இலங்கை கிரிக்கெட் சபையின் கடுமையான தண்டனைக்கு ஆளான வெண்டர்சே

330

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டிக்கு முன்னர், தவறான நடத்தை காரணமாக நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட, இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் ஜெப்ரி வெண்டர்சேவுக்கு கிரிக்கெட் சபை ஒருவருட இடைநீக்க தண்டனையை வழங்கியுள்ளது.

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்டின்  இறுதிநாள் ஆட்டத்தின் பின்னர், ஜெப்ரி வெண்டர்சே மற்றும் இலங்கை அணியின் மூன்று வீரர்கள் சென்-லூசியாவில் உள்ள இரவு விடுதிக்கு சென்றுள்ளனர். இதன் போது இலங்கை வீரர்கள் இருவர் அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வருகைத்தந்த நிலையில், ஜெப்ரி வெண்டர்சே ஹோட்டலுக்கு திரும்பவில்லை.

இதனால் இலங்கை கிரிக்கெட் சபை, 28 வயதான ஜெப்ரி வெண்டர்சே ஹோட்டலில் இருந்து காணமால் போயுள்ளார் என சென்-லூசியா பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். குறித்த முறைப்பாட்டினை கொடுத்த சில மணிநேரங்களில், வெண்டர்சே ஹோட்டலுக்கு திரும்பியுள்ளார்.

ஐ.சி.சியினால் விதிக்கப்பட்ட தடைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் எதிர்ப்பு

ஹோட்டல் அறைக்கு திரும்பிய ஜெப்ரி வெண்டர்சேவிடம் கிரிக்கெட் சபையின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது குறிப்பிட்ட வெண்டர்சே, இலங்கை அணியைச் சேர்ந்த இருவருடன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார் எனவும், ஆனால் குறித்த இரு வீரர்களும் அவரை ஹோட்டலில் தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டதாகும் குறிப்பிடார். அத்துடன் குறித்த வீரர்கள் அணியின் ஹோட்டலுக்கு திரும்பி விட்டதால், தனக்கு வருவதற்கான வழி தெரியவில்லை. அதனால்தான் இரவு அணி தங்கியிருந்த ஹோட்டலுக்கு வரவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இதனைத்த தொடர்ந்து கிரிக்கெட் அணியின் ஒழுக்க விதியை மீறியதாக தெரிவித்து ஜெப்ரி வெண்டர்சேவை இலங்கை கிரிக்கெட் சபை, மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இலங்கைக்கு அனுப்பியது. தற்போது இது தொடர்பிலான விசாரணைகளை நிறைவுசெய்த கிரிக்கெட் சபை வெண்டர்சேவுக்கு ஒரு வருட இடைநீக்க தண்டனையை வழங்கியுள்ளது. அத்துடன் அவருக்கான வருடாந்த ஒப்பந்தத் தொகையிலும் 20 சதவீதம் அபராதமாக அறவிடப்பட்டுள்ளது.

ஜெப்ரி வெண்டர்சே, அவருக்கு வழங்கப்பட்டுள்ள இடைநீக்க தண்டனைக் காலத்தில், இலங்கை கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்தை மீறிய குற்றங்களை புரிவாராயின், பாரபட்சமற்ற தண்டனைகள் வழங்கப்படும் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் தண்டனை குறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ஜெப்ரி வெண்டர்சே, நாட்டின் மகத்துவத்திற்கு பங்கம் விளைவித்தமைக்காக இலங்கை மக்கள் அனைவரிடம் மன்னிப்புக்கோரியுள்ளார். அத்துடன் இலங்கை கிரிக்கெட் சபை தனது தவறுக்காக ஒருவருட தடை கொடுத்துள்ளதை உணர்ந்துள்ள வெண்டர்சே, இனிவரும் காலத்தில் நாடும், கிரிக்கெட் அணியும் பெருமை கொள்ளும் விதத்தில் நடந்துக்கொள்வேன் என உறுதிமொழி அளித்துள்ளார்.

இலங்கை அணிக்காக ஜெப்ரி வெண்டர்சே 11 ஒருநாள் மற்றும் 7 T-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அத்துடன் தற்போது நடைபெற்று வரும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இலங்கை அணியின் பயிற்சி நேரங்களிலும் அவரை மைதானத்தில் காணமுடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<