பிரான்ஸ் கால்பந்து லீக்கின் சிறந்த வீரராக நெய்மர் தெரிவு

227

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர், கடந்த வருடத்திற்கான பிரான்ஸ் லீக் கால்பந்து தொடரின் சிறந்த வீரருக்கான விருதை முதல் தடவையாகப் பெற்றுக்கொண்டார்.

உலக கால்பந்து நட்சத்திரங்களில் முன்னிலையில் உள்ள வீரர்களுள் ஒருவரான நெய்மர் தற்போது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகின்றார். எனினும், கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக அவர் கடந்த பெப்ரவரி மாதம் முதல் எந்தவொரு போட்டிகளிலும் விளையாடவில்லை.

காயத்திலிருந்து மீண்டு வரும் நெய்மார் பிரேசில் உலகக் கிண்ண குழாமில்

இந்நிலையில், பாரிஸில் நேற்று முன்தினம் (13) பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில் கடந்த பருவகாலத்தில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களை கௌரவிக்கும் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் வருடத்தின் சிறந்த வீரருக்கான விருதுக்காக அறிவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் நெய்மருடன், சக வீரர்களான எடின்சன் கவானி மற்றும் கைலியன் ம்பாப்போ ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

எனினும், பிரெஞ்சு கால்பந்து லீக் – 1 போட்டித் தொடரின் இவ்வருடத்திற்கான சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை நெய்மர் தட்டிச் சென்றார்.

இவ்விருதினைப் பெற்றுக்கொண்ட பிறகு ஊடகங்களுக்கு நெய்மர் கருத்து வெளியிடுகையில், ”காயத்தில் இருந்து தற்போது மீண்டு வருகிறேன். அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பிரேசில் அணிக்காக மீண்டும் எனது பங்களிப்பை வழங்க ஆர்வமாக உள்ளேன்.

  • PHOTO COURTESY PSG OFFICIAL TWITTER

அத்துடன், தற்போது நான் விளையாடி வருகின்ற பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்துடன் தொடர்ந்து விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், அவ்வணியிலிருந்து விலகுவதற்கு எந்தவொரு எண்ணமும் கிடையாது” எனவும் தெரிவித்தார்.

கடந்த பருவகாலத்தில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக 20 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள நெய்மர், 19 கோல்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

உலகக் கிண்ணத்தை கண்ணீரோடு மெருகேற்றும் இத்தாலி

இந்நிலையில், வலது கால் முறிவால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கடந்த 3 மாதங்களாக ஓய்வில் இருந்த நெய்மர், தற்போது பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார். எனவே அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணத்திற்கு முன் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக ஒரு சில போட்டிகளில் அவர் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, பிரெஞ்சு கால்பந்து லீக் – 1 போட்டித் தொடரின் சிறந்த வீரர்களுக்கான விருதுகளில் இரண்டவாது இடத்தை எடின்சன் கவானி பெற்றுக்கொண்டார். அவர் கடந்த பருவத்தில் அவ்வணிக்காக 28 கோல்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இதேநேரம், இந்த பருவகாலத்துடன் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் பயிற்சியாளர் பதவிலியிருந்து விலகவுள்ள அவ்வணியின் பயிற்றுனரான உனை எமரி (Unai Emery), வருடத்தின் சிறந்த பயிற்றுவிப்பாளருக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க