இங்கிலாந்து, அயர்லாந்து டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் குழாம் இதுதான்

654

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று, அந்நாட்டு அணிகளுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கின்றது.

இந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள 16 பேர் அடங்கிய பாகிஸ்தான் குழாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக பாகிஸ்தான் அயர்லாந்து அணியுடன் இடம்பெறுகின்ற ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதன் மூலம், கடந்த ஆண்டு டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்றுக் கொண்ட அயர்லாந்துடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முதல் அணியாகவும் பாகிஸ்தான் மாறுகின்றது.

அயர்லாந்து அணியுடனான டெஸ்ட் போட்டியை அடுத்து இங்கிலாந்துக்குச் செல்லும் பாகிஸ்தான் அணி, அடுத்த மாத இறுதியில் இங்கிலாந்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடர்களுக்கான பாகிஸ்தான் குழாமில், ஐந்து அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அறிமுக வீரர்களாக இளம் துடுப்பாட்ட நட்சத்திரங்களான பக்கார் சமான், இமாம் உல் ஹக், உஸ்மான் சலாஹூத்தின், சாத் அலி ஆகியோரும் சகலதுறை வீரரான பாஹிம் அஷ்ரப்பும் அமைகின்றனர்.

“அடுத்த வருடம், இங்கிலாந்தில் உலகக் கிண்ணப் போட்டிகள் இடம்பெறவிருக்கின்றது. எனவே, அந்நாட்டின் நிலைமைகளுக்கு பழக்கப்பட சில இளம் வீரர்களை அழைத்திருக்கின்றோம்“ என பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட தெரிவுக்குழு உறுப்பினர் இன்சமாம் உல் ஹக் இளம் வீரர்கள் அதிகளவில் உள்வாங்கப்பட்டிருப்பதன் காரணத்தை ஊடகங்களுக்கு விளக்கியிருந்தார்.

காயம் காரணமாக, அனுபவமிக்க சுழல் வீரரான யாசிர் சாஹ்வுக்கு இந்த இரண்டு டெஸ்ட் தொடர்களிலும் பங்கேற்க முடியாது போயிருக்கின்றமை பாகிஸ்தான் அணிக்கு பெரும் இழப்பாகும். யாசிரின் இடத்தை இதுவரை ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மாத்திரம் விளையாடிய சுழல் வீரரான சதாப் கான் எடுத்துக் கொள்கின்றார்.

>> இந்திய – பாகிஸ்தான் கிரிக்கெட் விரிசலுக்கு விரைவில் ஐ.சி.சியினால் தீர்வு

உள்ளூர் போட்டிகளில் அண்மைக்காலமாக சிறப்பாக செயற்பட்டு முதல் தர துடுப்பாட்ட சராசரியாக 55.37 ஓட்டங்களை கொண்டிருக்கும் 32 வயதான பவாத் அலாமுக்கு, பாகிஸ்தான் அணியின் நிர்வாகம் இந்த டெஸ்ட் போட்டிகளுக்காக வாய்ப்பளிக்கவில்லை. பவாத் அலாமுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது, தற்போது சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பேசுபொருளுக்குரிய ஒரு விடயமாக மாறியிருக்கின்றது.

இந்த டெஸ்ட் போட்டிகளில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சுத்துறையை முன்னெடுக்கும் முக்கிய வீரராக மொஹமட் ஆமீர் காணப்பட ராஹத் அலி அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். எனினும், பாகிஸ்தான் அணியின் மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளரான வஹாப் ரியாஸ் அணியில் இடம்பெறவில்லை.

பாகிஸ்தான் அணியை வழமை போன்று இந்த டெஸ்ட் போட்டிகளிலும் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான சர்பராஸ் அஹ்மட் தலைமை தாங்குகின்றார்.

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் உடனான டெஸ்ட் போட்டிகளை முடித்த பின்னர் பாகிஸ்தான், ஸ்கொட்லாந்து அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் குழாம் – சர்பராஸ் அஹ்மட் (அணித்தலைவர் மற்றும் விக்கெட்காப்பாளர்), அசார் அலி, பக்கார் சமான், சமி அஸ்லம், இமாம் உல் ஹக், பாபர் அசாம், அசாத் சபீக், ஹாரில் சொஹைல், உஸ்மான் சலாஹூத்தின், சாத் அலி, சதாப் கான், பாஹிம் அஷ்ரப், மொஹம்மட் ஆமீர், ஹசன் அலி, ராகத் அலி, மொஹமட் அப்பாஸ்

டெஸ்ட் தொடர் அட்டவணை

ஒரேயொரு டெஸ்ட் போட்டி – பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து – மே மாதம் 11ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை – டப்ளின், அயர்லாந்து

முதல் டெஸ்ட் போட்டி – பாகிஸ்தான் எதிர் இங்கிலாந்து – மே மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை – லோர்ட்ஸ், லண்டன்

இரண்டாவது டெஸ்ட் போட்டி – பாகிஸ்தான் எதிர் இங்கிலாந்து – ஜூன் முதலாம் திகதி தொடக்கம் 5 ஆம் திகதி வரை – ஹெடிங்லீ, லீட்ஸ்