நேபாளத்தின் தலைநகர் கத்மண்டு மற்றும் பொக்கராவில் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா நேற்று (10) கோலாகலமாக நிறைவுக்கு வந்தது.
நேபாளத்தின் துணைப் பிரதமர் ஈஷ்வர் பொகரல் தலைமையில் நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்வில், அடுத்த தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்துவதற்கான வாய்ப்பு இலங்கைக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கான கொடியை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ள விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க நேபாளம் சென்றிருந்தார்.
எனினும், பாகிஸ்தான் ஒலிம்பிக் சங்கம் விடுத்த கோரிக்கையினை அடுத்து 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவை அங்கு நடத்துவதற்கு தெற்காசிய ஒலிம்பிக் குழு நடடிக்கை எடுத்தது.
2021 தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்த இலங்கை கோரிக்கை
எதிர்வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 14ஆவது…
இதன்படி, 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழா எதிர்வரும் 2021ஆம் ஆண்டு லாகூரில் நடைபெறும் என நேற்று (10) நடைபெற்ற நிறைவுநாள் நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக அறிவிக்க்பபட்டது. இதற்கான கொடியும் பாகிஸ்தானிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு நிலவரங்களை ஆராய்ந்து அங்கு தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்துவதற்கு முடியுமா என்பதை உறுதிப்படுத்துவதற்கு 6 மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே அங்குள்ள பாதுகாப்பு குறித்து ஏனைய நாடுகளுக்கு திருப்தி ஏற்பட்டால் மாத்திரமே அங்கு 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்த முடியும் என தெற்காசிய ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.
அந்த வகையில் பாகிஸ்தானில் 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழா நடைபெற்றால் இந்தியா பங்கேற்பது சந்தேகம் தான். அதனால் அடுத்த தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்தும் வாய்ப்பு பெரும்பாலும் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுதொடர்பில் தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் கருத்து வெளியிடுகையில், 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவை பாகிஸ்தானில் நடத்துவது குறித்து அந்நாட்டு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் என்னுடன் உரையாடினார்.
இதன்போது 2022இல் லாகூரில் குறித்த தொடரை நடத்தவதற்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும், அதற்காக ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் தெரிவித்தார்.
எனவே அண்டை நாட்டு சகோதரர்களாக 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்தவதற்கான வாய்ப்பை பாகிஸ்தானுக்கு வழங்குவதற்கு நாங்கள் சம்மதம் தெரிவித்தோம்.
அவ்வாறு பாகிஸ்தானால் தெற்காசிய விளையாட்டு விழாவை நடத்த முடியாது போனால், 2021இல் நடைபெறவுள்ள 14ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவை இலங்கை மற்றும் மாலைதீவுகள் இணைந்து நடத்தும் எனவும் அறிவிக்கப்பட்டது.
SAG சென்ற இலங்கை வீரர்கள் பதினொருவருக்கு டெங்குக் காய்ச்சல்
நேபாளத் தலைநகர் கத்மண்டுவில் நடைபெற்று வருகின்ற 13ஆவது…
முன்னதாக, பாகிஸ்தானில் 1989 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் தெற்காசிய விளையாட்டு விழா நடைபெற்றதுடன், இலங்கையில் 1991 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும், மாலைதீவுகள் இதுவரை போட்டிகளை நடத்தியது கிடையாது.
இதன்படி, 2022இல் இலங்கைகு அந்த வாய்ப்பு கிடைத்தால் மாலைதீவுகளில் கடற்கரை கரப்பந்தாட்டம் மற்றும் கால்பந்து போட்டிகளை அங்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
>>தெற்காசிய விளையாட்டு விழா கொடர்பான மேலதிக தகவல்களை படிக்க<<