சிரேஷ்ட வீராங்கனைகளுக்கான தேசிய வலைப்பந்தாட்ட தொடர் இம்மாதம்

61

2021ஆம் ஆண்டுக்கான சிரேஷ்ட வீராங்கனைகளுக்குரிய தேசிய வலைப்பந்தாட்ட தொடர் இம்மாதம் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் திகன விளையாட்டுத் தொகுதியில் இடம்பெறவிருக்கின்றது.

>>தேசிய கபடியில் அம்பாறை, கிளிநொச்சி அணிகள் சம்பியன்

இந்த வலைப்பந்தாட்டத்தொடர் முன்னதாக 2021ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் ஒழுங்கு செய்யப்பட்ட போதும், கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பல சவால்களைத் தொடர்ந்து தேசிய வலைப்பந்து சம்மேளனத்தினால் (SLNF) மீண்டும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த தொடரில் நாடு பூராகவும் இருந்து 30 வெவ்வேறு அணிகள் பங்கெடுக்கவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதோடு இந்த தேசிய வலைப்பந்தாட்டத் தொடர் இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் பங்கெடுக்கும் இலங்கை வலைப்பந்து அணியின் மேலதிக வீராங்கனைகளை தெரிவு செய்யும் ஒரு களமாகவும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>ஜப்னா வொலிபோல் லீக்கின் சம்பியனாக முடிசூடிய அரியாலை கில்லாடிகள்

கடைசியாக 2018ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்றிருந்த ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில், இலங்கை வலைப்பந்து அணி சம்பியன் பட்டம் வென்றிருந்ததோடு, இந்த ஆண்டிலும் தமது சம்பியன் பட்டத்தினை தொடர்ந்து தக்கவைப்பதற்கு போராடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேநேரம் இலங்கை வலைப்பந்து அணி யசிந்த் விஜேசிங்கவின் தலைமையில் 2022ஆம் ஆண்டுக்கான வலைப்பந்து சம்பியன்ஷிப்பிற்காக பயிற்சிகளை ஏற்கனவே ஆரம்பித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் கடைசியாக 2019ஆம் ஆண்டுக்கான வலைப்பந்து உலகக் கிண்ணத் தொடரில் விளையாடியிருந்த இலங்கை வலைப்பந்து அணி, அதில் 15ஆவது இடத்தினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<