தேசிய விளையாட்டு விழா இரண்டாம் நாளில் புவிதரனுக்கு வெள்ளிப் பதக்கம்

544

பொலன்னறுவை தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்ற 44 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் 2 ஆவது நாளான இன்று (13) போட்டிகளுக்கு சீரற்ற காலநிலையால் தடங்கல் ஏற்பட்டது. இதனையடுத்து இன்று மாலை நடைபெறவிருந்த மைதான மற்றும் சுவட்டு நிகழ்ச்சிகள் அனைத்தையும் நாளை நடத்துவதற்கு போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதன்படி, போட்டிகளின் கடைசி நாளான நாளை (14) 21 போட்டி நிகழ்ச்சிகளுக்கான இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய விளையாட்டு விழா முதல் நாளில் சண்முகேஸ்வரன், ஆஷிக் ஹெரீனாவுக்கு பதக்கம்

இந்த நிலையில், இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட ஏ.புவிதரன் வெள்ளிப் பதக்கத்தையும், கே. நெப்தலி ஜொய்சன் 4 ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

இதில் பாடசாலை மட்டப் போட்டிகளில் அண்மைக்காலமாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஏ.புவிதரன், முதல் தடவையாக தேசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றி வட மாகாணத்துக்கான 2 ஆவது பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்தார்.

எனினும், கோலூன்றிப் பாய்தலில் நடப்புச் சம்பியனான மேல் மாகாணத்தைச் சேர்ந்த இஷார சந்தருவன் 4.80 மீற்றர் உயரம் தாவி தொடர்ந்து ஐந்தாவது தடவையாகவும் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

இந்த நிலையில், இஷாரவுக்கு பலத்த போட்டியைக் கொடுத்திருந்த புவிதரன், மேல் மாகாணத்தைச் சேர்ந்த சன்ன பெர்னாண்டோ மற்றும் வட மாகாணத்தைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான நெப்தலி ஜொய்சன் ஆகிய மூன்று வீரர்களும் 4.50 மீற்றர் உயரங்களை சமமாகத் தாவியிருந்தனர்.

இதன்படி, குறித்த உயரத்தை முதல் முயற்சியில் தாவிய புவிதரனுக்கு வெள்ளிப் பதக்கமும், மூன்றாவது முயற்சியில் தாவிய சன்ன பெர்னாண்டோவுக்கு வெண்கலப் பதக்கமும் வழங்கப்பட்டது.

இதேவேளை, இம்முறை வட மாகாண மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 4.60 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டி சாதனையுடன் புவிரதரன், இறுதியாக கடந்த வாரம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 4.55 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தார்.

இது இவ்வாறிருக்க, முதல் தடவையாக கடந்த மே மாதம் கொழும்பில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவுக்கான வீரர்களைத் தெரிவுசெய்யும் தேசிய மட்ட தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றிய அவர், 4.70 உயரம் தாவி முதலிடத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்துனில், நிமாலிக்கு வெற்றி

மத்திய தூர ஓட்டப் போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தேசிய சம்பியன்களான இந்துனில் ஹேரத் மற்றும் நிமாலி லியனாரச்சி ஆகியோர் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தனர்.

இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான 800 மீற்றரில் பங்குகொண்ட ஊவா மாகாணத்தைச் சேர்ந்த இந்துனில் ஹேரத், போட்டித் தூரத்தை 1 நிமிடமும் 50.60 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 800 மீற்றரில் இந்துனில் ஹேரத் தொடர்ச்சியாகப் பெற்ற 3 ஆவது வெற்றி இதுவாகும்.

இளையோர் ஒலிம்பிக்கில் பதக்க வாய்ப்பை உறுதி செய்த இளம் வீராங்கனை பாரமி வசந்தி

இறுதியாக கடந்த மாதம் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றிய அவர், போட்டித் தூரத்தை ஒரு நிமிடமும் 51.36 செக்கன்களில் ஓடி முடித்து எட்டாவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார்.

இப்போட்டியில் தென் மாகாணத்தைச் சேர்ந்த ஜி. ஆர் சதுரங்க (ஒரு நிமி. 51.23 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், ஊவா மாகாணத்தைச் சேர்ந்த சுபுன் குஷாந்த (ஒரு நிமி. 65 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

அத்துடன், இப்போட்டியில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த சி. அரவிந்தன் (ஒரு நிமி. 54.56 செக்.) 6 ஆவது இடத்தையும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆர். எம்.என் நிப்ராஸ் (ஒரு நிமி. 55.94 செக்.) 7 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

அதேபோன்று பெண்களுக்கான 800 மீற்றரில் பங்குகொண்ட தென் மாகாணத்தைச் சேர்ந்த நிமாலி லியனாரச்சி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். போட்டித் தூரத்தை ஓடி முடிக்க 2 நிமிடமும் 11.52 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் நிமாலி பெற்றுக்கொண்ட 5 ஆவது வெற்றி இதுவாகும். இதற்கு முன் 2013 முதல் 2016 வரை அவர் பெண்களுக்கான 800 மீற்றரில் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கான 800 மீற்றரில் தேசிய சம்பியனும், ஆசிய மெய்வல்லுனர் சம்பியனுமான நிமாலி லியனாரச்சி, கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றியிருந்தார். எனினும், தகுதிச் சுற்றுப் போட்டியில் நான்காவது இடத்தைப் பெற்ற நிமாலிக்கு இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதேநேரம், குறித்த போட்டியில் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த எம். சி தில்ருக்‌ஷி (2 நிமி. 11.56 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும், தென் மாகாணத்தைச் சேர்ந்த ஆர். துலக்‌ஷி (2 நிமி. 11.64 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<