யுபுன், நிலானி டோக்கியோ ஓலிம்பிக்கிற்கு தகுதி

Tokyo Olympic - 2020

148

இலங்கையின் மெய்வல்லுனர் வீரர்களான யுபுன் அபேகோன் மற்றும் நிலானி ரத்னாயக்க ஆகிய இருவரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பை உறுதிசெய்துள்ளனர். 

கொரோனா வைரஸ் காரணமாக ஒரு வருடத்தால் பிற்போடப்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா இவ்வருட ஜூலை 23ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

டயமண்ட் லீக் பதக்கத்தை மயிரிழையில் தவறவிட்ட யுபுன் அபேகோன்

இதனிடையே, இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு இலங்கை சார்பாக இரண்டு மெய்வல்லுனர் தகுதிபெற்றுள்ளதாக தேசிய ஒலிம்பிக் சங்கம் நேற்று அறிவித்தது

இதில் இத்தாலியில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்ற 100 மீட்டர் ஓட்டப் போட்டியின் தேசிய மற்றும் தெற்காசிய சம்பியனுமான யுபுன் அபேகோன் இம்முறை ஒலிம்பிக்கில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டுள்ளார்

அண்மைக்காலமாக ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற முன்னணி மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குகொண்டு வெற்றிகளையும், சாதனைகளையும் முறியடித்துள்ள 26 வயதான யுபுன், 100 மீட்டர் ஓட்டத்துக்கான சர்வதேச தரவரிசையில் 49ஆவது இடத்தில் உள்ளார்.

முன்னதாக, இத்தாலியில் கடந்த மே மாதம் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் இவர் 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 10.15 செக்கன்களில் ஓடிமுடித்து புதிய தேசிய மற்றும் தெற்காசிய சாதனைகளை முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல, ஜேர்மனியில் கடந்த மே மாதம் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 10.09 செக்கன்களில் நிறைவு செய்து இலங்கையின் மின்னல் வேக வீரராக அவர் முத்திரை பதித்தார்

ஒலிம்பிக் வாய்ப்புக்காக காத்திருக்கும் இலங்கை மெய்வல்லுனர்கள்

அத்துடன், இறுதியாக கடந்த மாதம் இத்தாலியின் நடைபெற்ற டயமண்ட் லீக் மெய்வல்லுனர் தொடரில் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் நான்காவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்

இதன்படி, ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் 25 வருடங்களுக்குப் பிறகு 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுக்கொண்டார்.

இறுதியாக 1996 அட்லன்டா ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் சின்தக சொய்ஸா 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கையைப் பிரநிதிதித்துவப்படுத்தி போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பெண்களுக்கான 3,000 மீட்டர் தடைதாண்டல்  ஓட்டப் போட்டியில் ஒலிம்பிக் பங்கீட்டு முறைக்கான பட்டியலில் முதல் 45 பேரில் கடைசி இடத்தில் இலங்கை வீராங்கனை நிலானி ரத்னாயக்க இடம்பெற்றுள்ளார்.

இதன்காரணமாக இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றும் வாய்ப்பை அவர் உறுதிசெய்துள்ளார்

பெண்களுக்கான அஞ்சலோட்டத்தில் இலங்கை அணி புதிய சாதனை

இதில் இந்தியாவின் பாட்டியாலாவில் நேற்று நடைபெற்ற 60ஆவது இந்திய மாநிலங்களுக்கு இடையிலான தேசிய மெய்வல்லுனர் போட்டியில் பெண்களுக்கான 3,000 மீட்டர் தடைதாண்டல்  ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட அவர், வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

அதேபோல, இறுதியாக கத்தாரின் தோஹாவில் 2019இல் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் 3000 மீட்டர் தடைதாண்டி ஓட்டப் போட்டியின்போது கடைசி தடையைத் தாண்டும்போது தடுக்கி விழுந்ததால் வெண்கலப் பதக்கத்தை பெறும் வாய்ப்பை நிலானி ரத்னாயக்க தவறவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இதுவரை ஏழு வீரர்கள் தகுதிபெற்றுள்ளனர்

குதிரைச் சவாரி வீராங்கனை மெதில்டா கார்ல்சன், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்கா கிஹானி, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை, டெஹானி எகொடவெல, பெட்மிண்டன் வீரர் நிலூக கருணாரத்ன மற்றும் ஜூடோ வீரர் சாமர நுவன் தர்மவர்தன ஆகியோரே இவ்வாறு தகுதிபெற்றுக்கொண்டனர்.  

இதனிடையே, நீச்சல் வீரர்களான மெத்யூ அபேசிங்க மற்றும் அனிக்கா கபூர் ஆகிய இருவரினதும் பெயர்களை ஒலிம்பிக் போட்டிக்கு பரிந்துரைக்க தேசிய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனினும், சர்வதேச நீர்நிலை விளையாட்டுத்துறை சம்மேளனம் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கு தகுதிபெற்ற வீரர்களுக்கான உலக தரவரிசையை நாளை வெளியிடவுள்ளது. இதன்பிறகு தான் இலங்கையின் நீச்சல் வீரர்களின் ஒலிம்பிக் பங்குபற்றல் உறுதிசெய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க…