சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மஹீஷ் தீக்ஷன 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில், ஆறு இடங்கள் முன்னேறி 650 புள்ளிகளுடன் ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
>>இலங்கைக்கு எதிராக களமிறங்கவுள்ள தென்னாபிரிக்கா டெஸ்ட் குழாம் அறிவிப்பு<<
அதேநேரம் நியூசிலாந்து தொடரில் விளையாடாத வனிந்து ஹஸரங்க 2 இடங்கள் பின்னடைவை சந்தித்து 18வது இடத்தை பிடித்துள்ளார். ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையை பொருத்தவரை நியூசிலாந்து தொடரில் 143 மற்றும் 74 ஓட்டங்களை பெற்றிருந்த குசல் மெண்டிஸ் 9 இடங்கள் முன்னேறி 26வது இடத்தை பிடித்துள்ளார். அதேநேரம் இரண்டாவது போட்டியில் சதம் விளாசியிருந்த அவிஷ்க பெர்னாண்டோ 5 இடங்கள் முன்னேற்றத்துடன் 62வது இடத்தை பிடித்துள்ளார்.
மஹீஷ் தீக்ஷன பந்தவீச்சாளர்கள் தரவரிசையில் மாத்திரமின்றி சகலதுறை வீரர்கள் வரிசையிலும் முன்னேற்றத்தை கண்டுள்ளார் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது மாத்திரமின்றி 27 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.
குறித்த இந்த பிரகாசிப்பின் காரணமாக 11 இடங்கள் முன்னேறி 25வது இடத்தை தென்னாபிரிக்காவின் ஹெய்டன் மர்க்ரமுடன் பகிர்ந்துள்ளதுடன், ஒருநாள் தொடர்களில் சகலதுறையிலும் பிரகாசித்துவரும் இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க 11 இடங்கள் முன்னேறி 27வது இடத்தை பிடித்துள்ளார்.
ஐசிசியின் ஒருநாள் தரவரிசையை பொருத்தவரை துடுப்பாட்டத்தில் பாபர் அஷாம், பந்துவீச்சில் சஹீன் ஷா அப்ரிடி மற்றும் சகலதுறையில் ஆப்கானிஸ்தான் அணியின் மொஹமட் நபி ஆகியோர் முதலிடத்தை தக்கவைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<