இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை நடத்த நீதிமன்றத்தால் தடை உத்தரவு

113

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மே மாதம் 31ஆம் திகதி தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன் 14ஆம் திகதி வரை தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் பதவிக்கு நால்வர் போட்டி

புதிதாக தெரிவு செய்யப்படவுள்ள…

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் மே 19ஆம் திகதி நடைபெறவிருந்த போது சட்ட சிக்கல்கள் மற்றும் விதிமுறைகளுக்கு முரணாக பொதுச் சபையினை கூட்டாமல் தேர்தல் குழுவை நியமித்தமை உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் திகதி பிற்போடப்பட்டது.

அதன்பின்னர் சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்த உத்தரவைத் தொடர்ந்து இலங்கையின் விளையாட்டு சட்டத்தின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி விளையாட்டு துறை அமைச்சர் விடுத்த உத்தரவை ஏற்று, மே மாதம் 31ஆம் திகதி தேர்தல் இடம்பெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த 19ஆம் திகதி அறிவித்திருந்தது.

இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிஷாந்த ரணதுங்க, ஜயந்த தர்மதாச தரப்பினர் திலங்க சுமதிபாலவுக்கு எதிராக இரண்டு ஆட்சேபனைகளை தாக்கல் செய்திருந்தனர்.  இந்த ஆட்சேபனைகளானது 1800 பக்கங்களைக் கொண்டவை எனவும் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு திலங்க சுமதிபால போட்டியிடுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு நிஷாந்த ரணதுங்க மனு ஒன்றை கடந்த 28ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவிற்கு பிரதிவாதிகளாக விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா, அமைச்சின் செயலாளர், கிரிக்கெட் தேர்தல் குழுவின் உறுப்பினர்கள், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் திலங்க சுமதிபால உட்பட 27 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

குறித்த மனுவில் நாளை (31) நடைபெற உள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்பாளருக்காக திலங்க சுமதிபாலவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை சட்டத்திற்கு முரணானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் திலங்க சுமதிபால குறித்த பதவிக்காக போட்டியிட்டால் விளையாட்டுச் சட்டத்தின் விதிகள் மீறப்படும் என மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இந்த வழக்கு இன்று (30) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், எதிர்வரும் 14ஆம் திகதிக்கு தேர்தலை ஒத்திவைக்கும்படி இடைக்கால தடை உத்தரவொன்றையும் பிறப்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.