இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தம்புள்ள – காலி அணிகளுக்கிடையிலான தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று (04) நிறைவுக்கு வந்தது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்ற இந்தப் போட்டியின் மூன்றாவது நாளான இன்று 116 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், தமது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த தம்புள்ள அணி, மொஹமட் சிராஸின் அபார பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் சகல விக்கெட்டுகளையும் இழந்து 196 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.
அந்த அணிக்காக துடுப்பாட்டத்தில் பலம்சேர்த்த 22 வயது இளம் வீரரான சொனால் தினூஷ, 196 பந்துகளில் 59 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். அதேபோல, பின்வரிசையில் களமிறங்கிய ரனித லியனாரச்சி 45 ஓட்டங்களை எடுத்து வலுச்சேர்த்தார்.
காலி அணியின் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட மொஹமட் சிராஸ் 52 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்த, அசங்க மனோஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இம்முறை தேசிய சுபர் லீக்கில் மொஹமட் சிராஸின் 2ஆவது 5 விக்கெட் குவியல் இதுவாகும். முன்னதாக கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற ஜப்னா அணிக்கெதிரான போட்டியில் 60 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதன்படி, இம்முறை தேசிய சுபர் லீக்கில் 5 போட்டிகளில் ஆடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சிராஸ், அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 3ஆவது இடத்துக்கு முன்னேறினார்.
257 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த காலி அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்று தடுமாறி வருகிறது.
இந்த நிலையில் காலி அணி தோல்வியை தவிர்க்க நான்காவது மற்றும் கடைசி நாளான நாளை (05) எஞ்சிய 5 விக்கெட்டுக்களையும் காத்துக்கொண்டு 165 ஓட்டங்களை பெற வேண்டிய நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது.
கண்டி அணியின் துடுப்பாட்டத்தில் பெதும் குமார 26 ஓட்டங்களையும், துனித் வெல்லாலகே 4 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
நாளை (05) போட்டியின் நான்காவது மற்றும் கடைசி நாளாகும்.