உலக மல்யுத்த சம்பியன்ஷிப்பில் வரலாற்று சாதனை படைத்தார் நெத்மி அஹின்சா

60

ஸ்பெய்னின் பொன்டவேட்ரா நகரில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக கனிஷ்ட மல்யுத்த சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வீராங்கனை நெத்மி அஹின்சா பெர்னாண்டோ வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

உலக மல்யுத்த சம்பியன்ஷிப் வரலாற்றில் இலங்கைக்கு கிடைத்த முதலாவது பதக்கம் இதுவாகும்.

உலக மல்யுத்த சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த உலக கனிஷ்ட மல்யுத்த சம்பியன்ஷிப் போட்டித் தொடர் ஸ்பெயினில் உள்ள பொன்டவேட்ரா நகரில் செப்டம்பர் 2ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை நடைபெற்றது. இம்முறை போட்டித் தொடரில் 100 நாடுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.

இந்த நிலையில், இம்முறை உலக கனிஷ்ட மல்யுத்த சம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ கிராம் எடைப் பிரிவில் களமிறங்கிய நெத்மி அஹிம்சா, கடந்த 6ஆம் திகதி வெண்கலப் பதக்கத்துக்காக நடைபெற்ற போட்டியில் நடுநிலையாளர் வலேரியா மிக்கிட்சிச் என்பவரை 6 – 2 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.

முன்னதாக, தகுதிச் சுற்றில் கஸகஸ்தானின் யெங்கிலிக் கபில்பெக்கை 10-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோற்கடித்த அஹின்சா, காலிறுதிச் சுற்றில் பல்கேரியாவின் நிக்கல் க்ராசிமிரோவாவிடம் க்ருமோவாவை
10 – 0 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தினார்.

>>பொதுநலவாய வேகநகர்வு செஸ் போட்டியில் இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்கள

தொடர்ந்து நடைபெற்ற காலிறுதியில், அவர் ஹங்கேரியின் லிலியானா கபுவாரியை 14-3 என்ற கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார், அங்கு அவர் 2-2 என்ற கணக்கில் சீனாவின் ஜின் ஜாங்கிடம் தோற்று வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு முன்னேறினார்.

இதில் சீன வீராங்கனையுடனான அரையிறுதிச் சுற்றுப் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்த பின்னர் வெற்றியாளரைப் பரிந்துரைப்பதில் கணக்கில் கொள்ளப்படும் நடுவர் புள்ளிகள் வழங்கப்பட்டதன் காரணமாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை நெத்மி இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும், உலகத்தரம் வாய்ந்த மல்யுத்தப் போட்டியில் இலங்கை வீராங்கனை ஒருவர் பெற்ற மிகப் பெரிய வெற்றி இதுவாகும்.

முன்னதாக இவர் 2022இல் நடைபெற்ற பர்மிங்ஹாம் பொதுநலவாய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 57 கிலோ கிராம் எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அரங்கில் அண்மைக்காலமாக ஜொலித்து வருகின்ற இளம் மல்யுத்த வீராங்கனை நெத்மி அஹின்சா, குருநாகல் பன்னல வெல்பல்ல சங்கரத்ன மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது..

இதனிடையே, இம்முறை உலக மல்யுத்த சம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ கிராம் எடைப் பிரிவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிபுனி வாசனா தர்மசேன, ஆரம்ப சுற்றில் தோல்வியைத் தழுவியிருந்தார்.

இதேவேளை, 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக கனிஷ்ட மல்யுத்த சம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்கிய இலங்கை அணியின் பயிற்சியாளராக சுரங்க குமார பணியாற்றியிருந்தார்.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<