன்ஹாம் பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்கு வெளியே தள்ளப்பட்டுள்ளது.   

  • செல்சி எதிர் காடிப் சிட்டி

பெல்ஜியத்தின் நட்சத்திர வீரரான ஈடன் ஹசார்டின் ஹட்ரிக் கோல் மூலம் காடிப் சிட்டிக்கு எதிரான போட்டியின் 4-1 என வெற்றியீட்டிய செல்சி பிரீமியர் லீக் பருவத்தில் தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளை பெற்று கோல் வித்தியாசத்துடன் முதலிடத்தைப் பிடித்தது.

ஸ்டான்போர்ட் அரங்கில் நடைபெற்ற போட்டியின் 16ஆவது நிமிடத்தில் சோல் பம்பா உயரப் பாய்ந்து பந்தை வலைக்குள் தட்டிவிட காடிப் அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. எனினும் ஹாசார்ட் முதல் பாதியில் இரு பதில் கோல்கள் திருப்ப செல்சி ஆதிக்கம் செலுத்தியது.

காடிப் சிட்டியின் இரு பின்கள வீரர்களை முறியடித்து 37ஆவது நிமிடத்தில் தாழ்வாக உதைத்து முதல் கோலை பெற்ற ஹசார்ட் தொடர்ந்து 44ஆவது நிமிடத்தில் நெருங்கிய தூரத்தில் இருந்து பந்தை வலைக்குள் செலுத்தினார்.

வில்லியனை பெனால்டி எல்லைக்குள் பம்பா கீழே வீழ்த்த 81 ஆவது நிமிடத்தில் ஹசார்ட் நிதானமான பெனால்டி உதை மூலம் ஹட்ரிக் கோலை பெற்றார். தொடர்ந்து வில்லியன் 83 ஆவது நிமிடத்தில் பெற்ற கோல் செல்சி அணி பிரீமியர் லீக்கில் கோல் வித்தியாசத்தில் முதலிடத்திற்கு முன்னேற உதவியது.  

இதனால் லிவர்பூல் அணி ஒரு கோல் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இரு அணிகளும் தலா 15 புள்ளிகளை பெற்றுள்ளன.

  • மன்செஸ்டர் சிட்டி எதிர் புல்ஹாம்

நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் புல்ஹாமுக்கு எதிராக உறுதியான வெற்றி ஒன்றை பெற்று இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

எடிஹாட் அரங்கில் நடைபெற்ற போட்டியில் சிட்டி அணிக்கு திரும்பிய ஜெர்மனியின் லெரோய் சேன் இரண்டு நிமிடங்களுக்குள்ளே நெருங்கிய இடைவெளியில் பந்தை வலைக்குள் செலுத்தினார்.  

இதனால் ஆரம்பத்திலேயே தடுமாற்றம் கண்ட புல்ஹாம் 21 ஆவது நிமிடத்தில் எதிரணிக்கு மற்றொரு கோலை விட்டுக் கொடுத்தது. டேவிட் சில்வா வேகமாக உதைத்து சிட்டி அணிக்கு இரண்டாவது கோலை பெற்றுக் கொடுத்தார்.

ரஹிம் ஸ்டார்லிங் 47ஆவது நிமிடத்தில் மற்றொரு கோலை பெற்று மன்செஸ்டர் சிட்டியின் வெற்றியை உறுதி செய்தார்.

  • நியூகாஸில் யுனைடெட் எதிர் ஆர்சனல்

மத்தியகள வீரர் கிரனிட் ஷன்காவின் அபார பிரீ கிக் மற்றும் மெசுட் ஒசிலின் கோலின் மூலம் ஆர்சனல் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் நியூகாசிலை வீழ்த்தியது.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் பெறாத நிலையில் போட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. பெனால்டி எல்லையின் விளிம்பில் நியூகாஸிலின் பெட்ரிகோ பெர்னாண்டஸ் எதிரணி வீரர் பீர்ரே எம்ரிக் அபமயங்கை கீழே வீழ்த்தினார். இதனால் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை கொண்டு ஷங்கா மேல் வலது மூலையில் இருந்து உதைத்து அதிர்ச்சி கோல் ஒன்றை பெற்றார்.     

49ஆவது நிமிடத்தில் முதல் கோல் பெறப்பட்டு ஒன்பது நிமிடங்களின் பின் ஒசில் ஆர்சனல் அணியின் கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார்.

மேலதிக வீரராக வந்த நியூகாஸிலின் சியரான் கிளார்க் பெர்னாண்டஸ் பரிமாற்றிய பந்தை தலையால் முட்டி கோலாக மாற்றியபோதும் அந்த அணியின் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. நியூகாஸில் இம்முறை பருவத்தில் இதுவரை ஆடிய ஐந்து போட்டிகளில் சந்திக்கும் நான்பாவது தோல்வி இதுவாகும்.   

  • மன்செஸ்டர் யுனைடெட் எதிர் வட்போர்ட்

இரண்டு நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து பெற்ற கோல்கள் மூலம் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மன்செஸ்டர் யுனைடெட், வட்போர்ட்டின் தொடர் வெற்றிகளுக்கு முட்டுக்கட்டை போட்டது.

இதில் இரண்டாவது தவறிழைத்த யுனைடெட் அணியின் நெமன்ஜா மடிக் மேலதிக நேரத்தில் சிவப்பு அட்டை பெற்று வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் 35ஆவது நிமிடத்தில் ஆஷ்லி யங் உதைத்த பந்தை எதிரணி கோல் கம்பத்திற்கு மிக நெருங்கிய தூரத்தில் நெஞ்சால் கட்டுப்படுத்தி கோலாக மாற்றினார் ரமாலு லுகாகு. தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் கழித்து கிறிஸ் ஸ்மல்லிங் யுனைடெட் அணிக்கு மற்றொரு கோலை பெற்று அந்த அணி முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற உதவினார்.   

வட்போர்ட் அணிக்காக 65ஆவது நிமிடத்தில் அன்ட்ரே கிரே கோல் ஒன்றை பெற்றபோதும் அந்த அணி இம்முறை பிரீமியர் லீக்கில் முதல் தோல்வியை சந்தித்தது.