இலங்கை மற்றும் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்குபற்றும் ‘ஒரே உலகம், ஒரே குடும்பம்’ (One World One Family Cup 2025) கிரிக்கெட் தொடர் பெப்ரவரி 8ஆம் திகதி இந்தியாவின் கர்நாடாகாவில் நடத்தப்படவுள்ளது.
இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தொடரானது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் முத்தேனஹள்ளியில் உள்ள சத்ய சாயி கிராமத்தில் சாயி கிருஷ்ணன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கிரிக்கெட்டின் மிக குறுகிய வடிவங்களில் ஒன்றாக அனைரும் மிக விரும்புகின்ற T20 வடிவில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.
‘வாசுதய்வ குடும்பகம்’ என்ற பண்டைய இந்திய கருத்தாக்கத்திலிருந்து ஊக்கம் பெற்ற ‘ஒரே உலகம், ஒரே குடும்பம்’ என்ற கருத்தின் அடிப்படையில் மாற்றத்திற்கான இயக்கமாக இது அமைகிறது. ஸ்ரீ மதுசூதன் சாயி குளோபல் ஹியுமானிடேரியன் மிஷன் ஏற்பாடு செய்துள்ள இந்தத் தொடர், இலவச ஊட்டச்சத்து, கல்வி மற்றும் சுகாதார சேவைகள் மூலம் மனிதநேயத்தை மேம்படுத்துவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது.
- வோர்ன் – முரளி நினைவுப்பதாதை காலி சர்வதேச மைதானத்தில்
- உலக கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் தலைவராக குமார் சங்கக்கார
அதேபோல, ‘நோக்கத்திற்கான கிரிக்கெட்’ என்ற கருப்பொருளின் கீழ் இந்தப் போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த போட்டி உயர்தர கிரிக்கெட் நடவடிக்கைகளை காட்சிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எல்லைகளைக் கடந்து மக்களை ஒரு பெரிய நோக்கத்திற்காக ஒன்றிணைக்க விளையாட்டுக்கு உள்ள சக்தியையும் எடுத்துக்காட்டுகிறது. எனவே, விளையாட்டு மனப்பான்மையும், மனிதாபிமானமும் சந்திக்கும் இந்த தனித்துவமான போட்டியை காண கிரிக்கெட் ரசிகர்களும் மனிதாபிமான ஆதரவாளர்களும் அழைக்கப்படுகிறார்கள்.
ஒரே குடும்பம் இலங்கை அணியில் அரவிந்த டி சில்வா, டி.எம். டில்ஷான், சமிந்த வாஸ், அர்ஜுன ரணதுங்க, உபுல் தரங்க, முத்தையா முரளிதரன், நுவன் சொய்சா, திசர பெரேரா, தரங்க பரணவிதான, மிலிந்த சிறிவர்தன, அசேல குணரட்ன, திலான் துஷார, ரவீந்திர புஷ்பகுமார, அஜந்த மெண்டிஸ், ரொமேஷ் களுவிதாரண ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல, ஒரே குடும்பம் இந்திய அணியில் இர்பான் பத்தான், யூசுப் பத்தான், நாமன் ஓஜா, பத்ரிநாத், அசோக் டின்டா, பியூஸ் சௌலா, அபிமன்யு மிதுன், வெங்கடேஸ் பிரசாத், சுனில் ஜோசி, பார்தீவ் பட்டேல், சுஜித் சோமசுந்தர், மனோஜ் திவாரி ஆகிய இடம்பெற்றுள்ளனர்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<