ஐக்கிய அரபு இராச்சிய மண்ணில் வரலாறு படைத்த நியுசிலாந்து அணி

389

பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியுஸிலாந்து அணி 123 ஓட்டங்களால் வெற்றி பெற்று 2-1 என தொடரை கைப்பற்றியது.

இந்த வெற்றியானது சுமார் 50 வருடங்களில் நியுசிலாந்து தமது சொந்த மண்ணில் இல்லாமல் பாகிஸ்தான் அணியை டெஸ்ட் தொடர் ஒன்றில் வெற்றிகொண்ட முதல் சந்தரப்பமாகும்.  

இரண்டு போட்டிகள் முடிவுற்று இரு அணிகளும் ஒவ்வொரு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்த 3ஆம் திகதி ஆரம்பமானது.  போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

யாசிர் ஷாஹ்வின் மாய சுழலில் வீழ்ந்தது நியூஸிலாந்து அணி

கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமான பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு…

பாகிஸ்தான் அணி சார்பாக ஷஹீன் அஃப்ரிடி மற்றும் நியுசிலாந்து அணியில் வில்லியம் சமர்வில் ஆகியோர் தமது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தமை விஷேட அம்சமாகும்.  

தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி சிறப்பான ஆரம்பம் ஒன்றை பெற்றுக் கொள்ள முடியாமை மற்றும் ஒரு சில துடுப்பாட்ட வீரர்கள் தவிர ஏனைய வீரர்கள் போதிய அளவு பங்களிப்புக்களை வழங்க தவறியமை போன்ற காரணங்களால் சகல விக்கெட்டுகளையும் இழந்து 274 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.  

துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் வில்லியம்சன் 89 ஓட்டங்களையும் வொட்லிங் ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களையும் பெற்று தமது அணிக்காக பங்காற்றியிருந்தனர்.  பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் சுழல் பந்து வீச்சாளர்களான ஆஷிப் 5 விக்கெட்டுகளையும் யசீர் ஷாஹ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

பாகிஸ்தான் அணியின் முதலாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய, தனது இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடும் மொஹமட் ஹபீஸ் பூச்சியத்துடன் ஆட்டமிழக்க அவ்வணி ஓட்டமெதுவும் பெறாத நிலையில் தமது முதலாவது விக்கெட்டை இழந்தது. தொடர்ந்து 85 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் நான்காவது விக்கெட்டுக்காக கைகோர்த்த அஸார் அலி மற்றும் அசாத் ஷபீக் ஜோடி இணைந்து 201 ஓட்டங்கள் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு பங்காற்றியிருந்தனர்.  

>> டெஸ்ட் கிரிக்கெட்டில் 82 வருடகால சாதனையை முறியடித்த யசீர் ஷா

அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 286 ஆக இருந்த போது அஸார் அலி 134 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அசாத் ஷபீக் 104 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததுடன் ஏனைய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இறுதியில் பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 348 ஓட்டங்களைப் பெற்றது. இதனால் அவ்வணி வீரர்கள் முதலாவது இன்னிங்ஸில் நியுசிலாந்து அணியை விட 74 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய நியுசிலாந்து அணியின் அறிமுக வீரர் வில்லியம் சமர்வில் நான்கு விக்கெட்டுகளை பைப்பற்றியிருந்தார்.

தொடர்ந்து, 74 ஓடங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த நியுசிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்ட நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு 26 ஓட்டங்கள் பெற்றிருந்தது. எனினும், நேற்று (6) நான்காம் நாள் ஆட்டத்தில் நியுசிலாந்து அணி, அணித்தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் ஹென்றி நிக்கோலஸ் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டம் காரணமாக நியுஸிலாந்து அணியின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டுக்காக 212 ஓட்டங்களை பெற்றிருந்த போது நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 139 ஓட்டங்களுடனும் நிக்கோலஸ் ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.  

நேற்றைய தினம் (06) வில்லியம் சமர்விலின் விக்கெட்டை கைப்பற்றிய யாசிர் ஷாஹ் டெஸ்ட் போட்டிகளில் தனது 200 ஆவது விக்கெட்டை கைப்பற்றியிருந்தார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை தன் வசமாக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் 33 போட்டிகளில் இச்சாதனையை நிலைநாட்டியிருந்தார்.

4 விக்கெட்டுகளை இழந்து 272 ஓட்டங்கள் பெற்று 198 ஓட்டங்கள் முன்னிலையில் இன்றைய (7) இறுதி நாள் ஆட்டத்தில் தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த நியுசிலாந்து அணி, இன்று வீசப்பட்ட முதலாவது பந்திலே வில்லியம்சனின் விக்கெட்டை இழந்தது.

தொடர்ந்து நிக்கோலஸ் மற்றும் கிரன்ட்ஹோம் ஆகியோர் அதிரடியாக ஓட்டங்களை குவித்தனர். இறுதியில் நியுசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழந்து 353 ஓட்டங்களை பெற்று பாகிஸ்தான் அணிக்கு 280 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்து தமது இன்னிங்ஸை நிறுத்திக் கொண்டது. நிக்கோலஸ் ஆட்டமிழக்காமல் 126 ஓட்டங்கள் பெற்றிருந்ததுடன் பந்து வீச்சில் யாசிர் ஷாஹ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.

டெஸ்ட் தொடரை வெற்றி கொள்வதற்கு 280 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய பாகிஸ்தான் அணி மதிய போசணத்திற்கு  போட்டி நிறுத்தப்படும் போது 55 ஓட்டங்களுக்கு முதல் 5 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய நியுஸிலாந்து அணி பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் அணி 156 ஓட்டங்களுக்கு சுருட்டியதன் மூலம் 123 ஓட்டங்களால் வரலாற்று வெற்றியை பதிவு செய்தனர்.

பாகிஸ்தான் அணி சார்பாக  பாபர் அசாம் அதிகபட்சமாக 51 ஓட்டங்கள் பெற்றுக் கொடுத்தார். சிறப்பாக பந்து வீசிய நியுசிலாந்து பந்து வீச்சாளர்களான அஜாஸ் பட்டேல், டிம் சௌத்தி  மற்றும் சமர்வில் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு பங்காற்றினர்.

>> ஒரு வருடத்தில் இரு மடங்காக அதிகரித்த விராட் கோஹ்லியின் வருமானம்

இவ்வெற்றியானது 1969 ஆம் ஆண்டுக்கு பின்னர் பாகிஸ்தான் அணியை நியுசிலாந்து மண்ணில் அல்லாத வெளியில் டெஸ்ட் தொடரில் அவ்வணி வெற்றி கொண்ட முதலாவது சந்தர்ப்பமாகும். மேலும் 2008 ஆம் ஆண்டின் பின்னர் ஆசிய மண்ணில் பெற்ற தொடர் வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது.  

போட்டியின் ஆட்ட நாயகனாக நியுசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், தொடர் நாயகனாக மூன்று போட்டிகளிலும் மொத்தமாக 29 விக்கெட்டுகளை வீழ்த்திய யாசிர் ஷாஹ் தெரிவாகியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

நியுசிலாந்து ( முதல் இன்னிங்ஸ் )  274வில்லியம்சன் 89, வொட்லிங் 77*, பிலால் ஆஷிப் 65/5, யாசிர் ஷாஹ் 75/3

பாகிஸ்தான் ( முதல் இன்னிங்ஸ் ) 348அஸார் அலி 134, அசாத் ஷபீக் 104,  சமர்வில் 75/4, ட்ரெண்ட் போல்ட் 66/2

நியுசிலாந்து (இரண்டாவது இன்னிங்ஸ் ) 353/7dவில்லியம்சன் 139, நிக்கோலஸ் 126*, யாசிர் ஷாஹ் 129/4, ஷஹீன் அஃப்ரிடி 85/2

பாகிஸ்தான் ( இரண்டாவது இன்னிங்ஸ் ) 156பாபர் அசாம் 51, அஜாஸ் பட்டேல் 42/3, சௌத்தி 42/3, சமர்வில் 52/3

முடிவு : நியுஸிலாந்து அணி 123 ஓட்டங்களால் வெற்றி.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<