நிமாலியின் தேசிய சாதனை முறையானது : இலங்கை மெய்வல்லுனர் சங்கம் அறிவிப்பு

309
Nimali’s 800m(1)

அண்மைக் காலங்களில் நாட்டில் அதிகளவாக பேசப்படும் ஒரு விடயம் குறித்து தங்களுடைய நிலைப்பாட்டை ஊடகவியலாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கில் இலங்கை மெய்வல்லுனர் சங்கம் விஷேட ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்தது.

அண்மையில் இடம்பெற்று முடிந்த 42வது தேசிய விளையாட்டு விழாவில், மகளிர் பிரிவு 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் நிமாலி லியனாராச்சி 2:3.5 வினாடியில் போட்டித் தூரத்தை ஓடி புதிய தேசிய சாதனையை ஏற்படுத்தியிருந்தார். எனினும் அவரால் முறியடிக்கப்பட்ட தேசிய சாதனை முறையற்றது என்ற பிழையான கருத்துகள் தற்பொழுது நிலவி வருகின்றன. ஒரு சில ஊடக நிறுவனங்கள், முன்னாள் மெய்வல்லுனர் வீரர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் மத்தியில் இந்தக் குற்றச்சாட்டு நிலவுகின்றது. குறித்த விளையாட்டு விழாவின்போது, நாட்டில் இருந்த சர்வதேச தரத்துக்குரிய ஒரேயொரு இலத்திரனியல் தொழில்நுட்ப நேரக்கணிப்பு கருவி பழுத்தடைந்திருந்தது. இதனால் இப்போட்டியில் பழைய முறைப்படியே (Hand Timing) நேரம் கணிக்கப்பட்டது. அதுவே குறித்த சாதனையை ஏற்றுக்கொள்ள முடியாமைக்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை மெய்வல்லுனர் சங்கத் (AASL) தலைவர் சுகத் திலக்கரத்ன கருத்து தெரிவிக்கையில், ” 42வது தேசிய விளையாட்டு விழாவில், 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் 2:3.5 வினாடிகளில் போட்டித் தூரத்தை ஒடி புதிய தேசிய சாதனை ஏற்படுத்தப்பட்டது குறித்து சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டிய தேவை எமக்கு உள்ளது.

இது குறித்து பல்வேறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டாலும், இலங்கை மெய்வல்லுனர் சங்கம் (AASL) என்ற ரீதியில் நாங்கள் இந்த சாதனையை புதிய தேசிய சாதனையாக ஏற்றுக்கொள்கிறோம். ஒரு சிலர் இதனை தேசிய சாதனையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்கின்றனர்.

அப்படி கூறும் தரப்பினர் விளையாட்டு துறையை பின்பற்றுபவர்கள் இல்லை, மாறாக அவர்கள் பொது மக்களை தவறான செய்திகளால் வழிநடத்துகிறவர்கள். அதனால், இலங்கை மெய்வல்லுனர் சங்கம் (AASL)  சார்பாக பிழைகளை தெளிவு படுத்துவது எமது கடமை” என்று தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து அவர், பிரபல தொழில்நுட்ப இயக்குனர் திரு. PHD வைத்தியதிலக்கவை, “ஏன் இந்த சாதனையை இலங்கை மெய்வல்லுனர் சங்கம் சார்பாக ஏற்றுக் கொண்டோம்” என்ற காரணத்தை தெளிவுபடுத்துவதற்காக அழைத்தார்.

திரு. PHD வைத்தியதிலக்க, 1995ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் விரிவுரையாளருக்கான சர்வதேச அங்கீகாரம் பெற்றவராவார். அதேபோன்று, 2007ஆம் அண்டு முதல் சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் சிறப்பு விரிவுரையாளராகக் கடமையாற்றி வரும் இவர், உலகில் உள்ள மதிக்கத்தக்க சிரேஷ்ட நிபுணர்கள் ஒன்பது பேரில் ஒருவர் என்ற கௌரவத்தையும் பெற்றுள்ளார்.

மேலும் இவர், 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் 2008ஆம் ஆண்டு பரா ஒலிம்பிக் என்பவற்றில் அதிகாரப்பூர்வ சர்வதேச தொழில்நுட்ப அதிகாரியாக செயல்பட்டார். ஒலிம்பிக், பரா ஒலிம்பிக் மற்றும் சர்வதேச முதுநிலைப் போட்டி ஆகிய மூன்றுக்கும் அதிகாரப்பூர்வ தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றிய ஒரே ஒரு நபர் இவராவார்.

திரு. PHD வைத்தியதிலக்க உரையாற்றிய போது, ”பலரது கருத்திற்கும் அமைய நானே முதலில் குற்றஞ்சாட்டப்பட்டவர் என்ற வகையில், எல்லாவகையான சந்தேகங்களுக்கும் பதில் கூற வேண்டிய தார்மிக பொறுப்பை நான் கொண்டுள்ளேன்.

42வது தேசிய விளையாட்டு விழா, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெறுவதற்கு முன்பே இலத்திரனியல் தொழில்நுட்ப நேரக்கணிப்பு கருவி செயலிழந்திருந்தமை யாவரும் அறிந்ததே. நிமாலி லியனாராச்சி 800 மீட்டர் ஓட்டத்தை 2:3.5 வினாடிகளில் ஓடி முடித்து ஏற்படுத்திய புதிய சாதனையை தேசிய ரீதியில் ஏற்றுக்கொள்வது குறித்து வாத பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் இவ்வேளை, இவ்விளையாட்டு விழாவின் தலைமை தொழில்நுட்ப இயக்குநர் என்ற ரீதியில் இறுதி தீர்வாக இச்சாதனையை உறுதிப்படுத்தி ஏற்றுக்கொள்வதை பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நான் மெய்வல்லுனர் போட்டிகள் குறித்த  சட்டங்களை நன்கு அறிந்துள்ளேன். சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தொலைகாட்சி நேர்க்காணல் ஒன்றின் போது உத்தியோகபூர்வ தொழில்நுட்ப அதிகாரி ஒருவர், சர்வதேச மெய்வல்லுனர் சங்க மற்றும் மெய்வல்லுனர் சம்மேளனத்தின் (IAAF) 2016/17 தொழில்நுட்ப விதிமுறை புத்தகத்தை மேற்கோள் காட்டி, விதிமுறை இலக்கம் 261 இற்கமைய 100 மீட்டர் போட்டிகளிலுருந்து 800 மீட்டர் போட்டிகளுடன்  4X100, 4X200 & 4X400 அஞ்சல் ஓட்டப் போட்டிகள் வரை கட்டாயமாக இலத்திரனியல் தொழில்நுட்ப நேரக்கணிப்பு கருவியால் கணிக்கப்பட்டால் மாத்திரமே, அதில் ஏற்படுத்தப்படும் சாதனைகள் அங்கீகரிக்கப்பட்ட சாதனையாக ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

சர்வதேச மெய்வல்லுனர் சங்கத்தின் (IAAF) 2016/17 தொழில்நுட்ப விதிமுறை புத்தகத்திலிருந்து,

விதிமுறை இலக்கம் 261

உலக சாதனைகளாக அங்கீகரிக்கப்படகூடிய நிகழ்வுகள்

முழுமையான தன்னியக்க இலத்திரனியல் நேரக்கணிப்பு முறை (F.A.T) : 100m, 200m, 400m, 800m, 100m தடைதாண்டல், 400m தடைதாண்டல், 4×100m அஞ்சலோட்டம், 4×200m அஞ்சலோட்டம், 4×400m அஞ்சலோட்டம், தடைகள விளையாட்டுக்கள்

எவ்வாறிருப்பினும், இந்த விதிமுறைகள் யாவும் சர்வதேச சாதனைக்களுக்குரியவை. இவை எதுவும் தேசிய சாதனைகளுக்கு தொடர்புபட்டவை அல்ல. தேசிய போட்டிகளை பொறுத்த மட்டில், நாட்டிலுள்ள வளங்களை கருத்தில் கொண்டு, சில விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டே முடிவுகள் எட்டப்படுகின்றன. அதேபோன்றே, நிகழ்வு நடைபெறும் இடத்தை பொருத்து சில முடிவுகள் எட்டப்படும்.

இந்த ஓட்டப்பந்தயம் புற்தரை தளத்தில் நடைபெற்றது. செயற்கை தளத்தில் ஓடுவதை விட புற்தரை தளத்தில் ஓடுவது கடினமாகும். ஒருசிலர் மைதானத்தின் விசிய காற்று சாதகமாக இருந்தது என்கிறார்கள். அது பொதுவான உணர்வு.

ஆனால் இது குறித்து நன்றாக அறிந்தவர்களுக்கு தெரியும், 100 மீட்டர், 200 மீட்டர் உட்பட  100 மற்றும் 110 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப்பந்தயங்களில் சாதனைகள் படைக்கும் போது மாத்திரமே காற்று ஒரு காரணியாக இருக்க கூடும். 800 மீட்டர் போட்டிகளில் அது சாத்தியமல்ல. ஏனெனில் தடகள பாதையில் சுற்றி ஓடும் பொழுது காற்று வீசும் திசையைப் போலவே காற்றின் எதிர் பக்கமாகவும் ஓடவேண்டியிருக்கும்” என அவர் தெரிவித்தார்.

ஆகவே, எவ்விதமான சந்தேகங்களும் இல்லாமல் நிமாலி லியனாராச்சியின் சாதனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு விழா இயக்குனர் திரு. குலரத்ன, சிரேஷ்ட புள்ளியியல் நிபுணர் மற்றும் தெரிவாளர்களின் தலைவர் திரு. சமன் குமாரவுடனான கலந்துரையாடலின் பின் முடிவு எடுக்கப்பட்டே, நிமாலி லியனாராச்சியின் சாதனை சட்டபூர்வமாக அங்கீகரித்து கைசாத்திடப்பட்டது.

எனினும், ஒருசில முன்னாள் தடகள வீரர்கள் தொலைகாட்சி நேர்காணல்களில் நிமாலி லியனாராச்சியின் சாதனைக்கு வழங்கப்பட்ட விருதுகள் சட்டபூர்வமானவை அல்ல என்று சொல்லித்திரிகின்றனர். இதன் காரணமாகவே, இவற்றிக்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கில் திரு. PHD வைத்தியதிலக்கவின் வழிகாட்டுதலின் படி இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த சாதனை அங்கீகரிக்கப்படாது என்று கூறிய கெளரவ. விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் கருத்து குறித்து இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த PHD வைத்தியதிலக்க, ”அமைச்சருக்கும் பிழையான தகவல்களை வழங்கியுள்ளார்கள். எதை பற்றியும் நாம் கவலைப்படவில்லை, எனினும் கெளரவ. விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர இவற்றை பற்றி விசாரித்து மேலும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று கோரிக்கை விடுத்தால், அதனை நிறைவேற்றி நியாயமான ஒரு பரிசீலனையை மேற்கொள்ள முடியும்.

எனினும், நான் நேரடியாக இது சமந்தமான முடிவு காணும் நோக்கில் சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனதின் உயர் அதிகாரியான ஜோர்ஜ் சல்சிடோவிடம் இது குறித்த விளக்கங்களை மின்னஞ்சல் முலமாக அறிவித்ததன் பலனாக, இந்த முடிவு சரியானது என்றும், அவர்கள் கூட (போர்த்துகல் தடகள சங்கம்) அவர்களின் ஒழுங்குவிதிகளின் கீழ் தமது தேசிய பதிவுகளை கையில் வைத்து பயன்படுத்தும் நேர கணிப்பிட்டின் மூலம் ஏற்றுக்கொள்கிறார் என்றும் அறிவித்துள்ளார்” எனவும் அவர் தெரிவித்தார்.

அதே நேரம், இந்த நாட்டில் இவ்வாறான நிகழ்வுகளை கட்டுப்படுத்தும் விதிமுறைகள் எவையேனும் உங்களிடம் இருக்கின்றதா? என்ற thepapare.com  இன் கேள்விக்கு PHD வைத்தியதிலக்க பதிலளிக்கையில், எங்களுகென்று தனியான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இல்லை. சர்வதேச நாடுகளில் பயன்படுத்தப்படும் அதே விதிமுறைகள் தான் இலங்கையில் பின்பற்றப்படுகின்றன.

மேலும், தான் அதே மின்னஞ்சல் பிரதியை இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து சர்வதேச தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு வழங்கிய போது அவர்களும், தங்கள் நாட்டு விதிமுறைப்படி 400 மீட்டர் ஓட்ட பந்தயங்களுக்கு மேல்பட்ட போட்டிகளில் கை நேரக் கணிப்பீடு ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்தார்கள் என்று மேலும் குறிப்பிட்டார்.

ஹம்பாந்தொட்டையைச் சேர்ந்த நிமாலி லியனாராச்சி, பல குறைபாடுகள் மற்றும் துன்பங்களுக்கு மத்தியில் சிறப்பாக தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். சில ஊடக நிறுவனங்கள் வெறும் சுய விளம்பரத்துக்காக பிழையான செய்திகளை பரப்பி நிமாலியின் கடின உழைப்பை இழிவு படுத்துகின்றன. கடினமான சூழ்நிலையில் 24 வருட சாதனையை முறியடித்த நிமாலி சகல விருதுகளுக்கும் தகுதி உடையவர் என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.