140ஆவது முறையாக இடம்பெற காத்திருக்கும் நீலங்களின் சமர்

119

இலங்கையின் மிகப் பழமைவாய்ந்த பாடசாலை கிரிக்கெட் பெரும் போட்டியான “நீலங்களின் சமர்” இந்த ஆண்டு 140ஆவது முறையாக மார்ச் மாதம் 07ஆம், 08ஆம், 09ஆம் திகதிகளில் கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெறவுள்ளது.  

கிரிக்கெட்டின் பித்துக்காலம் (March Madness) என அழைக்கப்படும் மார்ச் மாதத்தை அலங்கரிக்கும் மிக முக்கிய பெரும் போட்டியான நீலங்களின் சமர், இலங்கையின் பிரபல்யமிக்க பாடசாலைகளான கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் தோமியர் கல்லூரிகள் இடையில், டி.எஸ். சேனநாயக்க நினைவுக்கிண்ணத்திற்காக வருடம்தோறும் இடம்பெற்று வருகின்றது.

Photo Album : Royal vs S. Thomas’ | 140th Battle of the Blues – Press Conference

இம்முறை 140ஆவது முறையாக இடம்பெறும் இந்த நீலங்களின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டி, உலகின் இரண்டாவது பழமைமிக்க கிரிக்கெட் தொடராக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. நீலங்களின் சமரை விட பழமைமிக்கதாக கருதப்படும் அவுஸ்திரேலியாவின் புனித பேதுரு கல்லூரி மற்றும் பிரின்ஸ் கல்லூரி இடையிலான பெரும் கிரிக்கெட் போட்டி, நீலங்களின் சமர் ஆரம்பிக்கப்பட ஒரு வருடத்திற்கு முன்னரே தொடங்கியிருந்தது.

நீலங்களின் சமர் பெரும் போட்டி முதற்தடவையாக 1880ஆம் ஆண்டு காலி முகத்திடத்திடலில் கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் தோமியர் கல்லூரிகள் இடையில் விளையாடப்பட்டிருந்தது. இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க கிரிக்கெட் பெரும் போட்டி விளையாடப்பட்ட இடத்திலேயே தற்போது கொழும்பு தாஜ் சமூத்ரா ஹோட்டல் அமைந்திருக்கின்றது.

இந்த ஆண்டுக்கான நீலங்களின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டி பற்றி விபரிக்கும் ஊடகவியாலளர் சந்திப்பு கடந்த புதன்கிழமை (20) கொழும்பு பண்டாரநாயக்க நினைவு அரங்கில் இடம்பெற்றிருந்தது. இந்த ஊடகவியாலளர் சந்திப்பில் கொழும்பு றோயல் கல்லூரி அதிபர் B.A. அபேயரத்ன, புனித தோமியர் கல்லூரி அதிபர் அருட்தந்தை மார்க் பில்லிமோரியா மற்றும் போட்டித் தொடருக்கான பிரதான அனுசரணையாளர்களான டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் குழு அதிகாரி திருமதி அமலி நாணயக்கார மற்றும் ஏனைய அனுசரணையாளர்கள், பாடசாலை கிரிக்கெட் அணி வீரர்கள், ஆசிரியர்கள், சிரேஷ்ட ஊடகவியாலளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதல் நாளில் பந்துவீச்சில் ஜொலித்த இலங்கை அணிக்கு துடுப்பாட்டத்தில் நெருக்கடி

போர்ட் எலிசபெத் நகரில் இன்று (21) ஆரம்பமான….

இதுவரையில் நடைபெற்று முடிந்திருக்கும் கிரிக்கெட் பெரும் போட்டிகளில் கொழும்பு றோயல் கல்லூரி அணி 35 தடவைகள் வெற்றி பெற்றிருப்பதோடு, புனித தோமியர் கல்லூரி 34 தடவைகள் வெற்றி பெற்றிருக்கின்றது.

இதேவேளை, இந்த பெரும் போட்டிகளில் பங்குபற்றுகின்ற இரண்டு பாடசாலைகளும் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களோடு மட்டுமில்லாது இந்த நாட்டின் முக்கிய தலைவர்களையும் உருவாக்கியிருக்கின்றன. அப்படியான தலைவர்களாக புனித தோமியர் கல்லூரி இலங்கையின் தந்தை என அழைக்கப்படும் டி.எஸ். சேனநாயக்க, அவரின் புதல்வரான டட்லி சேனநாயக்க போன்றோரை உருவாக்கியிருந்ததனையும், கொழும்பு றோயல் கல்லூரி இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி H.E.J.R. ஜயவர்தன மற்றும் மாண்புமிகு சேர். ஜெனரல் ஜோன் கொத்தலாவல போன்றோரினை தந்திருந்ததனையும் குறிப்பிடலாம்.

இந்த ஆண்டுக்கான நீலங்களின் சமர் பெரும் கிரிக்கெட் போட்டியில் புனித தோமியர் கல்லூரி அணி இடதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சித்தார ஹப்புகின்னவினால் வழிநடாத்தப்பட, கொழும்பு றோயல் கல்லூரியின் அணித்தலைவர் பொறுப்பை விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான கவிந்து மாதரசிங்க எடுத்துக் கொள்கின்றார்.

இலங்கையின் மிகப் பழமைவாய்ந்த இந்த கிரிக்கெட் பெரும் போட்டிக்கு 2015ஆம் ஆண்டிலிருந்து, இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான டயலொக் ஆசியாட்டா அனுசரணை வழங்கி வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இலங்கை கிரிக்கெட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தலைவராக ….

டயலொக் ஆசியாட்டா நிறுவனம் இந்த கிரிக்கெட் பெரும் போட்டியில் பெறப்படுகின்ற ஒவ்வொரு ஓட்டங்களுக்கும் ரூபா. 1,000 பணத்தையும், ஒவ்வொரு விக்கெட்டுக்கும் ரூபா. 10,000 பணத்தையும் வழங்குகின்றது. இந்த கிரிக்கெட் பெரும் போட்டி மூலம் சேகரிக்கப்படும் பணம் நல்ல காரியங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கடந்த ஆண்டு இந்த கிரிக்கெட் பெரும் போட்டியின் போது ரூபா. 1,018,000 சேகரிக்கப்பட்டிருந்தது.

இந்த கிரிக்கெட் பெரும் போட்டியின் மூலம் சேகரிக்கப்பட்டிருந்த பணம் மூலம் ரூபா. 3,977,000 வரை பெறுமதியான கிரிக்கெட் உபகரணங்கள் கடந்த ஆண்டுகளில் தேவையுடைய 14 பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

நீலங்களின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டியில் சர்வதேச போட்டிகள் போன்று, தொலைக்காட்சி உதவி மூலம் போட்டித்தீர்ப்புக்கள் வழங்கும் முறை அமுலில் காணப்படுகின்றது சிறப்பம்சமாகும்.

இந்த ஆண்டுக்கான பெரும் கிரிக்கெட் போட்டியினை ThePapare.com இலும், டயலொக் தொலைக்காட்சி அலைவரிசை 77 இலும்,  MyTV செயலியிலும் கிரிக்கெட் இரசிகர்கள் அனைவருக்கும் நேரலையாக கண்டுகளிக்க முடியுமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.