நியூசிலாந்து அணியின் ஆஸி. சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு

136
@Getty Image

ஒமிக்ரோன் வைரஸ் பரவலையடுத்து நியூசிலாந்து அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் பெப்ரவரி 9 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு T20 போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது.

இதன்படி, முதலாவது ஒருநாள் போட்டி 30 ஆம் திகதி பேர்த்திலும், 2 ஆவது ஒருநாள் போட்டி பெப்ரவரி 2 ஆம் திகதி ஹோபர்ட்டிலும், கடைசி ஒருநாள் போட்டி 5 ஆம் திகதி சிட்னியிலும், T20 போட்டி பெப்ரவரி 8 ஆம் திகதி கென்பராவிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், நியூசிலாந்தில் கடுமையான கொரோனா பாதுகாப்பு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவதாலும் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் மற்றும் T20 போட்டி என்பவற்றை  ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரு நாட்டு கிரிக்கெட் சபைகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை அடுத்து இந்த அறிவிப்பு இன்று (19) வெளியிடப்பட்டது.

இதில் அடுத்த மாதம் நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்யும் தென்னாபிரிக்க அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடர், பெப்ரவரி 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

ஏனவே, அவுஸ்திரேலியாவுக்குச் சென்று நியூசிலாந்து திரும்பும் வீரர்கள் 10 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டால் அவர்களால் தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாது. இந்தக் காரணத்தால் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை நியூசிலாந்து அணி தற்போது ஒத்திவைத்துள்ளது.

எனவே, குறித்த தொடர் எப்போது நடைபெறும் என்ற விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

முன்னதாக கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் அவுஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் விளையாடவிருந்த தொடர்கள் இதுவரை மூன்று தடவைகள் ஒத்திவைக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, சுற்றுலா இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட T20 தொடர் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<