துறையப்பா அரங்கில் கிழக்கு வீரர்களை வீழ்த்திய வட மாகாண அணி

870

யாழ்ப்பாணம் துறையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற மாகாண அணிகளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்து சுற்றுத் தொடரின் இரண்டாவது அரையிறுதியின் முதல் கட்டப் போட்டியில் (1st leg) வட மாகாண வீரர்கள் கிழக்கு மாகாணத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளனர்.

இதற்கு முன்னர் இடம்பெற்ற லீக் சுற்றின் நிறைவில் வட மாகாண அணி 7 போட்டிகளில் 3 வெற்றிகள் மற்றும் 4 சமநிலையான முடிவுகளுடன் 13 புள்ளிகளைப் பெற்று தரப்படுத்தலில் இரண்டாவது இடத்தைப் பெற்றது. கிழக்கு மாகாண அணி 7 போட்டிகளில் 2 வெற்றிகள் மற்றும் 5 சமநிலையான முடிவுகளுடன் தரப்படுத்தலில் மூன்றாம் இடத்தை பெற்றது.

இந்த இரண்டு அணிகளும் லீக் சுற்று நிறைவுவரை எந்தவொரு தோல்வியையும் சந்திக்காமல் அரையிறுதிக்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கிழக்கு மாகாண அணியின் பயிற்றுவிப்பாளர் மொஹமட் ரூமி மூலம் இந்தப் போட்டியின் முதல் பாதியிலேயே அணியில் இரண்டு வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டனர்.

எனினும், முதல் பாதியில் வடக்கு வீரர்கள் அதிக ஆதிக்கம் செலுத்திய போதும் எந்தவொரு அணியினராலும் கோல்கள் எதனையும் பெற முடியாமல் போனது.

பின்னர் தொடர்ந்த இரண்டாம் பாதி ஆட்டத்திலும் 70 நிமிடங்கள் வரை கோல்கள் எதுவும் பெறப்படாத நிலையில் ஆட்டத்தின் 75ஆவது நிமிடத்தில் வட மாகாண அணியின் தலைவர் மரியதாஸ் நிதர்சன் மைதானத்தின் மத்தியில் இருந்து எதிரணியின் கோல் திசையை நோக்கி செலுத்திய பந்துப் பரிமாற்றத்தைப் பெற்ற இளம் வீரர் கண்ணன் தேனுஷன் பந்தை முன்னோக்கி எடுத்துச் சென்று கோல் காப்பாளர் முர்ஷிதையும் தாண்டி பந்தை கம்பங்களுக்குள் செலுத்தினார்.

இந்த கோலின்போது கிழக்கு மாகாண பின்கள வீரர்கள் முன்னோக்கி வந்தமை தேனுஷனுக்கு சாதகமாக அமைந்தது.

எனவே, அதன் பின்னர் போட்டி முடிவுவரை கோல்கள் எதுவும் பெறப்படாமையினால், ஆட்ட நிறைவில் வட மாகாண அணி 1-0 என வெற்றி பெற்றது. எனவே, கிழக்கு மாகாணம் இந்த தொடரில் தமது முதல் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட அரையிறுதி, கிழக்கு மாகாண அணியின் சொந்த மைதானமான மட்டக்களப்பு வெபர் அரங்கில் மார்ச் மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ளது.

முழு நேரம்: வடக்கு 1 – 0 கிழக்கு  

கோல் பெற்றவர்கள்

  • வடக்கு மாகாணம் – கண்ணன் தேனுஷன் 75‘

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<