டுபாய் சர்வதேச பாரா மெய்வல்லுனரில் இலங்கைக்கு 4 தங்கங்கள்

Dubai Grand Prix Fazza 2024

95
Dubai Grand Prix Fazza 2024

டுபாயில் நடைபெற்ற FAZZA சர்வதேச பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி 4 தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் என ஒட்டுமொத்தமாக 6 பதக்கங்களை வென்று அசத்தியது.

உலக பாரா மெய்வல்லுனர் கிராண்ட் பிரிக்ஸின் 15வது அத்தியாயமாக FAZZA சர்வதேச பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் கடந்த 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை டுபாயில் நடைபெற்றது. இம்முறை போட்டித் தொடரில் இலங்கை சார்பில் 5 வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இதில் ஆண்களுக்கான F46 பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் பங்குகொண்ட தினேஷ் பிரியந்த 60.27 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இந்தப் போட்டிப் பிரிவில் நடப்பு பாரா ஒலிம்பிக் சம்பியன் மற்றும் உலக சாதனைக்கு சொந்தக்காரர் தினேஷ் பிரியந்த என்பதும் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதனிடையே, ஆண்களுக்கான T44/T45 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட நுவன் இந்திக்க, போட்டித் தூரத்தை 11.67 செக்கன்களில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார். முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற FAZZA சர்வதேச பாரா மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் இவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், ஆண்களுக்கான T42/44/61 பிரிவு நீளம் பாய்தலிலும் பங்குகொண்ட நுவன் இந்திக்க, தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். போட்டியில் அவர் 6.62 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்தார். இம்முறை போட்டித் தொடரில் அவர் வென்ற 2ஆவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

அத்துடன், ஆண்களுக்கான T45/47/62 பிரிவு 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட சமன் சுபசிங்க, 51.12 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்றார்.

இதேவேளை, ஆண்களுக்கான T42/63 பிரிவு 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அனில் பிரசன்ன (13.05 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், புத்திக இந்திரபால (13.15 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர்.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<