இங்கிலாந்துடனான கடைசி டெஸ்ட்டை தவறவிடும் நசீம் ஷா

97
Naseem Shah ruled out of 3rd Test with shoulder injury

தோள்பட்டை காயம் காரணமாக இங்கிலாந்துடனான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து பாகிஸ்தான் அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷா விலகியுள்ளார்.

சுமார் 17 வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் தொடரொன்றில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக, ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 74 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அபார வெற்றியீட்டி 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எதிர்வரும் 17ஆம் திகதி கராச்சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால், பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வைட் வொஷ் செய்த அணி என்ற வரலாற்று சிறப்புமிக்க பெருமை இங்கிலாந்து அணிக்கு கிடைக்கும்.

இதனிடையே, ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் நசீம் ஷாவுக்கு தோள்பட்டை காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக முல்தானில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை அவர் தவறவிட்டார்.

எவ்வாறாயினும், தோள்பட்டை காயத்துக்குள்ளாகிய நசீம் ஷா, இங்கிலாந்துடனான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன், லாகூரில் உள்ள தேசிய உயர் செயல்திறன் மையத்தில் நசீம் ஷா மறுவாழ்வை ஆரம்பிக்க முன் அவரது காயம் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டு வருதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட நசீம் ஷா, இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 38 விக்கெட்டுகளை விழ்த்தியுள்ளார். அத்துடன், ராவல்பிண்டியில் நடைபெற்ற இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், காயம் காரணமாக இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை தவறவிடும் பாகிஸ்தான் அணியின் 3ஆவது வேகப் பந்துவீச்சாளராக நசீம் ஷா மாறியுள்ளார். முன்னதாக, அந்த அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் சஹீன் அப்ரிடி முழங்கால் காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறினார், அதனையடுத்து வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப் ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது தொடையில் காயம் அடைந்தார். இதனால் டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து அவர் விலகினார்.

இதேவேளை, நசீம் ஷாவுக்கு மாற்றீட்டு வீரராக எந்தவொரு வீரரும் இதுவரை பெயரிடப்படவில்லை. எவ்வாறாயினும், 16 பேர் கொண்ட பாகிஸ்தான் டெஸ்ட் குழாத்தில் புதுமுக வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் வசீம் இடம்பிடித்துள்ளதால் 3ஆவது டெஸ்ட் போட்டியில் பெரும்பாலும் அவருக்கு டெஸ்ட் அறிமுகம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<