பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில், முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களான ஷான் மசூத், சமி அஸ்லம் மற்றும் அசார் அலி ஆகியோரின் அரைச் சதங்களுடன் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் வலுவான நிலையில் காணப்படுகின்றது.

போட்டியின் இரண்டாம் நாளில் இலங்கை முதல் இன்னிங்சினை (419 ஓட்டங்களுடன்) நிறைவு செய்த பின்னர், பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்சினை ஆரம்பித்திருந்த பாகிஸ்தான் அணி 23 ஓவர்களுக்கு விக்கெட் இழப்புக்கள் ஏதுமின்றி 64 ஓட்டங்களினைப் பெற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவின் போது சிறப்பான தொடக்கம் ஒன்றினை வெளிக்காட்டியிருந்தது. களத்தில் ஆரம்ப வீரர்களான ஷான் மசூத் 30 ஓட்டங்களுடனும் சமி அஸ்லம் 31 ஓட்டங்களுடனும் நின்றிருந்தனர்.

தினேஷ் சந்திமாலின் சதத்துடன் இமாலய ஓட்டங்களைப் பெற்ற இலங்கை

இலங்கை அணியினை விட 355 ஓட்டங்கள் பின்தங்கியிருந்த பாகிஸ்தான் இன்று போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் தமது துடுப்பாட்டத்தினை தொடர்ந்தது.

பொறுப்புடன் ஆடிய பாகிஸ்தானின் ஆரம்ப வீரர்கள் முதலாம் விக்கெட்டுக்காக 114 ஓட்டங்களினை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். இலங்கைக்கு மிகவும் தேவையாக காணப்பட்டிருந்த பாகிஸ்தானின் முதல் விக்கெட்டினை போட்டியின் 45 ஆவது ஓவரில் தில்ருவான் பெரேரா மூன்றாம் நடுவரின் உதவியோடு கைப்பற்றியிருந்தார். இதனால் தனது 7 ஆவது டெஸ்ட் அரைச் சதத்தினை பூர்த்தி செய்த சமி அஸ்லம் 51 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினார்.  

சமி அஸ்லமின் விக்கெட்டினை அடுத்து, தில்ருவான் பெரேரா வீசிய அதே ஓவரில் புதிய துடுப்பாட்ட வீரராக மைதானம் விரைந்த அசார் அலியின் விக்கெட்டினை கைப்பற்றும் சந்தர்ப்பம் ஒன்றும் LBW முறையில் இலங்கைக்கு கிட்டியது. எனினும், மூன்றாம் நடுவர் அது ஆட்டமிழப்பில்லை என தீர்ப்பு வழங்க பாகிஸ்தானுக்கு அதிஷ்டம் கைகொடுத்தது.

எனினும் முதலாம் விக்கெட்டினை அடுத்து சில நிமிடங்களில் போட்டியின் மதிய போசண இடைவேளைக்கு முன்பாக இலங்கையின் முன்னணி சுழல் வீரர் ரங்கன ஹேரத்தினால் பாகிஸ்தானின் இரண்டாம் விக்கெட்டும் வீழ்த்தப்பட்டது. இம்முறை, அரைச் சதம் கடந்து சிறப்பான ஆட்டத்தினை காட்டியிருந்த மற்றைய ஆரம்ப வீரர் ஷான் மசூத் போல்ட் செய்யப்பட்டு 6 பெளண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்களுடன் மைதானத்தினை விட்டு வெளியேறினார்.

ஜோன் கீல்ஸ், எல். பி பினான்ஸ் அணிகளுக்கு இலகு வெற்றி

மதிய போசண இடைவேளையினை அடுத்து தொடர்ந்த ஆட்டத்தில்  புதிய வீரர்களான அசார் அலி மற்றும் அசாத் சபீக் ஆகியோர் மந்த கதியிலாக ஓட்டங்கள் சேர்த்து போதும் தமது அணியினை மெதுவாக கட்டியெழுப்பினர். மூன்றாம் நாளின் தேநீர் இடைவேளை வரை இலங்கை வீரர்களால் பாகிஸ்தானின் மேலதிக விக்கெட்டுக்கள் எதனையும் கைப்பற்ற முடியாது போயிருந்தது.

இன்று 32 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது பாகிஸ்தானின் அனுபவமிக்க துடுப்பாட்ட வீரர் அசார் அலி தனது 5,000 ஆவது டெஸ்ட் ஓட்டத்தினை கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

தேநீர் இடைவேளையினை அடுத்து புதிய பந்தின் மூலம் பாகிஸ்தானின் மூன்றாம் விக்கெட்டினை ரங்கன ஹேரத் கைப்பற்றியிருந்தார். இதனால் மூன்றாம் விக்கெட்டுக்காக 79 ஓட்டங்களினை பகிர உதவிய அசாத் சபீக் 39 ஓட்டங்களுடன் இலங்கை வீரர் லஹிரு திரிமான்ன எடுத்த பிடியெடுப்பு மூலம் ஆட்டமிழந்தார்.

எனினும், அசார் அலியின் 26 ஆவது டெஸ்ட் அரைச் சதத்தோடும், புதிய துடுப்பாட்ட வீரர் பாபர் அசாமின் ஓட்ட உதவியோடும் பாகிஸ்தான் அணி 250 ஓட்டங்களினை நெருங்கி வலுவடைந்தது.

71 ஓட்ட இணைப்பாட்டத்துடன் பாகிஸ்தானின் நான்காம் விக்கெட் பறிபோக போட்டியின மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவடைந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.

பாகிஸ்தானின் நான்காம் விக்கெட்டாக நுவான் பிரதீப்பினால் வீழ்த்தப்பட்ட பாபர் அசாம் நல்லதொரு ஆரம்பத்தினை காட்டியிருந்த போதிலும் அதனை நீண்ட இன்னிங்சாக மாற்றத்தவறி 28 ஓட்டங்களுடன் வெளியேறியிருந்தார்.

போட்டியின் மூன்றாம் நாள் நிறைவின் போது பாகிஸ்தான் அணி தமது முதல் இன்னிங்சுக்காக 112.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 266 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணியினை விட 153 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. அசார் அலி 74 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நிற்கின்றார்.  

இலங்கை அணி சார்பான இன்றைய பந்து வீச்சில் பாகிஸ்தானை கட்டுப்படுத்தும் படி செயற்பட்ட ரங்கன ஹேரத் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை (முதல் இன்னிங்ஸ்) – 419 (154.5) தினேஷ் சந்திமால் 155(372)*, திமுத் கருணாரத்ன 93 (205), நிரோஷன் திக்வெல்ல 83(117), யாசிர் சாஹ் 120/3 (57), மொஹமட் அப்பாஸ் 75/3 (26.5), ஹசன் அலி 88/2 (27)

பாகிஸ்தான் (முதல் இன்னிங்ஸ் ) – 266/4 (112.4) அசார் அலி 74(200)*, ஷான் மசூத் 59(148), சமி அஸ்லம் 51(130), ரங்கன ஹேரத் 47/2 (25)

போட்டியின் நான்காம் நாள் நாளை தொடரும்