பாகிஸ்தானின் உலகக் கிண்ண போட்டிகள் பங்களாதேஷில்?

154

இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில், பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகள் அனைத்தையும் பங்களாதேஷில் நடத்துவதற்கு ஐசிசி கவனம் செலுத்தியுள்ளதாக Espncricinfo இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மொத்தம் 10 அணிகள் பங்குபற்றுள்ள ஐசிசியின் 13ஆவது ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது.

இதற்காக சென்னை, மும்பை, பெங்களூரு, அஹமதாபாத் என 12 மைதானங்களை பிசிசிஐ இறுதி செய்துள்ளதுடன், ஒக்டோபர் 5ஆம் திகதி போட்டிகள் ஆரம்பமாகும் எனவும் இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் திகதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியா, பங்களாதேஷ், இலங்கை என மூன்று நாடுகள் இணைந்து ஒருநாள் உலகக் கிண்ணத்தை நடத்திய நிலையில் முதல் முறையாக இம்முறை ஒட்டுமொத்த ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரும் இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் இடையே நிலவி வருகின்ற அரசியல் ரீதியிலான முரண்பாடு காரணமாக இரு நாடுகளும் ஐசிசியின் தொடர்கள் மற்றும் ஆசியக் கிண்ணம் தவிர வேறு எந்தவொரு இருதரப்பு தொடர்களிலும் விளையாடுவதில்லை.

இதனிடையே, ஒருநாள் உலகக் கிண்ணதிற்கு முன்னர் ஆசியக் கிண்ணத் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. எனினும், பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாட, இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது எனவும், ஆசியக் கிண்ணத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் பிசிசிஐ இன் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார். இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தானில் ஆசியக் கிண்ணம் நடைபெறாவிட்டால் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கிண்ணத்தை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மிரட்டல் விடுத்தது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. சில நாட்களுக்கு முன்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைகளுக்கு இடையே விசேட கூட்டமும் நடைபெற்றது. இதில் ஆசியக் கிண்ணத்தை எங்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தியா மோதும் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தாமல் பொதுவான இடத்தில் நடத்துவதற்கான யோசனை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஆசியக் கிண்ணத்தை பாகிஸ்தானில் நடத்தவும் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை மட்டும் பொதுவான இடத்தில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இந்திய அணியைப் போல, பாகிஸ்தான் அணியும் இந்தியாவிற்கு சென்று ஒருநாள் உலகக் கிண்ணத்தில் விளையாட மாட்டோம் என தெரிவித்து வருகின்ற நிலையில், இந்த விவகாரம் குறித்து டுபாயில் சமீபத்தில் இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் விவாதித்தனர்.

இதில் பாகிஸ்தான் அணி விளையாடுகின்ற போட்டிகளை மாத்திரம் பங்களாதேஷில் நடத்தலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது. இந்த விடயத்தில் விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்க்பபட்டுள்ளது.

எவ்வாறாயினும், பாகிஸ்தான் அணி விளையாடவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள் பங்களாதேஷில் நடைபெறும் என வெளியாகிய செய்தியை சர்வதேச கிரிக்கெட் பேரவையும், இந்திய கிரிக்கெட் சபையும் (பிசிசிஐ) நிராகரித்துள்ளதாக cricbuzz இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<