முன்னணி சுழல் பந்துவீச்சாளரை இழக்கும் பங்களாதேஷ்

Sri Lanka tour of Bangladesh 2022

153

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் நயீம் ஹஸன் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சட்டகிரொமில் நேற்று (19) நடைபெற்று முடிந்தது. இந்தப் போட்டியானது வெற்றித்தோல்வியின்றி சமனிலையில் முடிவடைந்தது.

IPL இல் கலக்கும் இலங்கை வீரர்களை பாராட்டும் சமிந்த வாஸ்

குறித்த இந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணிக்காக மிகச்சிறப்பான முறையில், நயீம் ஹஸன் பந்துவீசியிருந்தார். ஒரு கட்டத்தில் இலங்கை அணி விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்காமல் ஆட, நயீம் ஹஸன் இலங்கை அணிக்கு அழுத்தம் கொடுத்தார்.

அதுமாத்திரமின்றி மொத்தமாக 30 ஓவர்கள் பந்துவீசி முதல் இன்னிங்ஸில் 105 ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் ஓவர்கள் வீசியபோதும், விக்கெட்டுகளை வீழ்த்தும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை.

எவ்வாறாயினும் போட்டியின் ஐந்தாவது நாளான நேற்று  தன்னுடைய பந்துவீச்சில், களத்தடுப்பில் ஈடுபட்ட போது கைவிரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக மைதானத்திலிருந்து பாதியில் வெளியேறினார். இதன்பின்னர் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில், அவருடைய நடுவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டாவது போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் கருத்து வெளியிடுகையில், நயீம் ஹஸன் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தயாரில்லை என குறிப்பிட்டுள்ளதுடன், அவரின் கைவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பங்களாதேஷ் அணியை பொருத்தவரை ஏற்கனவே. சொரிபுல் இஸ்லாம் மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவரின் உபாதையுடன், தற்போது நயீம் ஹஸனும் இணைந்துள்ளார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 23ம் திகதி டாக்காவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<