மீண்டும் திசர அதிரடி; இலங்கைக்கு மற்றுமொரு ஏமாற்றம்

1653

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் திசர பெரேரா அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியும், மத்திய வரிசை வீரர்களின் கவனயீன துடுப்பாட்டம் மற்றும் மோசமான பந்துவீச்சாலும் இலங்கை அணி 115 ஓட்டங்களால் தோல்வியடைந்து, தொடரை 3-0 என இழந்துள்ளது.

ஒருநாள் அரங்கில் வரலாறு படைத்த திசர பெரேராவின் சாதனைத் துளிகள்

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது..

ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு போட்டிகளையும் நியூசிலாந்து அணி வெற்றி கொண்டிருந்த நிலையில், தொடரின் இறுதி ஒருநாள் போட்டியான இன்றைய போட்டியில் இலங்கை அணி சில மாற்றங்களை செய்திருந்தது. தினேஷ் சந்திமால், சீக்குகே பிரசன்ன மற்றும் அசேல குனரத்ன ஆகியோர் நீக்கப்பட்டு, தனன்ஜய டி சில்வா, துஷ்மன்த சமீர மற்றும் தசுன் சானக ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை அணி  

நிரோஷன் திக்வெல்ல, தனன்ஜய டி சில்வா, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், தசுன் ஷானக்க, தனுஷ்க குணதிலக்க, திசர பெரேரா, துஷ்மன்த சமீர, லசித் மாலிங்க (அணித்தலைவர்), நுவான் பிரதீப், லக்ஷான் சந்தகன்

நியூசிலாந்து அணி  

கேன் வில்லியம்சன் (தலைவர்), மார்ட்டின் குப்டில், கொலின் மன்ரோ, ரொஸ் டெய்லர், ஹென்ரி நிக்கோலஸ், ஜேம்ஸ் நீஷம், டீம் செய்பர்ட், டிம் சௌத்தி, லொக்கி பேர்கசன், மெட்ஹென்ரி, இஸ் சோதி,

நியூசிலாந்து அணி நிர்ணயித்திருந்த 365 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 41.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 249 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

நெல்சனில் உள்ள செக்ஸ்டொன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி ரொஸ் டெய்லர் மற்றும் ஹென்ரி நிக்கோலஸ் ஆகியோரின் அபார சதங்களின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 364 ஓட்டங்களை குவித்தது.

முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி சார்பில் ஓட்டங்களை குவித்திருந்த மார்ட்டின் குப்டில் மற்றும் கொலின் மன்ரோ ஆகியோரின் விக்கெட்டுக்களை லசித் மாலிங்க பெற்று இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். எனினும் போட்டியின் நடுப்பகுதியில் விக்கெட்டுகளை வீழ்த்த தவறுவதினை வழமையாக கொண்டிருந்த இலங்கை அணிக்கு, இம்முறையும் பந்துவீச்சாளர்கள் ஏமாற்றத்தை வழங்கினர்.

>> திசரவின் போராட்டத்திற்கு பின் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறுமா?

குறித்த வாய்ப்பினை பயன்படுத்தி நியூசிலாந்து அணி ஓட்டங்களை குவிக்க, ரொஸ் டெய்லர் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்காக 116 ஓட்டங்களை பகிர்ந்தனர். இதில் 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த கேன் வில்லியம்சன் லக்ஷான் சந்தகனின் பந்துவீச்சில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து களமிறங்கிய ஹென்ரி நிக்கோலஸ், ரொஸ் டெய்லருடன் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் நிதானமாக ஆடிய டெய்லர் தனது 20வது ஒருநாள் சதத்தை கடந்தார். இவருடன் நிக்கோலஸ் அரைச்சதம் கடக்க, இருவரும், 150 ஓட்ட இணைப்பாட்டத்தை தொட்டனர்.

இறுதியில், ரொஸ் டெய்லர் லசித் மாலிங்கவின் பந்துவீச்சில் 137 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, நிக்கோலஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது கன்னி ஒருநாள் சதத்தை பதிவுசெய்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய இவர் 124 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுக்க, நியூசிலாந்து அணி 364 ஓட்டங்களை குவித்தது.

இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, லசித் மாலிங்க மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த போதும், எதிரணிக்காக 93 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். குறிப்பாக இலங்கை அணியின் இறுதி 5 ஓவர்களில் நியூசிலாந்து அணி 69 ஓட்டங்களை விளாசியிருந்தது. இதேவேளை, சற்று நேர்த்தியாக பந்துவீசிய லக்ஷான் சந்தகன் 54 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.

பின்னர், மிகப்பெரிய இலக்கினை நோக்கி துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி, முதல் விக்கெட்டுக்காக சிறந்த இணைப்பாட்டத்துடன் போட்டியை ஆரம்பித்தது. உபாதை காரணமாக போட்டியின் இடையில் வெளியேறியிருந்த தனுஷ்க குணதிலக்க ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்காத நிலையில், தனன்ஜய டி சில்வா அவரது இடத்தில் களமிங்கினார்.

இதன்படி களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 66 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், தனன்ஜய டி சில்வா 34 ஓட்டங்களுடன் டீம் சௌதியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வேகமாக ஓட்டங்களை குவித்த நிரோஷன் டிக்வெல்ல 34 பந்துகளுக்கு 46 ஓட்டங்களை பெற்று, துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

இவர்கள் இரு வரது ஆட்டமிழப்பை தொடர்ந்து குசல் பெரேரா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய   குசல் மெண்டிஸ் ஒரு பந்தினையும் எதிர்கொள்ளமால் ரன்அவுட் மூலம் ஆட்டமிழந்தார். இவரை அடுத்து களமிறங்கிய தசுன் சானகவும் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இலங்கை அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டது.  தொடர்ந்தும் அரைச்சதத்தை நெருங்கிய குசல் பெரேரா 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற 143 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி இக்கட்டான நிலையை அடைந்து.

>> ஒருநாள் அரங்கில் வரலாறு படைத்த திசர பெரேராவின் சாதனைத் துளிகள்

எனினும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் கடந்திருந்த திசர பெரேரா அதிரடியாக துடுப்பெடுத்தாட, உபாதையுடன் களம் நுழைந்த தனுஷ்க குணதிலக்க நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் இணைந்து ஆறாவது விக்கெட்டுக்காக 101 ஓட்டங்களை பகிர்ந்தனர். இதில், 80 ஓட்டங்களை பெற்றிருந்த திசர பெரேரா, மார்ட்டின் குப்டிலின் அற்புதமான பிடியெடுப்பு மூலமாக ஆட்டமிழக்க, நிதானமாக துடுப்பெடுத்தாடி வந்த தனுஷ்க குணதிலக்கவும் 31 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.

இதனையடுத்து துடுப்பெடுத்தாட களமிறங்கிய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் களத்திலிருந்து வெளியேற, இலங்கை அணி 41.4 ஓவர்கள் நிறைவில் 259 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, போட்டியில் 115 ஓட்டங்களால் தோல்வி கண்டது. அத்துடன், இலங்கை அணிக்கு எதிரான தொடரை நியூசிலாந்து அணி 3-0 என கைப்பற்றியது. இந்த போட்டியை பொருத்தவரை நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் லொக்கி பேர்கஸன் 4 விக்கெட்டுகளையும், இஸ் சோதி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதேவேளை இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்கள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், இரண்டு ஒரு போட்டி கொண்ட T20I தொடர் எதிர்வரும் 11ம் திகதி அக்லேண்டில் நடைபெறவுள்ளது.

போட்டி சுருக்கம்