இன்று ஆரம்பமான டயலொக் றக்பி லீக் போட்டிகளில் முதல் போட்டியில்  இலங்கை கடற்படை அணி மற்றும் பொலிஸ் அணி மோதிக்கொண்டன. பலத்த மழையின் மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை கடற்படை அணி 29-08 என்று வெற்றிபெற்றது.

Visit the Dialog Rugby League Hub

கொழும்பு பொலிஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டிக்கு ஆரம்பம் முதலே மழை பெரும் இடையூறாக அமைந்தது. எனினும் போட்டி நியமித்த கால நேரத்தில் ஆரம்பமானது. இலங்கை கழகங்களுக்கிடையிலான றக்பி வரலாற்றில் முதன் முதலாக இப்போட்டியில் தொலைக்காட்சி நடுவர் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

போட்டி ஆரம்பமானதிலிருந்து ஆதிக்கம் செலுத்திய இலங்கை கடற்படை அணி முதலாவதாக ட்ரை வைத்து முன்னிலை அடைந்தது. ரிச்சி  தர்மபாலவின் உதவியுடன் சத்யா ரணதுங்க கம்பங்களின் நடுவில் ட்ரை வைத்தார். திலின வீரசிங்க உதையை தவறவிடாது 2 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார்.

இதற்கு பதிலடியாக உடனே செயற்பட்ட பொலிஸ் அணி, கடற்படை அணி வீரர் பந்தை தவறவிட அதை பயன்படுத்திய பொலிஸ் அணி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி தலைவர் உதார சூரியப்பெரும ஊடாக ட்ரை வைத்தது. ராஜித சந்தோணி உதையை தவறவிட்டதால் 5 புள்ளிகளை மட்டுமே பொலிஸ் அணி பெற்றுக்கொண்டது.

மழையின் காரணமாக மைதானம் மோசமான நிலையில் காணப்பட்டதோடு, பந்தும் அதிக வழுக்கும் தன்மை கொண்டு காணப்பட்டது. இதனால் இரு அணிகளின் வீரர்களின் கையிலிருந்து பந்து நழுவி விழுவதை அதிகமாகக் காணக்கூடியதாக இருந்தது.

முன்னால் கூறப்பட்டது போல் பொலிஸ் அணி வீரர் பந்தைக் கையாள தவறி நழுவவிட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய கடற்படை அணியின் லீ கீகள் கடற்படை அணி சார்பாக 2ஆவது ட்ரை வைத்தார். இம்முறையும் உதையைத் தவறவிடாத திலின வீரசிங்க 2 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். கடற்படை அணி 14 புள்ளிகள் பெற்று முன்னிலையில் காணப்பட்டது.

முதற் பாதியின் இறுதி நிமிடத்தில் பொலிஸ் அணி ட்ரை வைக்க கடினமாக முயன்ற பொழுதும், கடற்படை அணி வீரர்களால் அவை முறியடிக்கப்பட்டது. எனினும் பெனால்டி வாய்ப்பொன்றை வென்ற பொலிஸ் அணி, முதற் பாதி முடியும் வேளையில் மேலதிகமாக 3 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.

முதல் பாதி : பொலிஸ் 08 – கடற்படை 14

இரண்டாம் பாதி ஆரம்பித்து இரண்டாவது நிமிடத்தில் லீ கீகள் கடற்படை அணி சார்பாக ட்ரை வைத்தார். எனினும் அதை மீள்பரிசீலனை செய்த தொலைக்காட்சி நடுவர் அவர் பந்தை நழுவவிட்டதாக கூறியதால் அந்த ட்ரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

கடற்படை அணி வீரர் தினுஷ் சதுரங்க 44 ஆவது நிமிடத்தில் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

எனினும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய கடற்படை அணி பெனால்டி வாய்ப்பொன்றை வென்றது. தமக்கு கிடைத்த வாய்ப்பைத் தவறவிடாத கடற்படை அணி தமது மொத்தப் புள்ளிகளுடன் 3 புள்ளிகளைக் கூட்டிக்கொண்டது.

பொலிஸ் அணியின் பலவீனமான ஆட்டம் காரணமாக கடற்படை அணிக்கு மறுபடியும் சிறந்த வாய்ப்பு கிடைத்தது. இம்முறை துலஞ்சன வீரசிங்க  கடற்படை அணி சார்பாக 3ஆவது ட்ரை வைத்தார். இம்முறையும் திலின வீரசிங்க உதையை தவறவிடாததால் கடற்படை அணி 16 புள்ளிகளால் முன்னிலை பெற்றது.

பொலிஸ் அணியின் வீரர் மொஹமட் அப்சல் உதைத்த பந்தை பெற்றுக்கொண்ட கடற்படை அணியின் ரிச்சி தர்மபால சிறப்பாக எதிரணியை ஊடறுத்து வேகமாக ஓடி ட்ரை கோட்டின் அருகே வந்து சாணக சந்திமாலிற்கு பந்தை வழங்க, சாணக சந்திமால் கடற்படை அணி சார்பாக இறுதி ட்ரை வைத்தார். திலின வீரசிங்க  உதையை தவறவிட்ட பொழுதும் கடற்படை அணி ஏற்கனவே அதிக புள்ளிகளை பெற்று இருந்தது.

இறுதி நேரத்தில் பொலிஸ் அணியின் பின் வரிசை வீரர் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

முழு நேரம் : பொலிஸ் 08 – கடற்படை 29

இவ் வெற்றி பற்றி கடற்படை அணியின் பயிற்றுவிப்பாளரான மோதிலால் ஜயதிலக்க எமக்கு கருத்து தெரிவித்தபோது “எமது வீரர்கள் சிறப்பாக விளையாடியமை மகிழ்ச்சியைத் தருகிறது. கடும் மழையிலும் எமது வீரர்கள் இப்போட்டியில் ஆதிக்கம் செலுத்தியமை பாராட்டுக்குரியது” என தெரிவித்தார்.