டயலொக் றக்பி லீக் 3ஆம் வாரத்தில் பொலிஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற பொலிஸ் மற்றும் விமானப்படை அணிகளுக்கிடையிலான போட்டியில், விமானப்படை அணி 22-12 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.

Visit the Dialog Rugby 2016/17 HUB for more

சீரற்ற காலநிலையில் ஆரம்பித்த இப்போட்டியில் பொலிஸ் அணி வழமை போலவே முதல் புள்ளியை எதிரணிக்கு வாரி வழங்கியது. பொலிஸ் அணி செய்த தவறினால் விமானப்படை அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. 40 மீட்டர் தூரத்தில் இருந்து உதையை வெற்றிகரமாக கம்பத்தின் ஊடாக செலுத்திய சரித் செனவிரத்ன விமானப்படை அணிக்கு 3 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார். (பொலிஸ் 00 – விமானப்படை 03)

அடை மழையின் காரணமாக போட்டி சிறிது நேரத்திற்கு நிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

மழையின் பின் போட்டி ஆரம்பித்ததிலிருந்து பொலிஸ் அணி இரு முறை தவறுகள் செய்ததனால் விமானப்படை அணிக்கு 2 பெனால்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட விமானப்படை அணியானது 6 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. இதனால் முதல் பாதியில் 9 புள்ளிகள் முன்னிலையில் விமானப்படை அணி காணப்பட்டது.

முதற் பாதி : பொலிஸ் 00 – விமானப்படை 09

இரண்டாம் பாதியில் ஆதிக்கம் செலுத்திய பொலிஸ் அணியானது முதல் புள்ளியை பெற்றுக்கொண்டது. விமானப்படை அணிக்கு அழுத்தம் கொடுத்த பொலிஸ் அணியானது எதிரணியின் கோட்டையினுள் நுழைந்தது. விமானப்படை அணி செய்த தவறினால் அணிக்கு பெனால்டி ட்ரை வழங்கப்பட்டது. ராஜித சன்சோனி உதையின் மூலம் 2 புள்ளிகளையும் பெற்றுக்கொடுத்தார். (பொலிஸ் 07 – விமானப்படை 09)

பொலிஸ்  அணியின் விங் நிலை வீரர் எதிரணி வீரரை அபாயமான முறையில் தடுத்ததிற்காக மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலம் பொலிஸ் அணியின் கோட்டைக்குள் நுழைந்த விமானப்படை அணியானது ஒரு சில முயற்சிகளின் பின்னர் ஓரத்தில் திலின பண்டார மூலமாக ட்ரை வைத்தது. இவ் உதையையும் வெற்றிகரமாக உதைத்த சரித் 2 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார். (பொலிஸ் 07 – விமானப்படை 16)

பொலிஸ் அணி ட்ரை வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டாலும் அவ் அணியால் ட்ரை வைக்க முடியவில்லை. விமானப்படை அணியின் கிரிஷான் சூர்யா அபாயகரமான முறையில் எதிரணி வீரரைத் தடுத்ததினால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இருந்தாலும் சிறப்பாக செயற்பட்ட விமானப்படை அணியானது பொலிஸ் அணிக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. இதனால் பெனால்டி வாய்ப்பொன்றை பெற்ற விமானப்படை அணியானது சரித் மூலமாக மேலும் 3 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. (பொலிஸ் 07 – விமானப்படை 19)

சிறப்பான விளையாட்டை வெளிக்காட்ட முடியாமற்போன பொலிஸ் அணியானது மேலும் சிறு தவறுகளை மேற்கொண்டது. இதனால் மீண்டும் ஒரு முறை பெனால்டி வாய்ப்பை விமானப்படை அணி பெற்றது. தனது முன்னிலையை அதிகரித்துக்கொள்வதற்காக விமானப்படை அணி வெற்றிகரமாக கம்பத்தின் நடுவே உதைந்து 3 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது. (பொலிஸ் 07 – விமானப்படை 22)

போட்டியின் வெற்றியை விமானப்படை பெற்ற நிலையிலும் போட்டியை விட்டுக்கொடுக்காத பொலிஸ் அணியானது, விமானப்படை அணிக்கு அழுத்தத்தின் மேல் அழுத்தம் கொடுத்து தலைவர் உதார சூரியப்பெரும ஊடாக போட்டியின் இறுதி ட்ரையைப் பெற்றுக்கொண்டது. ராஜித சன்சோனி உதையை தவறவிட்டதால் 5 புள்ளிகளை மட்டுமே பெற்றுக்கொண்டது.

முழு நேரம் :  போலீஸ் 07 ( 2T, 1C )  – விமானப்படை 22 ( 1T, 1C , 5P )

Thepapare.com போட்டியின் சிறந்த வீரர் – சரித் செனவிரத்ன

விமானப்படை அணியின் பயிற்றுவிப்பாளரான க்ளெனார்ட் டி சில்வா நம்மிடம் கருத்து தெரிவித்த பொழுது “சீரற்ற காலநிலையில் நாம் அதற்கு இசைவாக்கம் அடைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். அனைத்து உதைகளையும் வெற்றிகரமாக உதைந்ததன் மூலம் எமக்கு கிடைக்கப்பெற்ற அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டது சிறப்பம்சமாகும்” எனக் குறிப்பிட்டார்.

மேலும் இப்போட்டிக்கான திட்டம் பற்றி விசாரித்த பொழுது “திட்டமொன்றுடனே நாம் களமிறங்கினோம். ஆனாலும் போட்டியின் மற்றும் மைதானத்தின் தன்மைக்கு அமைய திட்டம் மாறுபடலாம். நாம் அதற்கு ஏற்றது போல் சிறப்பாக விளையாடினோம். எமது முன் வரிசை வீரர்கள் சிறப்பான போட்டியை வெளிப்படுத்தினர்.” என்று கூறினார்.

இறுதியாக அணியின் பலவீனம் பற்றி விசாரித்த பொழுது “நாம் இன்று இறுதி நேரத்தில் எதிரணிக்கு ட்ரை வைக்க இடம் அளித்தோம். எனவே  எமது பின் வரிசை மற்றும் தடுப்பு பற்றி மேலும் கவனம் எடுக்க வேண்டும். பல வாய்ப்புகள் கிடைத்தும் அதன் மூலம் புள்ளிகளை பெற முடியவில்லை, இதை பற்றியும் கவனம் எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.