மீண்டும் சுப்பர் ஓவரில் இந்தியா அசத்த நியூசிலாந்துக்கு ஏமாற்றம்

159
Getty image

நியூஸிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியிலும் இந்திய அணி சுப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. 

நியூஸிலாந்து சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, நியூஸிலாந்து அணியுடன் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வினையாடி வருகின்றது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிய நிலையில் இரு அணிகள் இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று (31) நடைபெற்றது

நியூசிலாந்துக்கு அதிர்ச்சித் தோல்வியை வழங்கிய இந்திய அணி

சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து….

நியூஸிலாந்து அணிக்குப் பின்னடைவாக அணித் தலைவர் கேன் வில்லியம்சன் தோள்பட்டை காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக டிம் சௌத்தி தலைவராகச் செயற்பட்டார்.   

இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதுடன், மொஹமட் ஷமி, ஜடேஜாவுக்குப் பதிலாக நவ்தீப் சைனி மற்றும் வொஷிங்டன் சுந்தர் விளையாடியிருந்தனர்

வெலிங்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கே.எல் ராகுல், சஞ்சு சம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கே.எல் ராகுல் அதிரடி காட்ட சஞ்சு சம்சன் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோஹ்லி 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்

அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு ஓட்டத்துடன் வெளியேற இந்தியாவின் ஓட்ட வேகம் குறைந்தது. எனினும், கே.எல் ராகுல் போட்டியை கடைசி வரை கொண்டு செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் 26 பந்துகளில் 3 பௌண்டரி, 2 சிக்சருடன் 39 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்

சச்சின், சேவாக்குடன் சாதனைப் பட்டியலில் இணந்த ரோஹித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க…..

அதன்பின் வந்த ஷிவம் துபே 12 ஓட்டங்களுடனும், வொஷிங்டன் சுந்தர் டக்அவுட்டிலும் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்

இதனையடுத்து களமிறங்கிய மணிஷ் பாண்டே சிறப்பாக விளையாடி ஓட்டக்களைக் குவித்தார். ஷர்துல் தாகூர் 15 பந்தில் 20 ஓட்டங்களை எடுத்து நம்பிக்கை கொடுத்தார். இதனால் இந்திய அணி 150 ஓட்டங்களை நோக்கி சென்றது

கடைசி ஓவரின் முதல் பந்தை பௌண்டரிக்கு விரட்டிய மணிஷ் பாண்டே, ஐந்தாவது பந்தில் ஒரு ஓட்டத்தை அடித்து 36 பந்துகளில் அரைச்சதம் கடந்தார்.  

இதன்படி, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ஷ் சோதி 3 விக்கெட்டுகளையும், ஹமிஷ் பென்னட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

முன்னணி வீரர்கள் உபாதையில்: நியூசிலாந்து ஒருநாள் குழாமில் பல மாற்றம்

நியூசிலாந்து சென்றிருக்கும் இந்திய…….

பின்னர், நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டில் (4), கொலின் மன்ரோ ஜோடி நிதான தொடக்கத்தை பெற்றுக் கொடுத்தது. மன்ரோ 64 ஓட்டங்களை அதிகபட்சமாக விளாசினார்.

புரூஸ் டக் அவுட் ஆன போதும் ரொஸ் டெய்லர், செபெர்ட் இணைந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர்

கடைசி ஓவரில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு வெறும் 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஷர்துல் தாகூர் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் டெய்லர் ஆட்டமிழந்தார்.  

இரண்டாவது பந்தில் மிட்செல் சாண்ட்னர் பௌண்டரி அடித்தார். ஆனால் மூன்றாவது பந்தை அவர் அடிக்காமல் விட, அதற்கு ஓட்டத்தை எடுக்க ஓடும்போது செபெர்ட் ரன் அவுட்டானார்

நான்காவது பந்தில் மிட்செல் சாண்ட்னர் ஒரு ஓட்டத்தை அடித்தார். ஐந்தாவது பந்தில் மிட்செல் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், இரண்டாவது ஓட்டத்தை எடுக்க ஓடும்போது சாண்ட்னர் ரன் அவுட்டானார். இதையடுத்து போட்டி சமநிலையில் முடிந்தது.

வெற்றியாளரை முடிவு செய்ய சுப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இந்தியா சார்பில் பும்ரா பந்து வீசினார். முதல் 3 பந்தில் பௌண்டரி உட்பட 8 ஓட்டங்களை எடுத்த செபெர்ட், 4ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த இரு பந்தில் கொலின் மன்ரோ 4 ஓட்டங்களை எடுக்க, நியூஸிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 13 ஓட்டங்களை எடுத்தது.

14 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணிக்காக ராகுல், கோஹ்லி களமிறங்கினர். சௌத்தி பந்து வீசினார். முதல் பந்தில் சிக்சர் அடித்த ராகுல், அடுத்த பந்தில் பௌண்டரி விளாசினார். அடுத்த பந்தில் ராகுல் ஆட்டமிழந்தார்.   

4ஆவது பந்தில் கோஹ்லி 2 ஓட்டங்களை எடுத்தார். அடுத்த பந்தில் கோஹ்லி பௌண்டரி அடிக்க இந்திய அணி (16/1), வெற்றி பெற்றது

கிரிக்கெட் விளையாட்டுக்கு மீளும் குமார் சங்கக்கார

இலங்கையின் கிரிக்கெட் காதலர்களுக்கு……

ஏற்கனவே, மூன்றாவது போட்டியில் சுப்பர் ஓவரில் வென்ற இந்தியா, இன்று நடைபெற்ற 4ஆவது போட்டியிலும் அபார வெற்றி பெற்று 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் 4க்கு 0 என முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகனாக கடைசி ஓவரை அற்புதமாக வீசிய ஷர்துல் தாகூர் தேர்வு செய்யப்பட்டார்

இறுதியாக இந்த மைதானத்தில் 2009 மற்றும் 2019இல் நடைபெற்ற 2 டி20 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவியிருந்தது. தற்போது அதற்கு பதிலடி கொடுத்துள்ளது

அத்துடன், கடைசியாக இந்த மைதானத்தில் நடைபெற்ற 3 டி20 போட்டிகளிலும் முதலில் துடுப்பெடுத்தாடிய அணி தான் வெற்றி பெற்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இவ்விரு அணிகளுக்குமிடையிலான 5ஆவதும், இறுதியுமான டி20 போட்டி நாளை மறுதினம் (02) மவுண்ட் மௌண்கணுய்யில் நடைபெறவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<