பிரேசில் சர்வதேசக் கிண்ணத்தை கைப்பற்றினார் இலங்கையின் நிலுக கருணாரத்ன

323

இலங்கையின் பூப்பந்தாட்டச் சம்பியன் நிலுக கருணாரத்ன 2017ஆம் ஆண்டிற்கான 32ஆவது பிரேசில் சர்வதேச பூப்பந்தாட்டக் கிண்ணத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சம்பியனாகி, புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

கருணாரத்ன, இத்தொடரின் இறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 56ஆம் நிலை வீரரான வைகர் ஓகாலோவை வீழ்த்தியதன் மூலம் மேற்படி கிண்ணத்தைத் தனதாக்கியுள்ளார்.  

பிரேசில் சர்வதேசக் கிண்ணத் தொடர்சர்வதேச பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் கீழ் நடாத்தப்படுகின்ற சுற்றுப் போட்டிகளில் மிக முக்கியமானதாகும். அதேபோன்று, உலகின் சகல பாகங்களிலிருந்தும் வீரர்களை உள்வாங்கி 32ஆவது வருடமாக இம்முறை இடம்பெற்ற சுற்றுத்தொடராகவும் இருந்தது.

வீண் போன இலங்கை கனிஷ்ட கரப்பந்தாட்ட அணியின் போராட்டம்

ஆசிய கனிஷ்ட கரப்பந்தாட்ட சம்பியன் கிண்ணத் தொடரில் பங்கு கொண்ட இலங்கையின் கரப்பந்தாட்ட கனிஷ்ட அணியினர்…

கருணாரத்ன முதல் சுற்றில் ஐகர் இப்ராகிமிற்கு எதிரான வெற்றியுடன் இந்த சுற்றுத் தொடரை ஆரம்பித்தார். இரண்டாவது சுற்றில் செக் குடியரசினுடைய அடம் மென்டேக்கையும், காலிறுதியில் மக்ஸிம் மொரில்ஸையும் எதிர்கொண்டிருந்தார்.  

அவர் அரையிறுதிக்குள் நுழைவதற்காக எதுவித தடைகளுமின்றி 21-12, 21-19 என்ற இலகுவான நேர் செற் கணக்கில் காலிறுதியில் வெற்றி பெற்றார். அதன்படி, அரையிறுதியில் ஒஸ்ரியாவின் லூக்கா விறொபரை எதிர்கொள்ளத் தயாரானார். அரையிறுதியையும் தனக்கு சாதகமாக்கிய நிலுக 21-18, 21-10 என்ற நேர் செற் கணக்கில் வென்று அசத்தினார்.

கிண்ணத்தை நாட்டிற்கு எடுத்துவர ஒரு வெற்றி மாத்திரம் எஞ்சியிருந்த நிலையில், 32 வயதான நிலுக, உலகின் 56ஆம் நிலை வீரரான பிரேசிலின் வைகர் ஓகாலோவை இறுதி மோதலில் எதிர்கொண்டார்.

முதலாவது செற்றின் ஆரம்பம் முதலே அசத்திய ஓகாலோ, நிலுகவை 9-21 என இலகுவாக வீழ்த்தினார். பின்னர் மீண்டெழுந்த நிலுக எஞ்சியிருந்த இரண்டு செற்களிலும் அபாரமாக ஆடி முறையே 21-14, 21-18 என வெற்றிகொண்டு கிண்ணத்தைத் தனதாக்கி நாட்டைப் பெருமைப்படுத்தினார்.

2013ஆம் ஆண்டிற்குப் பின் சிறந்த தரப்படுத்தல்

இச்சுற்றுத் தொடரின் வெற்றியோடு உலக பூப்பந்தாட்ட தரவரிசையில் ஓர் இடம் முன்னகர்ந்துள்ள நிலுக கருணாரத்ன தற்போது 64ஆவது இடத்தை எட்டிப் பிடித்துள்ளார். வாழ்நாளில் இவருடைய சிறந்த தரப்படுத்தலாக 2013ஆம் ஆண்டில் 52ஆவது இடத்தை இவர் பிடித்திருந்தார். அதற்கு அடுத்த சிறந்த தரப்படுத்தலிலேயே அவர் இப்போது உள்ளார்.

போட்டி முடிவுகளின் சுருக்கம்

சுற்று 1 – நிலுக கருணாரத்ன எதிர் ஐகர் இப்ராகிம் (21-13, 21-11)
சுற்று 2 – நிலுக கருணாரத்ன எதிர் அடம் மேன்டேக் (21-10, 21-10)
காலிறுதி – நிலுக கருணாரத்ன எதிர் மக்ஸிம் மொரில்ஸ் (21-12, 21-19)
அரையிறுதி – நிலுக கருணாரத்ன எதிர் லூக்கா விறோபர் ( 21-18, 21-10)
இறுதிப்போட்டி – நிலுக கருணாரத்ன எதிர் வைகர் ஓகாகாலோ (09-21, 21-14, 21-18)