தென்னாபிரிக்க தொடரைப் போல உலகக் கிண்ணத்திலும் பிரகாசிப்பேன் – இசுறு உதான

618

இலங்கை அணிக்காக 2012 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளிலும், 2009 ஆம் ஆண்டு டி-20 போட்டிகளிலும் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட 31 வயதான மித வேகப் பந்துவீச்சாளரான இசுறு உதான, அண்மையில் நிறைவுக்கு வந்த தென்னாபிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி-20 போட்டித் தொடரில் இலங்கை அணிக்காக துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் பிரகாசித்திருந்தார்.

குறித்த போட்டித் தொடரில் கடைசி வீரராக ஆடுகளம் நுழைந்து எதிரணி பந்துவீச்சாளர்களை திக்குமுக்காடச் செய்த அவர், தொடர் தோல்விகளால் மனமுடைந்து போன இலங்கை ரசிகர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்து அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தினார்.

ஐசிசியின் வருடாந்த தரவரிசையில் இலங்கைக்கு பாரிய வீழ்ச்சி

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) இன்று (02)…

எனினும், தொடர்ந்து உள்ளூர் மற்றும் சர்வதேச டி-20 போட்டிகளிலும் பங்குபற்றி தனது திறமைகளை வெளிப்படுத்தி வந்த இசுறு உதான நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலங்கை அணியில் இடம்பிடித்திருந்ததுடன், தன்னுடைய ஆற்றலை தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் மற்றும் டி-20 போட்டித் தொடர்களில் வெளிப்படுத்தினார்.

இதன் காரணமாக இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியில் விளையாடுகின்ற வாய்ப்பையும் அவர் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில், எமது இணையத்தளத்துக்கு இசுறு உதான வழங்கிய விசேட நேர்காணலை இங்கு பார்க்கலாம்.

இசுறு உதான என்பவர் சகலதுறை ஆட்டக்காரரா?

புந்துவீசுகின்ற சகலதுறை ஆட்டக்காரர் என்று சொல்லலாம். உண்மையில் என்னிடம் பந்துவீசுகின்ற திறமைதான் அதிகம் உண்டு. அதனால் நான் பந்துவீசுவதற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். ஆனாலும், துடுப்பாட்டத்திலும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும்.

உங்களுடைய பாடசாலை வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்கள்?

எனது ஆரம்பக் கல்வியை பலாங்கொடை ஆனந்த மைத்திரி மத்திய மகா வித்தியாலயத்திலும், சாதாரண தரம் மற்றும் உயர் தரம் ஆகியவைகளை கொழும்பு டீ.எஸ் சேனநாயக்க கல்லூரியிலும் மேற்கொண்டேன். அதிலும் குறிப்பாக நான் 13 வயதிலிருந்து கிரிக்கெட் விளையாடி வருகின்றேன். அதேபோல, இலங்கை 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்காகவும் விளையாடியுள்ளேன்.

சிறுவயது முதல் எந்த விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தீர்கள்?

சிறுவயதில் நான் கிரிக்கெட் விளையாடினாலும், மெய்வல்லுனர் போட்டிகளில் தான் அதிக திறமைகளை வெளிப்படுத்தி வந்தேன். அதிலும் குறிப்பாக நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சலில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தேன். அதன் பிறகு தான் கிரிக்கெட் விளையாட்டில் கவனம் செலுத்தினேன். அதேபோல கால்பந்து விளையாடுவதிலும் அதிக ஆர்வமாக இருந்தேன்.

நீங்கள் எவ்வாறு தேசிய அணியில் இடம்பெற்றீர்கள்?

2009 ஆம் ஆண்டு மாகாண அணிகளுக்கு இடையிலான டி-20 போட்டிகள் நடைபெற்றது. நான் அதில் மஹேல ஜயவர்தன தலைமையிலான வயம்ப அணியில் விளையாடினேன். அந்தத் தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரராக போட்டித் தொடரின் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றுக்கொண்டேன். அங்கு வெளிப்படுத்தியிருந்த திறமைகளை வைத்து தான் எனக்கு தேசிய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அமைச்சர் பாதுகாப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் மூலம் இலங்கை அணிக்கு பாதுகாவல்

இந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்…

நீங்கள் அண்மைக்காலமாக தேசிய அணிக்காக விளையாடாவிட்டாலும், வெளிநாட்டு டி-20 தொடர்களில் விளையாடி வருகின்றீர்கள். அதுபற்றிச் சொல்லுங்கள்?

முதலில் என்னை வெளிநாட்டு டி-20 தொடர்களில் விளையாடுவதற்கு அனுமதி வழங்கிய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறான போட்டித் தொடர்களில் பங்குபற்றுவதன் மூலம் பல அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அதேபோல உலகிலுள்ள பல நட்சத்திர வீர்ரகளும் பங்குபற்றுவதால் நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ளவும் முடியும்.

நீங்கள் ஏன் டி-20 போட்டிக்காக மாத்திரம் விளையாடி வருகின்றீர்கள்?

உண்மையில் டி-20 போட்டிகளில் விளையாடுவதற்கே நான் அதிக விரும்புகிறேன். 2009 ஆம் ஆண்டுதான் நான் தேசிய அணிக்காக முதல் தடவையாக விளையாடியிருந்தேன். அதுவும் டி-20 போட்டிகளில் தான் அறிமுகமானேன். அதன் பிறகு தான் ஒருநாள் போட்டிகளில் விளையாடினேன். எனினும், அப்போதெல்லாம் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த முடியாமல் போனது. அதனால் எனக்கு அணியிலிருந்து வெளியேறுவதற்கு நேரிட்டது. எனினும், அண்மைக்காலமாக நான் டி-20 அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறேன். அதேபோல அண்மையில் நிறைவுக்கு வந்த தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் போட்டியிலும் களமிறங்கினேன்.

கடந்த வருடம் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக்கில் விளையாடியிருந்தீர்கள். அதுபற்றிச் சொல்லுங்கள்?

நான் ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் டி-20 போட்டியில் பென்தர்ஸ் அணிக்காக 08 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன், குறித்த போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரராகவும் இடம்பிடித்தேன். இது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்கமுடியாத சம்பவமாக இருந்தது.

தென்னாபிரிக்கா அணியுடனான தொடரில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு ஆகியவற்றில் பிரகாசித்திருந்தீர்கள். அதுபற்றிச் சொல்லுங்கள்?

பொதுவாக எட்டாவது இலக்க வீரராகக் களமிறங்கினால் கடைசி ஒரு சில ஓவர்களுக்கு மாத்திரமே துடுப்பாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இந்த தொடரில் எமது முன்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். இதனால் எனக்கு அதிக நேரம் ஆடுகளத்தில் இருந்து நிறைய பந்துகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. உண்மையில் உலகின் முன்ணி வேகப் பந்துவீச்சாளர்களைக் கொண்ட ஒரு அணியாக தென்னாபிரிக்கா விளங்குகின்றது. அவர்களது பந்துகளை எதிர்கொள்வது மிகவும் கடினமாகும். ஆனால் அவற்றையெல்லாம் சிறந்த முறையில் எதிர்கொண்டு அணிக்காக ஒட்டங்களைப் பெற்றுக் கொடுத்தேன். உண்மையில் போட்டியின் பிறகுதான் தென்னாபிரிக்க வீரர்களின் பந்துவீச்சு வேகத்தைப் பார்த்தேன் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

எதுஎவ்வாறாயினும், நான் அதிரடியாக விளையாடியிருந்த போதிலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவியமை மிகவும் கவலையளிக்கிறது. உண்மையில் வெற்றி பெறுவதற்காக நாங்கள் ஓர் அணியாக விளையாடுகின்றோம். எனவே  எனது தனிப்பட்ட திறமைகள் மாத்திரம் அணியின் வெற்றிக்கு காரணமாக இருக்காது.

Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 74

நான்கு வருடங்களுக்குப் பிறகு இலங்கை…

உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் குறித்து திருப்தி அடைகிறீர்களா?

உண்மையில் திருப்தி அடைகிறேன். நான் சுமார் 8 வருடங்களாக இலங்கை அணிக்காக விளையாடி வருகின்றேன். இலங்கை அணிக்காக தொடர்ந்து விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், இடைநடுவே ஒருசில போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது. தற்போது எனக்கு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த சந்தர்ப்பத்தை நான் சரியாக பயன்படுத்தியுள்ளேன் என நம்புகிறேன். இதனால் இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளிலும் இலங்கை அணிக்காக விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்.

டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆர்வம் உண்டா?

தற்போது கிடையாது. ஏனெனில் எனது உடம்பில் தற்போது ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான கட்டமைப்பும், விளையாட்டு நுணுக்கமும் தான் உள்ளது. எனவே மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதற்கு முயற்சி செய்து வருகிறேன்.

நீங்கள் ஏன் கையில் கட்டொன்றை (Band) போட்டுக் கொண்டு விளையாடுகின்றீர்கள்?

கிரிக்கெட் விளையாடி எனது வெலிமிட உடைந்து போனது. அதன் பிறகு சத்திரசிகிச்சையொன்றும் செய்து கொண்டேன். இதனால் வெலிமிடவில் உள்ள இரண்டு பகுதிகள் அகற்றப்பட்டன. அதன் பிறகு தான் பாதுகாப்புக்காக குறித்த கையில் மாத்திரம் கட்டொன்றை போட்டுக் கொண்டு விளையாடி வருகின்றேன்.

உங்களது உலகக் கிண்ண ஆயத்தம் குறித்து சொல்லுங்கள்?

உலகக் கிண்ணத்துக்கு மிகவும் சிறந்த முறையில் தயாராகியுள்ளேன். கடந்த சில நாட்களாக இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக பயிற்சிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் உள்ளக வலைப் பயிற்சிகளை மேற்கொண்டோம். எது எவ்வாறாயினும், நாங்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி இங்கிலாந்து நோக்கி பயணமாகவுள்ளோம். அங்கு சென்று விசேட பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

எதிர்பார்க்காத முடிவுகளை காட்டக்கூடிய இலங்கை அணிக்கு ஒற்றுமை தேவை – சமிந்த வாஸ்

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர…

அண்மையில் நிறைவுக்கு வந்த மாகாணங்களுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் நீங்கள் வெளிப்படுத்தியிருந்த திறமை குறித்து திருப்தி அடைகிறீர்களா?

ஆம். அந்த தொடர் முழுவதும் நான் சிறப்பாக விளையாடியிருந்தேன் என நம்புகிறேன். ஆனால் எனது அணிக்கு மூன்றாவது இடத்தையே பெற்றுக் கொள்ள முடிந்தது. எனினும், ஒரு வீரராக நான் வெளிப்படுத்திய திறமைகள் குறித்து உண்மையில் திருப்தியடைகிறேன்.

தென்னாபிரிக்காவில் வெளிப்படுத்தயிருந்த திறமைகளை உலகக் கிண்ணத்திலும் வெளிப்படுத்த முடியும் என நம்புகிறீர்களா?

நான் எப்போதும் எனது தனிப்பட்ட திறமைகளை காட்டிலும் அணியின் வெற்றிக்காகவே அதிக கவனம் செலுத்துவேன். தென்னாபிரிக்கா சுற்றுப்பயணத்தில் என்னால் முடிந்த பங்களிப்பினை அணிக்கு வழங்கியிருந்தேன். அதேபோல, உலகக் கிண்ணத்திலும் நிச்சயம் எனது முழுமையான பங்களிப்பினை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளேன்.

தென்னாபிரிக்காவில் விளையாடிய ஆடுகளத்தைக் காட்டிலும் வித்தியாசமான ஆடுகளங்கள் இங்கிலாந்தில் எங்களுக்கு கிடைக்குமா?

பொதுவாக ஒருநாள் போட்டிகளுக்காக ஒவ்வொரு நாடுகளும் 300 ஓட்டங்களைக் குவிக்கின்ற ஆடுகளங்களைத் தான் தயாரிக்கின்றது. தென்னாபிரிக்காவில் உள்ள காலநிலைக்கு ஏற்ப வேகப் பந்துவீச்சாளருக்கு சாதகமான ஆடுகளங்கள் தான் எமக்கு கிடைக்கும். ஆனால் இங்கிலாந்தில் அவ்வாறு கிடையாது. அங்குள்ள ஆடுகளங்கள் நான் ஏற்கனவே கூறியது போல துடுப்பாட்டத்துக்கு சாதகமாகத் தான் இருக்கும்.

இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியில் வெற்றி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

நாங்கள் இறுதியாக விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் தோல்வியைத் தழுவினோம். எனவே எங்களுக்கு இதைவிட மேலதிகமாக செய்வதற்கு எதுவும் இல்லை. எனினும், இம்முறை உலகக் கிண்ணத்தில் குறைந்தபட்சம் 2 போட்டிகளில் வெற்றிபெற முடிந்தால் எமக்கு ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை கிரிக்கெட் உதவி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில்….

இறுதியாக உங்களுக்கு உதவி செய்தவர்கள் பற்றிச் சொல்லுங்கள்?

எனது குடும்பத்தார் தான் நிறைய உதவிகளைச் செய்திருந்தனர். அதிலும் குறிப்பாக எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கின்ற எனது மனைவிக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், பலாங்கொடை ஆனந்த மைத்திரி மத்திய மகா வித்தியாலயத்தின் பயிற்சியாளராகக் கடமையாற்றிய சுசன்த குலரத்ன மற்றும் கொழும்பு டீ.எஸ் சேனநாயக்க கல்லூரியின் பயிற்சியாளராகக் கடமையாற்றிய சம்பத் பெரேராவுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<