மும்பை அணியை வெற்றிக்கு ஈட்டிச் சென்றார் பட்டேல்

194
Parthiv Pate
©BCCI

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் 21ஆவது போட்டி நேற்று மொஹாலியில் அமைந்துள்ள பஞ்சாப் கிரிக்கட் சங்க பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டேவிட் மிலர் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொண்டது. இந்தப் போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவர் டேவிட் மிலர் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தார்.

இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகளை இழந்தது 189 ஓட்டங்களைப் பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக பார்த்திவ் பட்டேல் 58 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 81 ஓட்டங்களையும், அம்பாதி ரயிடு 37 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 65 ஓட்டங்களையும், ஜொஸ் பட்லர் 13 பந்துகளில் 24 ஓட்டங்களையும் பெற்றனர். பஞ்சாப் அணியின் சார்பில் பந்து வீச்சில் மொஹித் ஷர்மா 3 விக்கட்டுகளையும், சந்தீப் ஷர்மா, மிச்சல் ஜொன்சன் மற்றும் அக்ஸர் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கட் வீதமும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு 190 என்ற சவாலான வெற்றி இலக்கை நோக்கி  துடுப்பெடுத்தாடிய  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை மட்டுமே பெற்று 25 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பாக க்லென் மெக்ஸ்வல் 39 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 56 ஓட்டங்களையும், ஷோன் மார்ஷ் 34 பந்துகளில் 45 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் ஆட்டம் இழக்காமல் 17 பந்துகளில் 30 ஓட்டங்களையும் பெற்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ராஹ் 3 விக்கட்டுகளை வீழ்த்த, டிம் சவ்தி மற்றும் மிச்சல் மெக்லனகஹன் ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் வீழ்த்தினர். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பார்த்திவ் பட்டேல் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் கிரிக்கட் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்