டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இணையும் பங்களாதேஷ் நட்சத்திரம்

Indian Premier League 2025

74
Mustafizur-Rahman

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்க அந்நாட்டு கிரிக்கெட் சபை தடையில்லா சான்றிதழை வழங்கியுள்ளது. இதன் மூலம் அவருக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக கடைசி 3 லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று (17) முதல் மீண்டும் ஆரம்பமாகியது. இதில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதுகின்றன.

இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றத்தால் தத்தமது நாடுகளுக்குத் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்திய வந்தாலும், பெரும்பாலான முன்னணி வீரர்கள் சர்வதேசப் போட்டிகளைக் கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதை தவிர்த்துக் கொண்டனர்.

அந்த வகையில் இம்முறை ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த அஸ்திரேலியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜேக் பிரேசர் மெக்கர்க் தனிப்பட்ட காரணங்களுக்கு ஐபிஎல் தொடரில் எஞ்சியப் போட்டிகளில் இருந்து விலகிக் கொண்டார். இதனால் அவருக்குப் பதிலாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை 6 கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது.

எவ்வாறாயினும், முஸ்தபிசுர் ரஹீமை ஒப்பந்தம் செய்தபோதும், அதற்கான தடையில்லா சான்றிதழுக்கு தம்மை அணுகவில்லை என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்தது. குறிப்பாக, அவருக்கு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தடையில்லா சான்றிதழை வழங்கவும் அந்நாட்டு கிரிக்கெட் சபை மறுப்பு தெரிவித்திருந்தது. இதனால் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாக மாறியது.

வீரர்கள் தமது நாட்டு கிரிக்கெட் சபையின் தடையில்லா சான்றிதழை வழங்கிய பின்னரே ஐ.பி.எல். ஒப்பந்தம் வழங்கப்படும் என்பது வழக்கமாகும். எனினும், அதற்கான கோரிக்கை தமக்கு கிடைக்கவில்லை என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்திருந்தது.

இதற்கிடையே அவர், ஐக்கிய அரபு இராச்சியம் அணிக்கு எதிராக 17ஆம் மற்றும் 19ஆம் ஆகிய தினங்களில் நடைபெறவுள்ள T20i போட்டியில் பங்கேற்பதற்காக அந்நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

எவ்வாறாயினும், ஐபிஎல் நிர்வாகத்துக்கும், பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கும் இடையிலான பேச்சுவார்தையை அடுத்து ஐபிஎல் தொடரில் மே 18 முதல் 24ஆம் திகதி வரை கலந்துகொள்ள முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதன்படி, ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான எதிரான முதல் T20i போட்டியில் இன்று விளையாடும் முஸ்தபிசுர் ரஹ்மான், அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அன்றைய தினம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்தப் போட்டியில் முஸ்தபிசுர் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து டெல்லி அணி தனது கடைசி இரு போட்டிகளில் 21ஆம் திகதி மும்பை இந்தியன்ஸ் அணியுடனும், 24ஆம் திகதி பஞ்சாப் கிங்ஸ் அணியுடனும் மோதுகிறது. இந்த இரண்டு போட்டிகளுக்குப் பிறகு முஸ்தபிசுர் ரஹ்மான் மீண்டும் பாகிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள T20i தொடருக்காக பங்களாதேஷ் அணியுடன் இணைந்து கொள்வார்.

ஐக்கிய அரபு இராச்சியம் அணிக்கு எதிரான T20i தொடரை அடுத்து பங்களாதேஷ் அணியானது பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட T20i தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரின் முதல் T20i போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி பைசலாபாத்தில் நடைபெறுகிறது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<