இலங்கையின் வாய்ப்பை பறிக்க தென்னாபிரிக்காவின் பலமான குழாம்!

Netherlands tour of South Africa 2023

583

நெதர்லாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட ஐசிசி சுபர் லீக்கிற்கான ஒருநாள் தொடரில் முழு பலத்துடனான குழாத்தை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை பெயரிட்டுள்ளது.

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ணத்துக்கு நேரடியான தகுதியை பெற்றுக்கொள்வதற்கு தென்னாபிரிக்க அணி இந்த 2 போட்டிகளிலும் கட்டாய வெற்றியை பதிவுசெய்யவேண்டும்.

KKR அணிக்கு புதிய தலைவர்

அதன்காரணமாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஓய்வு வழங்கப்பட்டிருந்த அன்ரிச் நோக்கியா மற்றும் காகிஸோ ரபாடா ஆகிய முன்னணி வீரர்களை உள்ளடக்கி நெதர்லாந்து தொடருக்கான குழாத்தை அறிவித்துள்ளது.

அதுமாத்திரமின்றி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் எய்டன் மர்க்ரம், குயிண்டன் டி கொக், ஹென்ரி கிளாசன், மார்கோ யான்சன், லுங்கி என்கிடி, டேவிட் மில்லர் மற்றும் சிசண்ட மகலா ஆகியோர் IPL தொடரின் ஆரம்ப போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்துக்கொண்டு இந்த தொடருக்கான குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தெம்பா பௌவுமா தலைமையிலான தென்னாபிரிக்க அணியானது, நெதர்லாந்து அணிக்கு எதிரான முழுமையான 20 புள்ளிகளை பெற்றுக்கொள்வதற்கு 2 போட்டிகளிலும் வெற்றிபெறவேண்டும். 2 போட்டிகளில் வெற்றிபெற்றால் மாத்திரமே தென்னாபிரிக்க அணியால் 97 புள்ளிகளை பிடித்து நேரடியாக தகுதிபெறமுடியும். அதேநேரம் அயர்லாந்து அணியானது பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியில் தோல்வியடையவேண்டும்.

இதில் தென்னாபிரிக்க அணி ஒரு போட்டியிலும், அயர்லாந்து அணி ஒரு போட்டியிலும் தோல்வியடைந்து இலங்கை அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றால் இலங்கை அணிக்கு நேரடியாக தகுதிபெறுவதற்கான வாய்ப்புள்ளது.

இவ்வாறான நிலையில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளின் வாய்ப்புகளை பறிப்பதற்கு மாத்திரம் அல்லாமல் தங்களுடைய நேரடி தகுதியை உறுதிசெய்யும் வகையில் பலம்பொருந்திய குழாம் ஒன்றை தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மேற்குறித்த வீரர்களை தவிர்த்து தென்னாபிரிக்க அணிக்காக கடந்த காலங்களில் பிரகாசித்துவரும் ரீஷா ஹென்ரிக்ஸ், வெயன் பார்னல், பியோன் போர்ச்சுன், டெப்ரைஷ் சம்ஷி மற்றும் ரஸ்ஸி வென் டர் டசன் ஆகியோரும் இந்த குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

சுற்றுலா நெதர்லாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 31ம்  திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<