ரோயல் செலன்ஞர்ஸ் அணியுடன் இணைந்த இசுரு உதான

774
Image Courtesy: RCB twitter

இம்முறை இந்தியன்  ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் இலங்கை சார்பாக விளையாடவுள்ள ஒரேயொரு வீரரான இசுரு உதான, முதல்முறையாக ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களூர் அணியுடன் இணைந்துகொண்டு பயிற்சிகளை முன்னெடுத்தார்.

ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பமாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஐ.பி.எல் அணிகளில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு வீரர்களும் இணைந்து வருகின்றனர்.

அத்துடன், எட்டு அணிகளையும் சேர்ந்த வீரர்கள் பயிற்சிகளையும் ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில், இம்முறை ஐ.பி.எல் தொடரில் விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இலங்கை அணியின் சகலதுறை வீரரான இசுரு உதான, டுபாயில் தன்னுடைய 6 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை முடித்துக் கொண்டு நேற்றுமுன்தினம் (07) தன்னுடைய முதலாவது பயிற்சிகளில் பங்கேற்றார்.

ஐ.பி.எல் தொடரில் அண்மைக்காலமாக தொடர்ச்சியான பல தோல்விகளை சந்தித்து வருகின்ற ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களூர் அணியில் புதுமுக வீரராக இடம்பெற்றுள்ள இசுரு உதான, இம்முறை ஐ.பி.எல் தொடரில் சிறப்பான பங்களிப்பை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணிக்காக 30 T20i போட்டிகளில் விளையாடியுள்ள 32 வயதான இசுரு உதான, ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களூர் அணிக்காக 50 இலட்சம் ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

லசித் மாலிங்கவை வெளியேற்றிய மும்பை இந்தியன்ஸ்

இந்த நிலையில், இம்முறை ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, தனிப்பட்ட காரணங்களுக்காக ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகுவதாக கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களூர் அணி, தமது முதல் போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்வரும் 21ஆம் திகதி சந்திக்கவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<