மகளிர் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண T20  சம்பியன்ஷிப் போட்டித்தொடரில் இன்று நிறைவடைந்த, இலங்கை மகளிர் அணி மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணி ஆகியவற்றிற்கு இடையிலான போட்டியில் 8 விக்கெட்டுகளால் இலங்கை மகளிர் அணியை இலகுவாக தோற்கடித்து பாகிஸ்தான் மகளிர் அணி இத்தொடரில் முன்னிலை வகிக்கின்றது.

நேற்று தாய்லாந்தில் ஆரம்பமாகிய இந்த ஆசிய கிண்ண T20 சம்பியன்ஷிப் போட்டிகளில் பலப்பரீட்சை நடாத்த இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மகளிர் அணிகள் பங்குபற்றுகின்றன.

இதன்படி, இன்று தாய்லாந்தின் பெங்கொங் நகரில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணியின் புதிய அணித்தலைவி, ஹாசினி பெரேரா முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார். இதன்படி, களமிறங்கிய இலங்கை மகளிர் அணியினர் போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே, தங்களது முதலாவது விக்கெட்டினை ரன் அவுட் முறையில் பறிகொடுத்தனர். இது சிறப்பான ஆரம்பம் இல்லை என்பதால் நிதானித்து துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி இரண்டாவது மற்றும் மூன்றாவது விக்கெட்டுக்காக சிறந்த இணைப்பாட்டம் ஒன்றினை தந்தபோதும், மூன்றாவது விக்கெட்டின் பின்னர் தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்த காரணத்தினால் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 112 ஓட்டங்களை மாத்திரம் இலங்கை மகளிர் அணி பெற்றது.

இதில், இலங்கை மகளிர் அணி சார்பாக அதிகபட்சமாக ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கணையாக களமிறங்கிய சமரி அத்தபத்து 36 பந்துகளிற்கு 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்ளடங்களாக 31 ஓட்டங்களையும், டிலானி மனோதரா 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில், பாகிஸ்தான் மகளிர் அணி சார்பாக நஹிதா கான் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, சனா மிர், பாகிஸ்தான் மகளிர் அணித்தலைவி பிஸ்மாஹ் மஹ்ரூப், அனாம் அமீன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து, இலகு வெற்றி இலக்கான 113 ஓட்டங்களை பெற களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணி,  ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கணை ஜவேரியா கானின் அரைச்சத உதவியுடன், 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 113 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கினை அடைந்தது.

துடுப்பாட்டத்தில், வெற்றி பெறும் வரை ஆட்டமிழக்காமல் இருந்த பாகிஸ்தான் மகளிர் அணியின் ஜவேரியா கான் 51 பந்துகளிற்கு 5 பவுண்டரிகள் உள்ளடங்களாக 54 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

பந்து வீச்சில், சுகந்திக்க குமாரி மற்றும் எஸானி லோகுசூரியகே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை இலங்கை மகளிர் அணி சார்பாக கைப்பற்றியிருந்தனர்.

இத்தொடரில், இலங்கை மகளிர் அணி மோதும் அடுத்த போட்டி நேபாள மகளிர் அணியுடன் நாளை பெங்கொக் நகரில் இடம்பெறும்.

போட்டி சுருக்கம்

இலங்கை மகளிர் அணி: 112/8(20), சாமரி அத்தபத்து 31(36), டிலானி மனோதரா 24(23), பிரசாதினி வீரக்கொடி 21(22), நஹிதா கான் 2/17(4), அனாம் அமீன் 1/16(4)

பாகிஸ்தான் மகளிர் அணி: 113/2(18.2), ஜவேரியா கான் 56(51)*, நயின் அபிதி 28(24), சுஹந்திக்கா குமாரி 1/17(4)

போட்டி முடிவு: பாகிஸ்தான் மகளிர் அணி  8 விக்கெட்டுகளால் வெற்றி