நியுசிலாந்தின் 2ஆவது வெற்றிக்கு வழி வகுத்தார் மெக்லனகஹன்

473
நியுசிலாந்தின் 2ஆவது வெற்றிக்கு வழி வகுத்தார் மெக்லனகஹன்

6ஆவது டி20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் சூப்பர் 10 சுற்றில் இன்று நடைபெறும் 2 போட்டிகளில் பிற்பகல் 3 மணிக்கு நடை பெற்ற முதல் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அவுஸ்ரேலியா அணி கேன் விலியம்சன் தலைமையிலான நியுசிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது. போட்டி தர்மசாலா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணித் தலைவர் கேன் விலியம்சன் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தார்.

இன்றைய போட்டியில் விளையாடிய அணி விபரங்கள்

நியுசிலாந்து அணி

மார்டின் கப்டில், கேன் விலியம்சன், கொலின் முன்ரோ, கொரி என்டர்சன், ரொஸ் டெய்லர், க்ராண்ட் எலியட், லூக் ரொஞ்சி, மிச்சல் சாண்ட்னர், எடம் மிலேன்,   மிச்சல் மெக்லனகஹன், இஷ் சோதி

அவுஸ்ரேலியா அணி

உஸ்மான் கவாஜா, ஷேன் வொட்சன், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வொர்னர், க்லென் மெக்ஸ்வல், மிச்சல் மார்ஷ், ஜேம்ஸ் போல்க்னர், பீடர் நெவில் , அஷ்டன் அகர், எடம்  Zசம்பா , நேதன் கோல்ட்டர் நைல்

நடுவர்கள்– மெரைஸ் எரஸ்மஸ் மற்றும் நயிஜல் லோங்

இதன்படி களமிறங்கிய நியுசிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான மார்டின் கப்டில் மற்றும் கேன் விலியம்சன் ஆகியோர் வேகமான மிகச் சிறந்ததோர் ஆரம்பத்தை நியுசிலாந்து அணிக்கு பெற்று கொடுத்தார்கள். முதல் விக்கட்டுக்காக 43 பந்துகளில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து இருந்த நிலையில் மார்டின் கப்டில் 27 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 39 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

அதன் பின் அவர் ஆட்டம் இழந்து அடுத்த ஓவரில் தலைவர் கேன் விளியம்சன் 20 பந்துகளில் 4 பவுண்டரிகள்அடங்கலாக 24 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து கடந்த இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அதிகபடியான ஓட்டங்களைப் பெற்ற கொரி என்டர்சன்  3 ஓட்டங்களோடு ஆட்டம் இழக்க கொலின் முன்ரோ 23 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். அப்போது நியுசிலாந்து அணி 14 ஓவர்கள் முடிவில் 97 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கட்டுகளை இழந்து இருந்தது.

மிகச் சிறப்பாக பந்து வீசிய அவுஸ்ரேலிய அணியின் பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட இடைவேளைகளில் விக்கட்டுகளைக் கைப்பற்றி நியுசிலாந்து அணியின் ஓட்டங்களைக் கட்டுப்படுத்தினர். இறுதியில் நியுசிலாந்து அணி நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகளை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது. நியுசிலாந்து அணி சார்பாக மார்டின் கப்டிலை தவிர இறுதி நேரத்தில் துடுப்பாட வந்த க்ராண்ட் எலியட் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் அடங்கலாக 27 ஓட்டங்களைப் பெற்றார். அவுஸ்ரேலியா அணியின் பந்து வீச்சில் சுழல்பந்து வீச்சாளர் க்லென் மெக்ஸ்வல் மற்றும் வேகபந்து வீச்சாளர் ஜேம்ஸ் போல்க்னர் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளைக் கைப்பற்ற சகலதுறை வீரர் ஷேன் வொட்சன் மற்றும் மிச்சல் மார்ஷ் ஆகியோர் தலா 1 விக்கட்டுகளைத் தம்மிடையே பங்குபோட்டனர்.

இவர்களது ஆட்டத்தைத் தொடர்ந்து 143 என்ற இலக்கை நோக்கி அவுஸ்ரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான உஸ்மான் கவாஜா மற்றும் ஷேன் வொட்சன் ஜோடி களமிறங்கியது.

இவர்கள் இருவரும் எதிர்பார்க்கப்பட்டது போல் அவுஸ்ரேலிய அணிக்கு சிறந்த ஒரு ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தனர். அவுஸ்ரேலிய 44 ஓட்டங்களைப் பெற்று இருந்த நிலையில் முதல் விக்கட்டாக ஷேன் வொட்சன் 13 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார்.  அவரைத் தொடர்ந்து களம்  புகுந்த தலைவர் ஸ்டீவ் ஸ்மித்  மற்றும் அதிரடி வீரர் டேவிட் வோர்னர் ஆகியோர் 6 ஓட்டங்களோடு ஆட்டம் இழக்க அவுஸ்ரேலிய அணியின் விக்கட்டுகள் சரிய ஆரம்பித்தன. 10.1 ஓவர்களில் 66 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகள் என்ற நிலையில் இருக்கும் போது ஆடுகளம் வந்த க்லென் மெக்ஸ்வல் போட்டியின் விதியை அவுஸ்ரேலியா  அணிப்  பக்கம் மாற்றுவார் என்று எதிர் பார்க்கப்பட்டாலும் அவர் 22 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். அவரைத் தொடந்து சகல துறை வீரர் மிச்சல் மார்ஸ் 24 ஓட்டங்களோடு ஆட்டம் இழக்க அவுஸ்ரேலிய அணியின் வெற்றிக்  கனவுகள் நியுசிலாந்து பக்கம் திரும்பியது.  இறுதியில் அடுத்து அடுத்து விக்கட்டுகள் சரிய 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது அவுஸ்ரேலியா அணி. அவுஸ்ரேலியா அணி சார்பாக அதிக பட்ச ஓட்டங்களாக உஸ்மான் கவாஜா 27 பந்துகளில் 6 பவுண்டரிகள்  அடங்கலாக  38 ஓட்டங்களைப் பெற்றார். நியுசிலாந்து அணியின் பந்து வீச்சில் மிச்சல் மெக்லனகஹன் 3 ஓவர்கள் பந்து வீசி 17 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளைக்  கைப்பற்ற மிச்சல் சாண்ட்னர்  மற்றும் கொரி என்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும் கைபற்றினர். அவுஸ்ரேலிய அணியின் ஓட்டங்களைக் கட்டுபடுத்திய இஷ் சோதி 4 ஓவர்கள் பந்து வீசி 14 ஓட்டங்களைக் கொடுத்து முக்கியமானதோர் விக்கட்டான க்லென் மெக்ஸ்வலின் விக்கட்டைக் கைபற்றினார்.

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக சிறப்பாகப் பந்து வீசி 3 விக்கட்டுகளை சரித்த மிச்சல் மெக்லனகஹன் தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் நியுசிலாந்து அணி குழு இரண்டில் 4 புள்ளிகளோடு முதலாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.