மாற்றத்தை நோக்கி கால்பந்து ஜாம்பவான் ஈ.பி.ஷன்னவின் வாழ்க்கை

525
E.B channa

இலங்கை தேசிய கால்பந்து அணியின் முன்னாள் வீரரும், அணித் தலைவருமான ஈ.பி.ஷன்ன, தற்பொழுது புதைகுழி தோண்டும் தொழிலை செய்து, மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் வாழ்க்கையை கொண்டு செல்வது தொடர்பிலான விவகாரம் அண்மைக்காலமாக ஊடகங்களிலும் சமுக வலைத்தளங்களிலும் அதிகமாகப் பேசப்பட்டு வந்தன.

இந்நிலையில் தற்பொழுது அவரது விடயம் தொடர்பில் ஒரு சிறந்த தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் கால்பந்து ஜாம்பவானாகத் திகழ்ந்த ஷன்ன அன்று முதல் இன்று வரை இலங்கை கால்பந்து விளையாட்டில் அதிகம் பேசப்பட்டு வரும் ஒரு சிறந்த வீரராக இருக்கின்றார்.

1998ஆம் ஆண்டு இலங்கை தேசிய கால்பந்து அணியில் இணைந்த அவர், கடந்த 2014ஆம் ஆண்டு வரை சுமார் 16 வருடங்கள் அவ்வணிக்காக விளையாடியுள்ளார்.

அதேபோன்று 2012ஆம் ஆண்டில் இருந்து அவர் தேசிய அணியின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

குறித்த 14 வருட காலப்பகுதியில் 128 சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ள ஷன்ன 53 கோல்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார். அவர் கடந்த 2014ஆம் ஆண்டு தேசிய அணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

தேசிய அணியின் பல வெற்றிகளுக்கு இவர் முக்கிய காரணமாக இருந்துள்ளார். இது தவிர சர்வதேசப் போட்டிகள் பலவற்றில் சிறந்த வீரராகவும் ஷன்ன தெரிவாகியுள்ளார்.

தொடர்ந்து 14 வருடங்கள் அணியில் இடம்பிடித்திருந்தமை அவரது திறமைக்கு சிறந்த சான்றாக அமைகின்றது.

அதேபோன்று அவர் கழக அணிகளான ரத்னம் மற்றும் நீர்கொழும்பு யூத் அணிகளுக்காவும் நீண்ட காலமாகத் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இறுதியாக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அவர் களுத்துறை புளூஸ்டார் அணிக்காக விளையாடி வருகின்றார்.

எனினும், கால்பந்து ஜாம்பவானாகத் திகழ்ந்த ஷன்னவின் வாழ்க்கை தற்பொழுது முழுமையாக மாற்றம் பெற்றுள்ளது.

இலங்கைக்கும், இலங்கை கால்பந்துக்கும் பல பெருமைகளையும் புகழையும் தேடிக் கொடுத்த அவர், தற்பொழுது காலி தடல்ல கனத்தையில் புதைகுழி தோண்டும் ஒரு சாதாண தொழிலாளியாக மாறியுள்ளார். அதுவும் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையிலேயே அவர் அங்கு பணியாற்றுகின்றார்.

மேலும், தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் ஒரு சிறிய வாடகை அறையிலேயே ஷன்ன வாழ்ந்து வருகின்றார்.

இந்த விடயம் அண்மையில் ஊடகம் ஒன்றின் மூலம் வெளியானதைத் தொடர்ந்து, சமுக வலைத்தளங்களிலும் இது தொடர்பில் பல வித்தியாசமான கருத்துகளும் வாதங்களும் எழுந்தன.

எவ்வாறிருப்பினும் நாளடைவில் இது தேசிய அளவில் கதைக்கப்படும் ஒரு முக்கிய கருப்பொருளாக மாற்றம் பெற்றது. ”16 வருடங்கள் தேசிய அணிக்கு தன்னை அர்ப்பணித்த ஷன்னவின் வாழ்க்கை நிலை தற்பொழுது  ஏன் இவ்வாறு உள்ளது?” என்பதே அனைவரதும் வியப்பிற்குறிய கேள்வியாக இருந்தது.

இந்நிலையில், இறுதியாக இந்த விடயம் விளையாட்டுத் துறை அமைச்சர் வரையில் செல்லவே, தற்பொழுது விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர ஷன்ன விவகாரம் குறித்து கதைத்துள்ளார்.

அண்மையில் ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போது உரையாற்றிய அமைச்சர், ஷன்னவின் விடயத்தில் சிறந்த தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர் தயாசிரி, இதற்கு முன்னர் ஷன்னவின் விடயத்தில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டபோதும், ஏதோ ஒரு காரணத்தினால் ஷன்னவின் வாழ்க்கை நிலை இவ்வாறு மாற்றம் பெற்றிருப்பது கவலையளிப்பதாகவும், இலங்கை கால்பந்து சம்மேளன அதிகாரிகளுடன் கலந்துரையாடி இதற்கு சிறந்த ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஷன்னவிற்கு நிலையான ஒரு தொழிலைப் பெற்றுக் கொடுத்து அவரது பொருளாதார பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை ஏற்படுத்த தான் அவசரமாக நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் அங்கு உறுதியளித்தார்.

எனவே, ஷன்னவின் விவகாரத்தில் அவருக்கு தீர்வொன்று பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் இலங்கையின் கால்பந்து ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் அமைச்சரின் இந்த உறுதிமொழிகள் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும். ஷன்னவின் வாழ்வில் ஒரு விடியல் ஏற்பட நாமும் பிராத்தனை செய்வோம்.

எவ்வாறிருப்பினும், இவ்வாறான சிரேஷ்ட வீரர்களின் அனுபவங்கள் மற்றும் அவர்கள் முகம்கொடுக்கும் சவால்கள் என்பவற்றில் இருந்து, இலங்கையில் தற்பொழுது வளர்ந்து வரும் கால்பந்து வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய எண்ணில் அடங்காத விடயங்கள் இருக்கின்றன. நிச்சயம் அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அவை ஒரு படிப்பினையாய் அமையும் என்பதில் ஐயமில்லை.